ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிக்க உரிமை இருக்கிறது என்றால், பதிவிட்ட ட்வீட்டை ஏன் டெலிட் செய்ய வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை தமிழக ஆதினங்கள் கொடுத்த போது அதற்குப் பூஜை செய்து நெடுஞ்சாண்கிடையாக பிரதமர் மோடி விழுந்து வழங்கினார்.
இந்த புகைப்படத்தைத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “மூச்சு இருக்கா? மானம்? ரோஷம்?” என கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து தனது ட்வீட்டை அமைச்சர் மனோ தங்கராஜ் டெலிட் செய்துவிட்டார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 1) நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மனோ தங்கராஜிடம் பிரதமரை விமர்சித்து ட்வீட் போட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “இது அரசியல், நாங்கள் ஊமை போல் இருக்க முடியுமா?. அதுமட்டுமின்றி இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல. ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் என்பது அடிப்படை. எங்களது கருத்துகளைத் தெரிவிக்க அனைத்து உரிமையும் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
அமைச்சரின் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “பிரதமர் குறித்து முகநூலில் தெரிவித்த கருத்தில் தவறில்லை. ஜனநாயக நாட்டில் வாழ்ந்து வருவதால் கருத்து கூறுவது அடிப்படை உரிமை என்கிறார் அமைச்சர்.
அப்படியென்றால் அந்த பதிவை நீக்கியது ஏன்? ஜனநாயக நாட்டில் பிரதமரைத் தரம் தாழ்ந்து ஒரு மாநில அமைச்சர் விமர்சிப்பது ஜனநாயகமா? தமிழகத்தில் முதலமைச்சரைத் தரக்குறைவாக விமர்சித்தால் உடனடியாக கைது செய்கிறதே காவல்துறை? அப்படியென்றால், தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியா
ஜூனியர் ஆசியக்கோப்பை: பைனலில் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா
மேகதாது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதில்!