கள்ளக்குறிச்சி மரணம்… சைலண்ட் மோடில் திரை பிரபலங்கள் : ஜெயக்குமார் கண்டனம்!

Published On:

| By christopher

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பெண்களும் அடங்குவர்.

மேலும் பலர் சேலம், புதுச்சேரி ஜிப்மர் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திரைத்துறை சார்பில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் மட்டுமே அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை. யாரை கண்டு‌ அவர்கள் அஞ்சுகின்றனர்? என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது.

இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை.

நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரை கண்டு‌ அஞ்சுகின்றனர்?

ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி, 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள். அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது.

மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்!” என ஜெயக்குமார் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று” : ஸ்டாலின் வேதனை!

”கள்ளச்சாராய மரணத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்” : பா.ரஞ்சித்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel