கடற்படை தினத்தை ஒட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்நிலையில், சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அங்கு சுமார் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில், 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை பல துண்டுகளாக உடைந்து விழுந்தது. இதற்கு பலத்த காற்றே காரணம் எனக் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை ஓராண்டுக்குள் இடிந்து விழுந்தது பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக சிலையை வடிவமைத்த காண்டிரக்டர் ஜெயதீப் ஆப்தே உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிலை நிறுவப்பட்ட சில மாதங்களிலேயே துருபிடித்து காணப்பட்டுள்ளது. நட்டு போல்டுகளும் கழன்று விழுந்துள்ளன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலையின் மோசமான நிலை குறித்து கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர்கள் அலட்சியம் காட்டியதால், சிலை உடைந்து விழுந்ததாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் ரவீந்தரா சவான் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகளான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், சிலை திறப்புக்கு பிரதமர் மோடியை அழைப்பதில் மட்டுமே மாநில அரசு கவனம் செலுத்தியதாகவும், தரமான பணிகளை மேற்கொள்ளாததே, சிலை உடைந்து விழுந்ததற்கான காரணம் என்றும் குறை கூறியுள்ளது.
சிவசேனா (யுபிடி) கட்சியும், இந்த விவகாரத்தில், மாநில அரசு தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவும், சிலை கட்டுமானம் மற்றும் அமைப்பாளர்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி முடிவு காண வேண்டுமென்று கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஜூனியர் ஆர்டிஸ்ட் அம்மாவை கூட விட்டு வைக்கல : நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் மீது புகார்!
எடப்பாடி நேரில் ஆஜர் : தயாநிதிமாறன் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!