சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?: நிதிஷ் குமார்

அரசியல்

பிகாரில் இன்று சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடைய செய்ய முடியும் என்று முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை முதல்வர் நிதிஷ்குமார் இன்று (ஜனவரி 7) தொடங்கி வைத்தார். இந்த கணக்கெடுப்பு முதல் கட்டமாக இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் கட்ட கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் உள்ள குடும்பங்கள் குறித்த ஒட்டுமொத்த விபரங்கள் சேகரிக்கப்படும்.

இதையடுத்து இரண்டாம் கட்ட பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும். இதில் ஒவ்வொரு வீடு தோறும், குடும்பம் தோறும் சென்று மக்கள் தொகை, சாதிகள், உட்சாதிகள், மதங்கள் மற்றும் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.

இந்த பணிக்காக பிகார் அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மே மாதத்துக்குள் கணக்கெடுப்பை முடிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக பாட்னா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சிங் கூறியுள்ளார்.

மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கிறது. இதில் பட்டியல் சாதி மக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும் என்றாலும் பிற சாதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் பிகாரில் முதல்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி அரசு அலுவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Why caste wise census NitishKumar

பாட்னாவில் கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் நிதீஷ் குமார் பேசுகையில்,

இந்த கணக்கெடுப்பு மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் கிடைக்கும். பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்காக அரசு செயல்பட இது உதவிகரமாக இருக்கும்.

அனைத்து சமூகங்களின் நிதிநிலைமை பற்றிய தெளிவான மதிப்பீட்டை இதன்மூலம் பெற முடியும். அனைத்து சமூகத்தினரின் வளர்ச்சிக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

நாடு முழுவதும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு மத்திய அரசு சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தியது. அந்த கணக்கெடுப்பு சரியாக மேற்கொள்ளப்படவில்லை. மீண்டும் முறையாக கணக்கெடுக்கச் சொன்னோம். ஆனால் அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து இந்த கணக்கெடுப்பை நடத்துவது குறித்து முடிவு செய்தோம். இது தொடர்பாக பிரதமரை சந்திக்க சென்று எங்கள் கோரிக்கையை முன் வைத்தோம்.

ஆனால் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று மத்திய அரசு கூறியது. மாநில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது. எனவே நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துகிறோம்.

கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகளிடம் இதை முறையாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் வெளிமாநிலங்களிலும் வசிக்கின்றனர். எனவே அவர்களது தகவல்களும் சரியாக பதிவு செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்.

ஒரு மாநிலத்தில் வறுமை இருக்கிறது என்றால் அதை ஒழிக்க வேண்டும் அல்லவா?. இந்த கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்ததும் மத்திய அரசுக்கு அதன் தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

பிகார் அரசின் இந்த முயற்சிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. மொத்தம் 12.7 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்படவுள்ளன.

இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் பிகார் மாநில அரசுக்கு எனது பாராட்டுகள்.

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் இரு கட்டங்களாக 45 நாட்கள் நடைபெறவிருக்கின்றன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். சாதி, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த கணக்கெடுப்பில் திரட்டப்படவுள்ளன.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் சாத்தியமற்றவை என்பதை முறியடிக்கப்போகும் இரண்டாவது மாநிலம் பிகார். ஏற்கனவே கர்நாடகம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியம் தான் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை. எனவே, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “அறுபது ஆண்டுகாலமாகச் சமூகநீதி மண், பெரியார் மண், சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி, சமூகநீதிக் காவலர்கள் என்று தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக்கொண்டு,

தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட திராவிடக் கட்சிகள், உண்மையான இடப்பங்கீட்டை நடைமுறைப்படுத்தி அனைத்து மக்களுக்கும் சமமான நீதியை வழங்குவதற்கான குடிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மறுத்து ஏமாற்றி வருகின்றன.

அவ்வாறெல்லாம் வெற்றுக்கூச்சலும், வெளிவேடமும் இடாத பீகார் மண் குடிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

உண்மையான சமூக நீதிக் காவலர் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு மனமார்ந்த பாராட்டுகள் “ என்று கூறியுள்ளார்.

பிரியா

செம்மரக் கடத்தல்: சசிகலா உறவினர் புழலில் அடைப்பு!

ஆசிய திரைப்பட விருது: 6 பிரிவுகளில் பொன்னியின் செல்வன் பரிந்துரை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *