பத்திரிக்கையாளர்கள் குரங்குகளா? அண்ணாமலைக்கு குவியும் கண்டனங்கள்!

அரசியல்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை குரங்கு என திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் வசூல் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

அதற்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்து செய்தியாளர்களுக்கு ஆதரவாக பேசியிருந்தார் அண்ணாமலை.

அவர் பேசுகையில், ”சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்? அப்படி வழக்கு போட வேண்டும் என்றால் என் மீது வழக்கு போடுங்கள்” என கொந்தளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வெளியே வரும் போது, செய்தியாளர்கள் அண்ணாமலை யை சூழ்ந்து கொண்டு பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது ’மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி எல்லாம் சுத்தி சுத்தி வர்ரீங்களே.. ஊர்ல நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் சொல்றதுக்கெல்லாம் நான் பதில் சொல்லனுமா” என பேசியுள்ளார்,

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஊடகங்கள் அண்ணாமலையை புறக்கணிக்குமா?

அமைச்சர் செந்தில் பாலாஜி இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில், ‘ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே’ என்று விமர்சித்திருக்கிறார்.

விசிக துணை பொதுசெயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பதிவில், ‘ஊடகவியலாளர்களை நடத்தும் முறை இதுதானா? இனியாவது ஊடகங்கள் அண்ணாமலையை புறக்கணிக்குமா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அநாகரிகத்தின் உச்சம்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பதிவில், செய்தியாளர்களை ஒருமையில் அழைப்பது, குரங்கு என்று சொல்வதெல்லாம் அநாகரீகத்தின் உச்சம் என்றும், இவர்களுக்கு நாவடக்கம் தேவை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைமையே இப்படி பேசினால், தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ‘நாகரீகம் தவழும் தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்களை கட்சியின் தலைவராக ஆக்கினால் இப்படித்தான் அநாகரீகமாக பேசுவார்கள். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எதை எப்படி செய்யவேண்டுமென்று’ என விமர்சித்துள்ளார்.

அண்ணாமலையின் போக்கு அநாகரீகமானது!

திமுக எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில், ”தமிழகத்தில் அரசியலை புதிய வீழ்ச்சிக்கு கொண்டு செல்கிறார் அண்ணாமலை. பத்திரிகையாளர்கள்/அமைச்சர்களை அவர் பேசும் தரக்குறைவான வார்த்தை வன்மையாக கண்டிக்கத்தக்கது கருத்தியல் வேறுபாடுகள் அரசியல்/விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன ஆனால் தரம் தாழ்ந்து மூன்றாம் நிலை விமர்சனங்கள் அல்ல” என தெரிவித்துள்ளார்.

திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ”ஊடகத்தினரை இழிவுபடுத்தும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் போக்கு அநாகரீகமானது என கூறியுள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் பயன்பாட்டை சிதைத்து சீரழிக்கும் வேலையை பாஜக மேற்கொண்டு வருகிறது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி, ஊடக நண்பர்கள் கவனிக்கவும் என குறிப்பிட்டு அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நாங்கள் யாருக்கும் அடிமையில்லை!

சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மையான பத்திரிகையாளர்கள் அறிவாலயத்திற்கு அடிமைகளும் இல்லை, அவர்கள் கமலாலயக் கூலிகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

கட்சி, ஆட்சி என பத்திரிகையாளர்களை அடையாளப்படுத்தி இழிவுப்படுத்தும் போக்கை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பத்திரிகையாளர்களை கடுமையான வார்த்தைகளால் கோபமாக பேசிய அண்ணாமலை, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

ஜெயப்ரியா

கிரிக்கெட் பெண் வீரர்களுக்கு சம உரிமை: பிசிசிஐ அதிரடி!

பரபரப்பான டி20 போட்டியின் இடையே மலர்ந்த காதல்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *