”முகுந்த் வரதராஜன் ஒரு பிராமணர் என்று காட்டுவதில் உங்களுக்கு என்ன கேடு? யாரை பார்த்து பயப்படுகிறீர்கள்?” என ஒய்.ஜி.மதுவந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று (நவம்பர் 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பிராமண சமூகத்தினரும் பங்கேற்றனர்.
அப்போது பா.ஜ.க, தேசிய செயற்குழு உறுப்பினர் ஒய்.ஜி.மதுவந்தி பேசுகையில், “அமைச்சர் ஒருவர் சனாதனம் ஒழிக என்று தெரிவித்துள்ளார். ஆனால் இன்று வரை அதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை. சனாதனம் ஒழிக என்ற கும்பலுக்கு 2026 தேர்தலில் ஒற்றை விரலால் பதிலடி கொடுப்போம்.
ஒரு படம் எடுத்தால் அதில் ஒருத்தர் ஒரு சமுதாயத்தில் இருந்து வருகிறார் என்றால் அதை அப்படியே சித்தரித்து சொல்ல தைரியம் வேண்டும். அவ்வளவு பெரிய ராணுவ அதிகாரியை பற்றி படம் (அமரன்) எடுக்கிறார்கள். படம் நன்றாக இருக்கிறது. ஆனால் முகுந்த் வரதராஜன் ஒரு பிராமணர் என்று காட்டுவதில் உங்களுக்கு என்ன கேடு? யாரை பார்த்து பயப்படுகிறீர்கள்?
நான் திரைத்துறையில் இருந்து கொண்டே தான் இதை கேட்கிறேன். இதனால் பட வாய்ப்பே வரவில்லை என்றாலும் எனக்கு கவலையில்லை.
மற்ற சமுதாயத்தை பற்றி நேரிடையாக சொல்கிறீர்கள்? பிராமணர் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்? பயத்தை போக்கி தைரியமாக களத்தில் இறங்குங்கள்.
பிராமண சமுதாயம் ஒரு பெரிய சமுதாயம். எல்லாரும் ஒன்று சேர வேண்டும். இந்த சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேச வேண்டியது கிடையாது” என்று பேசினார்.
தொடர்ந்து நடிகை கஸ்தூரி பேசுகையில் “காஷ்மீரில் நடந்தது மட்டும் இனப்படுகொலை கிடையாது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடப்பதும் இனப்படுகொலை தான். ஒருவரின் உணர்வு, அடையாளத்தை அழிப்பதும் இனப்படுகொலை தான்.
ஆளுங்கட்சியினர் கல்யாணம் செய்வதற்கு நாளை பிரமாண பெண்கள் எப்படி கிடைப்பார்கள்? யார் செத்தாலும் கருமாதி பண்ண ஐயர் இருக்கமாட்டோர்களோ என்ற கவலை எழுந்துள்ளது. பிறப்பில் இருந்து இறப்பு வரை முக்கியமான அங்கமாக இருக்க வேண்டியது இந்த குலம்.
வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று கூறுவார்கள், அது வெளிநாட்டவர்களை அல்ல, பிராமணர்களை தான். கடவுள் மறுப்பும், பிராமண எதிர்ப்பும் தான் திராவிட கொள்கைகள். நம்முடைய உரிமைகளை அவர்கள் பறிக்காமல் இருந்தாலே போதும்.
கைபர் கணவாய் வழியாக பலர் வந்துள்ளனர். அதை பற்றி பேசினால் உங்கள் ஓட்டு தான் குறையும்” என கஸ்தூரி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விலை மாற்றமின்றி தங்கம் விற்பனை!
கனடாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!