ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக பா.ரஞ்சித் காட்டமாக பேசினார்.
பகுஜன்சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், நீதி கேட்டும் இயக்குநர் பா.ரஞ்சித் ஏற்பாட்டில் சென்னையில் இன்று (ஜூலை 20) நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், மன்சூர் அலிகான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, காங்கிரஸ் எஸ்.சி/எஸ்.டி தலைவர் ரஞ்சன் குமார், இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுமார் 500 பேர் ரமணா ஹோட்டல் அருகிலிருந்து ராஜரத்தினம் மைதானம் வரை பேரணியாக நடந்து சென்றனர். அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய பா.ரஞ்சித், “ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டவுடன் அவர் ரவுடி என்று சமூக வலைதளங்களில் எழுதினார்கள். அப்படி எழுதியவர்கள் யார்? முற்போக்குவாதிகள்…
அவர் தப்பானவர் என பாஜகவினர் எழுதினார்கள். திமுக ஐடி விங், ஆம்ஸ்ட்ராங்கை தப்பு தப்பாக எழுதியது.
அதிகாரத்துக்கு எதிராக திரள்பவர்களை ரவுடிகள் என்று சொல்வீர்களா? அப்படியானால் நாங்கள் எல்லாம் ரவுடிகள் தான்.
இந்த படுகொலையை எளிதாக டீல் செய்துவிடலாம் என்று காவல்துறை நினைக்க வேண்டாம். அம்பேத்கர் வழியில் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். அயோக்கியர்களை கண்டுபிடிக்காத வகையில் காவல்துறையை சும்மா விடமாட்டோம்.
ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் பவரை காலி செய்வதற்காக பெரிய சூழ்ச்சி நடந்திருக்கிறது. அவரை மீறி சென்னையில் ஒரு விஷயம் நடக்காது. அவர் வன்முறையை நோக்கி செல்லவில்லை.
அவர் இல்லை என ஜாலியாக இருந்துவிடாதீர்கள். இந்த சென்னையில் எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது. 40 சதவிகிதத்துக்கும் மேல் தலித்துகள் வசிக்கிற பகுதி இது. நாங்கள் விழிப்படையும் போது, நாங்கள் சொல்வதை கேட்கும் நிலை வரும்.
இந்து மதத்துக்கு எதிராக தீவிரமாக போராடியவர், பௌத்த மதமாற்றத்தை தனது வாழ்க்கை நெறியாக உயர்த்தியவர். அப்படியிருக்கும் போது இயல்பாகவே நமக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த கோணத்திலும் காவல் துறை வழக்கை விசாரிக்க வேண்டிய கோரிக்கை இருக்கிறது.
நாங்கள் உங்கள் கட்சியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அடிமை கிடையாது. ஒரு மேயர் அம்மா இங்கிருக்கிறார். அவர் திமுகவில் இருப்பதால் மேயர் கிடையாது. இட ஒதுக்கீடு என்ற வார்த்தையால் மேயராக்கப்பட்டிருக்கிறார்.
கயல்விழி செல்வராஜ் ஏன் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருக்கிறீர்கள் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். இதற்கெல்லாம் அம்பேத்கர் வாங்கிக் கொடுத்த இட ஒதுக்கீடுதான் காரணம்.
உங்களுக்கு என்ன பயம்? தலித்துகளுக்கு ஆதரவாக பேசக்கூடாதா? உங்கள் கட்சி உங்களை கட்டுப்படுத்துகிறதா? பிறகு எதற்கு நீங்கள் ரிசர்வேஷனில் நின்றீர்கள்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
எத்தனை காலம் தலித் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் அடிமையாக இருக்க போகிறீர்கள். எப்போது மக்களுக்காக பேச போகிறீர்கள். பேச முடியவில்லை என்றால் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிடுங்கள். திமுக இருந்தாலும், அதிமுக இருந்தாலும் தலித்துகளுக்கு பிரச்சினை என்று குறிப்பிட்ட ரஞ்சித், “இட ஒதுக்கீட்டால் வந்த நீங்கள் நம்முடைய தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட போது வந்து பார்க்க கூட முடியவில்லை என்றால் நீங்கள் அடிமைகள் தானே?
ஆனால் நாங்கள் ஒன்றும் அடிமைகள் இல்லை. எங்களுக்கு பயமில்லை. சட்டத்தின் வழிபடி, வாக்குரிமையின் படி எங்களது வலிமையை உங்களுக்கு உணர்த்துவோம்.
நாம் எதாவது ஒன்று பேசினாலே கதையை கட்டிவிடுவார்கள். நமது அண்ணன்களையே நமக்கு எதிராக நிறுத்துவது என்பதெல்லாம் மிகக் கொடுமை.
திருமாவளவனுக்கு ஒன்று சொல்கிறேன்… ஒரு நாளும் உங்களுக்கு எதிராக நாங்கள் இருக்கமாட்டோம். உங்களுக்கு எதிராக நாங்கள் ஏன் இருக்க வேண்டும். எங்களுடைய குரல் நீங்கள். உங்களை ஒரு நாளும் விட்டுவிட மாட்டோம். உங்கள் கூடவே நிற்போம்.
இங்கிருக்கும் அரசியல் நம்மை பிரித்தாலும் சூழ்ச்சியை செய்கிறது. இன்று இருக்கும் அமைப்புகளில் ஒற்றுமை இல்லை” என்று குறிப்பிட்டார்.
நாங்கள் பாஜகவுக்கு நேர் எதிரானவர்கள் என்று கூறிய ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யஒரு நல்ல இடத்தை உங்களால் உருவாக்கித் தரமுடியவில்லை. பிறகு எதற்கு சமூக நீதி என்று பேசுகிறீர்கள்.
திமுகவுக்கு மட்டும் எதிராக பேசவில்லை. எல்லா கட்சிகளுக்கும் எதிராகத்தான் பேசுகிறோம். எல்லா கட்சிகளுமே எங்களை ஏமாற்றுகிறார்கள்.
எல்லா கட்சிக்கும் தான் ஓட்டுபோட்டோம். எங்களுக்காக என்ன செய்தீர்கள். ஊருக்கு வெளியே ஆம்ஸ்ட்ராங் உடலை புதைப்பதுதான் உங்களது திட்டமா?
இப்போது நாங்கள் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். உங்களால் முடியுமா?
சமூக நீதி பேசும் திமுக அரசால் தலித் மக்களுடைய கோரிக்கையை ஏற்க முடிமா? எங்களுக்கு எந்த கட்சியும் சரியான பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை?” என்று தமிழக அரசியல் கட்சிகள் மீது கடும் குற்றம்சாட்டினார்.
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில் விசிகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, விசிக உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
யுபிஎஸ்சி தலைவர் திடீர் ராஜினாமா : யார் இந்த மனோஜ் சோனி?
“அவனுக்கு நான் அக்கா அல்ல அம்மா” : உருக்கமாக பேசிய தேவயானி… கண்கலங்கிய நகுல்