அதிமுக அறிவிப்பு: அண்ணாமலையின் மௌனம் ஏன்?

அரசியல்

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செப்டம்பர் 18ஆம் தேதி பிற்பகல் அறிவித்தார்.

அவரது அறிவிப்பிற்கு பிறகு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செப்டம்பர் 19ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை எந்த பதிலையும் சொல்லவில்லை.

இந்த நிலையில் பாஜகவின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் நேற்று மாலை வாக்கில் அண்ணாமலையை சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

கூட்டணி பற்றிய பரபரப்பான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிற நிலையில் மாநில அமைப்பு பொதுச்செயலாளரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வந்ததாக கருதப்பட்டது.

ஆனால் இது வழக்கமான சந்திப்பு தான் என்று கேசவ விநாயகன் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு தான் பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு பாஜகவின் ஊடக விவாதங்கள் பங்கேற்பாளர்கள் குழு அறிவிக்கப்பட்டது.

அந்தக் குழுவுக்கு என்று அமைக்கப்பட்ட whatsapp குரூப்பில் கரு. நாகராஜன் ஒரு முக்கியமான பதிவை நேற்று இட்டுள்ளார்.

அதாவது அதிமுக கூட்டணி தொடர்பாகவோ அதிமுக தொடர்பாகவோ பாஜகவின் செய்தி தொடர்பாளர்கள் யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று மாநில தலைவர் உத்தரவிட்டிருப்பதாக அந்த செய்தியில் கரு நாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு முதல் அண்ணாமலை தனது சென்னை பனையூர் வீட்டில் தான் இருக்கிறார்.

அவரை சில முக்கிய நிர்வாகிகள் சந்தித்து இருப்பதாகவும் தெரிகிறது.

தற்போது கூட்டணி கட்சியின் முக்கியமான மறைந்த பிதாமகன் அண்ணாவைப் பற்றி அண்ணாமலை ஏன் கருத்து சொல்ல வேண்டும் என்று மேலிட பொறுப்பாளர் சந்தோஷ் அண்ணாமலையை கடிந்து கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

தனக்கு தோதான ஒரு சூழல் இல்லை என்பதால் தான் அவர் உடனடியாக பத்திரிகையாளர்களை சந்திக்க தயங்குகிறார் என்றும் பாஜகவுக்குள்ளேயே ஒரு பேச்சு இருக்கிறது.

இந்த நிலையில் அண்ணாமலையின் பனையூர் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் திரண்டு வருகிறார்கள்.

வேந்தன்

கனடா பிரதமரின் பகிரங்க குற்றச்சாட்டு: இந்தியா பதிலடி!

5000 இருந்தால் எம்.பி.சி சாதிச்சான்றிதழ்?: ராமதாஸ் குற்றச்சாட்டு!

+1
0
+1
3
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *