கவிக்கோ மன்றத்தில் அண்ணா, கலைஞர் படம் ஏன் இல்லை?: கொளுத்திப் போட்ட கோவி.லெனின்

அரசியல்

சென்னை கவிக்கோ மன்றத்தில் அண்ணா, கலைஞர் படம் ஏன் இல்லை? என்று கோவி.லெனின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிட இயக்க எழுத்தாளரும், திமுக ஐடி விங் ஆலோசகருமான கோவி. லெனின் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

அதில், “கவிக்கோ மன்றம் இலக்கியவாதிகள்-சமூக செயற்பாட்டாளர்களின் சரணாலயம். சென்னை சி.ஐ.டி. காலனியில் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் குறைந்த கட்டணத்தில் நல்ல முறையில் நிகழ்ச்சிகளை நடத்த முடியும். வேறு அரங்குகள் அனுமதிக்க மறுக்கும் நிகழ்வுகளைக்கூட அதன் முக்கியத்துவம் கருதி கவிக்கோ மன்றம் அனுமதித்து, நெருக்கடிகளை சந்தித்ததும் உண்டு.

மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுக்கொரு முறை நடைபெறும் விருது விழாவினை பல முறை இந்த அரங்கில் நடத்தியிருக்கிறோம். வேறு பல நிகழ்வுகளிலும் பங்கேற்றிருக்கிறேன்.

கவிக்கோ மன்றத்தில் தமிழ்ப் படைப்பாளிகள் பலரின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். ஒரு புத்தக விழாவின்போது பத்திரிகையாளர் ஜென்ராம், “கவிஞர் இன்குலாப் படம் எங்கே?” என்று கேட்டார். ‘தலைமறைவாக’ இருந்த இன்குலாப் படத்தை, அவர் கேட்டபிறகே எல்லாருக்கும் தெரியும்படி மாட்டி வைத்தனர்.

அந்த கவிக்கோ மன்றத்தில் கலைஞரின் படம் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருந்தது. அப்போது கலைஞர் உயிருடன் இருந்தார் என்பதால் அவர் படம் மாட்டவில்லை என நினைத்தேன். ஆனால், அறிஞர் அண்ணாவுக்கும் அங்கே இடம் கிடையாது. அதே நேரத்தில் உயிருடன் இருக்கிற சில படைப்பாளிகளின் படங்கள் எப்போதும் இடம்பிடித்திருக்கும்.

கலைஞர் மறைவுக்குப் பிறகு, கவிக்கோ மன்றத்தில் ஒரு நிகழ்வுக்குப் பார்வையாளனாக சென்றேன். அப்போதும் அவர் படம் இடம் பெறவில்லை. அதன்பிறகு, அந்த அரங்கிற்குப் பார்வையாளனாக செல்வதில்லை. நண்பர்கள் நடத்திய விழாக்களில், பங்கேற்பாளராகக் கிடைத்த வாய்ப்புகளையும் அவர்கள் மனம் புண்படாத வகையில், வேறு ஏதேதோ காரணங்கள் சொல்லித் தவிர்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

கொரோனா காலத்தில் பொது நிகழ்வுகள் எதுவுமில்லாததால், கவிக்கோ மன்றம் புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, நேற்றுதான் (மார்ச் 25) அங்கு செல்வதற்கு வாய்ப்பு அமைந்தது. ஏற்கனவே மாட்டப்பட்டிருந்த படங்களுடன் மேலும் பல படங்கள் இணைந்திருந்தன. அவர்களில் இறந்தவர்களும் உண்டு. இருப்பவர்களும் உண்டு. ஆனால், அண்ணாவும் கலைஞரும் இல்லை.

அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை படம் படைப்பாளிகள் நடுவே மாட்டப்பட்டிருந்தது. மிகுந்த மகிழ்ச்சி. நிலவுக்கு இந்திய விண்கலத்தை அனுப்பிய அறிவியல் மேதையான அவர் பெயர் அண்ணாதுரை. அவரது அப்பா பெயர்தான் மயில்சாமி. அண்ணாதுரை என்ற பெயரை அவருக்கு சூட்டியதற்கு காரணம், அறிஞர் அண்ணா மீது அவரது குடும்பத்தினர்- நண்பர்கள் கொண்டிருந்த பேரன்பு. அவரும் பகுத்தறிவு சிந்தனை கொண்ட சாதனைத் தமிழர். மயில்சாமி அண்ணாதுரைக்கு படம் வைக்க முடிந்தவர்களுக்கு அண்ணாவின் படம் வைக்க மனமில்லை.

கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரில் அமைந்திருக்கிறது அரங்கம். “வெகுமானம் ஏதேனும் வேண்டுமா என்று கேட்டால், அப்துல் ரகுமானைத் தருக எனக் கேட்பேன்” என்றவர் கலைஞர். “தமிழில் வசனம் இருந்தது. கவிதை இருந்தது. வசனகவிதை இருந்தது. கவிவசனம் என்கிற புதிய நடையை தன் திரைவசனங்களால் தந்தவர் கலைஞர்” என்றவர் கவிக்கோ அப்துல்ரகுமான். அவர் பெயரில் அமைந்திருக்கும் அரங்கில் கலைஞரின் படம் இல்லை. இதை நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சுட்டிக்காட்டிப் பேசினேன்.

மியூசிக் அகடமியிலோ, நாரத கான சபாவிலோ, அவை போன்ற மற்ற இடங்களிலோ அண்ணா, கலைஞர் படங்களை எதிர்பார்க்க முடியாது. கவிக்கோ மன்றத்திலுமா இந்த நிலை?
நான் பேசியதைக் கேட்டவர்கள் யாரேனும் இதை அரங்கின் உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடும். இதன்பிறகு, அண்ணாவும் கலைஞரும் அங்கே இடம்பெற்றாலும் அது கட்டாயத்தின் பேரில் கிடைத்த இடமாகத்தான் இருக்கும். மனதளவிலான செயல்பாடாக நிச்சயம் இருக்க முடியாது.

அது மட்டுமல்ல, ‘தகைசால் தமிழர்’ அய்யா நல்லகண்ணு உள்ளிட்டோர் படம் உள்ள கவிக்கோ அரங்கில் சில கழிசடைகள் படங்களும் மாட்டப்பட்டிருக்கின்றன. அந்தக் கழிசடைகள் நடுவே, இந்த மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் படமும், நம் தாய்மொழியாம் தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்த கலைஞரின் படமும் இடம்பெற்றால் அது அவர்கள் இருவருக்கும் நேர்ந்த அவமரியாதையாகிவிடும்.

கவிக்கோ மன்றத்தின் இடவசதி, மற்ற வசதிகள் கருதி நண்பர்கள் நடத்தும் விழாக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இனி தயவுசெய்து, அங்கு நடக்கும் விழாக்களுக்கு என்னை அழைக்காதீர்கள். என்னால் மனமுவந்து பங்கேற்க இயலாது.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக – பாஜக கூட்டணி : எல்.முருகன் விளக்கம்

இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை!

+1
0
+1
1
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *