தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார்
அடர்சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகை மலருக்கும் பல்வேறு சிறப்புகள் உள்ளன.
தமிழ் நிலத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து நிலங்களில், ஒவ்வொரு நிலத்தின் பெயரும், அங்கு முக்கியமாக வளரும் மரம், அல்லது செடியின் பெயரைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் வாகை மரமாகும்.
வாகைப் பூவைத் தொடுத்து, வெற்றிச் சின்னமாகக் கழுத்தில் அணிந்துக் கொள்வர். பெண்கள் காதணியாக அணிந்து கொள்வர் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. தொல்காப்பியம் நூலில் போர் காலங்களில் வீரர்கள் அணியும் பூக்கள் பற்றிச் சொல்லும் பாடலில், வாகைப் பூப் பற்றி கூறப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றியை கொண்டாடியதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. “வெற்றி வாகைச் சூடினான்” எனும் தொடர் இன்னமும் வழக்கில் உள்ளது.
இந்த மரத்தின் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயன்கள் கொண்டவை. வாகை வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று. இது, தமிழீழத்தின் தேசிய மரமாகும்.
வாகைப் பூக்களைப் போல் தூங்கு மூஞ்சி மரப் பூக்களும் தோன்றுவதால் வாகை மரமானது தூங்கு மூஞ்சி மரமென்றே பலரும் கருதி கொள்கின்றனர்.
ஆனால் வாகை மரமென்பது Flea Tree ரகத்தை சேர்ந்தது ஆகும். தூங்கு மூஞ்சி மரம் Rain Tree ரகத்தை சேர்ந்தது. ஆகும். இரண்டும் வெவ்வேறு மரங்களென்றாலும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”இது நம் கட்சிக்கொடி மட்டுமல்ல…” : கொடி அறிமுக விழாவில் விஜய் பேச்சு!
தமிழக அமைச்சரவையில் மாற்றம்! மூவர் உள்ளே… மூவர் வெளியே!