கலைஞர் பரிந்துரையால் தான் அன்புமணி ராமதாஸ் அமைச்சர் ஆனார் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
10.5% வன்னியர் இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு முழுவதும் நேற்று (டிசம்பர் 24) பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “வன்னியர்களுக்கு 15 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கினால் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருகிறோம்” என்று கூறியிருந்தார்.
மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்து இன்று (டிசம்பர் 25) அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், ”பாமகவில் மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, “திமுகவில் தான் அண்ணாவுக்குக் கூட வழங்கப்படாத தலைவர் பதவி ஸ்டாலினின் குடும்பச் சொத்தாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அறிவாலயத்தில் சுயமரியாதையை அடகு வைத்த அடியாள் சிவசங்கருக்கு சமூகநீதி பற்றி என்ன தெரியும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வார்த்தை போர் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார்.
ஜி.கே.மணியின் அறிக்கை ஆரம்பத்திலேயே தனிமனித தாக்குதல் போல தொடங்குகிறதே பார்த்தீர்களா?
“அடியாள், வாயிற்காப்போன், அடிமை போன்று தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் ஜி.கே.மணி. ஒரு ஆசிரியராக இருந்த அவர், இந்த வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. அவரது பெயரில் இந்த அறிக்கை வந்திருக்கிறது அவ்வளவுதான்”.
ஒன்றிய பாஜக அரசின் கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா என்று நீங்கள் கேட்டிருந்தீர்கள்… ஆனால் அன்புமணி வன்னியர்களுக்கு 15 சதவிகித உள் ஒதுக்கீடு தந்தால் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கிறோம். ஒரு சீட் கூட கொடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாரே?
எல்லாம் வார்த்தை ஜாலங்கள்… சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணிக்காக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடும் போது ஓட்டு அறுவடைக்காக இவர்களும் ஒத்துழைத்தார்கள். அப்போது 10.5 சதவிகிதம் என்றிருந்ததை இப்போது 15 என்று போயிருக்கிறார்கள்.
நான் சட்டமன்றத்தில் வைத்த வாதத்தின் காரணமாக தடுமாறி இப்போது 15க்கு போயிருக்கிறார்கள். 20 சதவிகித வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தென்மாவட்டங்களுக்கு போகும்போது எப்படி முக்குலத்தோர் உள்ளிட்டோருக்கெல்லாம் பயன்படுகிறது என்று நான் சட்டமன்றத்தில் சொன்னேன். அதனால் தான் இப்போது 15க்கு போயிருக்கிறார்கள்.
முதலில் பாஜகவை விட்டு வெளியே வந்தால், இந்த சட்டத்தை நிறைவேற்றத் தயாரா என்று கேட்டிருக்கிறார்கள். அந்த கூட்டணியில் இருக்கும் நீங்கள் பாஜகவை நிர்பந்தம் செய்யலாம் அல்லவா. ஏன் சொல்ல முடியவில்லை.
இந்த சட்டத்தை நிறைவேற்ற என்ன பிரச்சினை உள்ளது என்பதை விட்டுவிட்டார்கள். உச்ச நீதிமன்றம் தரவுகள் வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அந்த தரவுகளை திரட்டுவதை விட்டுவிட்டு, திடீரென சட்டம் கொண்டுவாங்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.
இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டி தங்கள் பின்னால் நிறுத்திக்கொள்வதற்கான முயற்சி தான் இது”
மாநில அரசே தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்களே…
திரட்டிய தகவல் வரைக்கும் ஏற்கனவே 20 சதவிகித இட ஒதுக்கீட்டிலேயே 13 சதவிகிதத்துக்கும் மேல் வன்னியர்கள் பல்வேறு நிலைகளில் இட ஒதுக்கீட்டை பெறுகிறார்கள். இது அவர்கள் தரப்புக்கே தெரியும். தரவுகள் தெரியாது என்று சொல்வதெல்லாம் சும்மா பேச்சு…
உண்மையை சொன்னால் ஏற்கனவே வன்னியர்கள் பெறக்கூடிய இட ஒதுக்கீட்டை 10.5%உள் ஒதுக்கீடு குறைத்துவிடும். இதுதான் உண்மை நிலை.
திண்டிவனத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டவருக்கு கிடைக்ககூடிய 20 சதவிகித இட ஒதுக்கீட்டை, முழுமையாக வன்னியர்கள் அனுபவிக்கிறார்கள். இது திண்டிவனம் மட்டும் அல்ல, கடலூர், தருமபுரி, சேலம் என வன்னியர்கள் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களிலும் நடக்கிறது.
கல்வியில் மட்டுமல்ல ரேஷன் கடைகள், அங்கன்வாடி பணிகளில் எல்லாம் 20 சதவிகித இட ஒதுக்கீட்டை அனுபவிப்பது வன்னியர்கள் தான். இந்தசூழலில் நீங்கள் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால், 9.5% இட ஒதுக்கீடு குறைந்துவிடும். இதை நிரப்ப ஆட்கள் இருக்கமாட்டார்கள்.
இந்த இழப்பு என்பது வன்னியர்களுக்குத்தான். இதை நான் சொன்னபோது, இதுவரை பதில் இல்லை. புதிது புதிதாக கதை சொல்கிறார்கள்…
திண்டிவனம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் 20 சதவிகிதம் முழுமையாக வன்னியர்கள் அனுபவிக்கிறார்கள் என்று சொல்வது அநீதிதானே… முழுமையாக தரவுகளை திரட்டி அந்தந்த சாதிக்கும் பிரதிநிதித்துவத்தை திமுக அரசு கொடுக்கலாமே?
இது சமூக அநீதி கிடையாது… வன்னியர்களுக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு கொடுத்தால் வட மாவட்டங்களில் மட்டும்தான் வன்னியர்கள் அனுபவிப்பார்கள். தென் மாவட்டங்களிலோ, மேற்கு பகுதிகளிலோ இந்த இடத்தை அனுபவிக்க வன்னியர்கள் அங்கு வசிக்கவில்லை. எனவே 20 சதவிகிதத்தை எல்லோரும் பகிர்ந்துகொள்ளும் வகையில் தான் கலைஞர் சட்டம் வகுத்தார்.
இவர்கள் தேர்தலுக்காக புலிவாலை பிடித்த கதையாக இதை பற்றி பேசுகிறார்கள். 10.5 சதவிகிதம் பற்றி பேசியே இந்த கட்சி அழியபோகிறது…
வன்னியர்களுக்கு துரோகம் செய்வதுதான் திமுகவின் குணம் என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே…
20 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்த போது கலைஞரை அழைத்துச் சென்று திண்டிவனத்தில் மாநாடு நடத்தி மஞ்சள் சால்வை போட்டு, நீங்கள் முதலமைச்சராக தொடர்வீர்கள் என்று சொன்ன அந்த ராமதாஸா திமுக துரோகம் செய்திறது என்று சொல்கிறார். திமுகவுடன் கூட்டணி அமைத்தபோதெல்லாம் வன்னியர்களுக்கு திமுக எதிரி என்று அவர்களுக்கு தெரியவில்லையா…
தேர்தல் நேரத்தில் ஒரு நிலைப்பாடு எடுப்பதும், தேர்தலுக்கு பிறகு ஒரு மாதிரி பேசுவதும்தான் அவர்களுடைய வழக்கம்…
இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்த 23 பேருக்கும் பாமக எதுவும் செய்யவில்லை. இட ஒதுக்கீட்டு போராளிகள் என்று பட்டத்தை கொடுத்து பென்ஷன் வழங்கியது கலைஞர்தான். அவர்களுக்கு அரசு பணி கொடுத்ததும் கலைஞர் அரசுதான்.
ஒரு ராஜ்ய சபா சீட் இருந்தால் கூட அதை, அன்புமணி ராமதாஸுக்குதான் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அதற்கு அவர்கள் ஒரு பட்டியலே போட்டிருக்கிறார்கள்… முதலில் அமைச்சர் பதவியே தலித் எழில்மலைக்கும், பிறகு பொன்னுசாமிக்கும் என பட்டியல் இனத்தவர்களுக்குதான் கொடுத்தோம். 5 ஆவது முறையாகத்தான் அன்புமணிக்கு கொடுத்தோம்… இந்த முறை திமுகவில் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்களே…
தலித் ஏழுமலை, பொன்னுசாமி மத்திய அமைச்சர் ஆகும் போதும், அன்புமணி எம்.பி.அல்ல. அப்போதே அன்புமணி எம்.பி ஆகியிருந்தால் அவர்தான் மத்தியஅமைச்சர் ஆகியிருப்பார். வன்னியர் சமூகத்தில் வேறொருவர் தலையெடுத்து வந்து கையெழுத்து போட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் தலித் ஏழுமலை, பொன்னுசாமியை மத்திய அமைச்சர் ஆக்கினார்கள். மத்திய அமைச்சர்கள் ஆனவர்கள் மக்களவைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்தவர்கள். ஆனால் அன்புமணி எப்படி வந்தார்.. ராஜ்ய சபா மூலம் தான் வந்தார். அதுவும் திமுகவினர் ஓட்டுபோட்டுதான். கலைஞரால் பரிந்துரைக்கப்பட்டுதான் அவர் மத்திய அமைச்சரும் ஆனார் என்றார் அமைச்சர் சிவசங்கர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
முழு பேட்டியையும் காண இங்கே க்ளிக் செய்யவும்
பேட்டி : கலைச்செல்வி சரவணன், இணையாசிரியர்
தொகுப்பு : பிரியா
மதச்சார்பின்மையைப் பேணிக்காத்தவர் வாஜ்பாய்… ஸ்டாலின் புகழாரம்!
‘என் மகனே இறந்து போயிட்டான்’- நடிகை திரிஷா வெளியிட்ட உருக்கமான பதிவு!