மீம்ஸ்…கார்டு…ரீல்ஸ்…விதவிதமா மெசேஜ் கொட்டுது பாரு… கோவையில் ஐ.டி.,விங் ஆட்டத்துல ஜெயிக்கப்போவது யாரு?

Published On:

| By Kavi

‘வெற்றிக் கொடி கட்டு’ படத்தில் வரும் ஒரு காட்சி அது…

பார்த்திபன் ஒரு ஆட்டைக் கட்டிக் கொண்டு இழுத்துக் கொண்டு வருவார்; அதைப் பார்க்கும் வடிவேலுக்கு, தன்னையே அவர் கட்டி இழுத்துக் கொண்டு வருவது போல தோன்றும். அதே காட்சியைப் புதுமையான பின்னணி இசையுடன் போட்டு ஒரு மீம்ஸ். அதில் பார்த்திபன் அருகில் ‘மோடி’ என்றும், வடிவேலு அருகில் ‘அண்ணாமலை’ என்றும் டைட்டில் கார்டு…அதன் அர்த்தம் அரசியல் அரங்கத்துக்குப் புரியும்.

அந்தப்பக்கம் வந்து விழுகிறது ஒரு காணொளி…அது ‘படையப்பா’ படக்காட்சி…

‘‘மாப்பிள்ளை அவருதான்…ஆனா அவரு போட்ருக்கிற பேண்ட் என்னோடது!’’ என்று செந்தில் பேண்ட்டைக் காண்பித்து ரஜினி சொல்லும் காட்சியின் வசனத்தை எடுத்துக் கொண்டு, கோவை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கட்டமைப்பைக் காண்பித்து, ‘திறந்து வச்சது அவரு தான்; ஆனா திட்டத்துக்கு நிதி கொடுத்தது மோடி அய்யா!’ என்று கமெண்ட் போடப்படுகிறது.

இப்படியாக, இந்தப் பக்கத்திலிருந்து கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பறந்தால், அந்தப்பக்கத்தில் இருந்து பேட்ரியாட் பேட்டரியிலிருந்து ஒரு ‘பவர்புல்’ தோட்டா பறந்து வருகிறது. கோவையில் இப்போது நடப்பது தேர்தல் போர் என்பதை விட, தகவல் தொழில் நுட்ப யுத்தம் என்றே சொல்லலாம்.

அதற்கான காரணம், அங்கே களத்தில் நடக்கின்ற பரப்புரைக்கு நுாறு மடங்காக, சமூக ஊடகங்களில் சடுகுடு, சண்டை நடக்கிறது. பார்த்தாலே தெரிகிறது, அதில் பாதிக்கும் மேலே பொய், புனைவு, மிகைப்படுத்தல் இருப்பது. ஆயினும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அடைமழை போல கொட்டுகிற மெசேஜ்களை அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை பார்த்து, பரபரப்பாக அதை ‘பார்வர்டு’ செய்து பரப்புகிறார்கள் கோவை மக்கள்.

எல்லா ஊர்களிலுமே இது நடக்கிற விஷயம் தான். ஆயினும் கோவையில் இது வேற லெவலுக்கு நடக்கிறது. அதற்கும் ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியை, ‘வாட்சப் யுனிவர்சிட்டி’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கிண்டலடித்திருந்தார். தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலையையும், பிரஸ்மீட் பிரசிடெண்ட், சோஷியல் மீடியா பீஸ் என திமுக மற்றும் அதிமுக ஐடி விங் ஆட்கள் பல விதமாக போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், பிஜேபி நிர்வாகிகளும், அண்ணாமலையின் ஆதரவாளர்களும் களத்தில் பணி செய்வதை விட, சமூக ஊடகங்களில் தகவல் பரப்புவதிலேயே அளவுக்கு அதிகமான கவனம் செலுத்துகிறார்கள் என்பது பல நேரங்களில் பல காரணிகளில் வெளிப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு இளைஞர் வட்டாரத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதற்கும் காரணம், இது தான். அவர்கள் எளிதாகப் படிப்பதற்கேற்ப அல்லது பார்ப்பதற்கேற்ப, சினிமாக் காட்சிகளின் ‘சூப்பர் சீன்’களை ‘கட்’ செய்து போடுவது போல, எங்கெங்கோ அண்ணாமலை பேசிய பேச்சுக்களை எல்லாம் வெட்டி ஒட்டி அதற்கு மெருகூட்டி, டாப் டக்கர் டயலாக்குகளை வைத்து மீம்ஸ், ரீல்ஸ் போடுகிறார்கள். அது அந்த இளைஞர் பட்டாளத்தை அப்படியே ஈர்க்கிறது; நம்ப வைக்கிறது.

Who will win in Coimbatore?

லஞ்சத்தையும், ஊழலையும், ரவுடிகளையும் ஒழிக்க வந்த ஜென்டில்மேன், இந்தியன், கந்தசாமி, கே.ஜி.எப்.,யாஷ் எல்லாமே இவர் தான் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதில் இன்னொரு சுவராஸ்யமான முரண் நகையையும் பார்க்க முடிகிறது. இந்த இளைஞர் பட்டாளம் எப்படி இந்தத் தகவல்களை எல்லாம் நம்புகிறதோ, அதேபோல, ஓய்வு பெற்ற அதிகாரிகள், வெளிநாடுகளிலிருந்து குழந்தைகள் அனுப்பும் பணத்தை வைத்து ஓய்வு இல்லங்களில் காலம் தள்ளும் முதியோர், படித்த பணக்கார பாட்டி தாத்தாக்கள் எல்லோருமே இந்த தகவல்களை எல்லாம் நம்புகிறார்கள்; அண்ணாமலையே தமிழகத்தை காக்க வந்த ‘ரட்சகன்’ என்று நினைக்கிறார்கள்.

இவர்கள் தரும் ஆதரவை வைத்தே, பிஜேபி தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக மாறிவிட்டது என்று அண்ணாமலையும் சொல்கிறார்; அவருடைய கட்சிக்காரர்களும் நம்புகிறார்கள். இதே நம்பிக்கையில், இப்போது அவர் கோவையில் களம் இறங்கியுள்ளார்.

Who will win in Coimbatore?

அவர் கோவையில் போட்டி போடுவதாகத் தகவல் வெளியானதும், அவருடைய ஐடி விங், அசுர வேகத்தில் சுழன்று வேலையை ஆரம்பித்து விட்டது. அண்ணாமலைக்கு ஆதரவு சேகரிக்கும் வகையில், வாட்ஸ்ஆப் குரூப்களையும், அதற்கான ‘லிங்க்’குகளையும் உருவாக்கி, அவற்றை பலருக்கும் அனுப்பி, தினமும் ஆயிரக்கணக்கான ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை 16 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள், இந்தக் குழுக்களில் சேர்ந்திருப்பதாக பிஜேபி நிர்வாகிகள் புள்ளி விபரங்களை அடுக்குகிறார்கள்.

இப்படிச் சேர்ந்துள்ள கூட்டத்தில் பெரும்பாலானவர்கள், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இந்த குழுக்களையும், அந்த குழுக்களில் பகிர வேண்டிய பதிவுகளையும் தயார் செய்வதிலும் இவர்களே அதிகம் இருப்பதாக அவர்களே மார் தட்டிச் சொல்கிறார்கள். படித்த மேல் தட்டு கொங்கு வேளாளர் சமுதாயத்தினர், அதேபோல தொழில் செய்யும் நாயுடு சமுதாயத்தின் வசதி படைத்த தொழில் முனைவோர், வட மாநிலத்தவர்கள், மலையாளிகள், கன்னட மக்கள் என பல தரப்பினரும் இதில் இணைந்து வருகின்றனர். அதனால் இந்த குழுக்களும் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத் என பல விதமான மொழிகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இதில் பகிரப்படும் தமிழ் தகவல்கள் குறைவு.

அண்ணாமலைக்கு ஐடி விங் படு ஸ்ட்ராங் என்பதாலோ என்னவோ, திமுக ஐடி விங் மாநில செயலாளரான அமைச்சர் டிஆர்பி ராஜாவையே கோவை தொகுதிக்குப் பொறுப்பாளராகப் போட்டு விட்டார் ஸ்டாலின். அவர் வந்ததால், திமுக ஐடி விங், பாரதிய ஜனதாவுக்குப் போட்டியாக பதினாறு அடி பாயும் என்று எல்லோரும் கணக்குப் போட்டார்கள். ஆயினும் திமுக ஐடி விங் சற்று நிதானமாக, நின்று விளையாடுவதாகவே தோன்றுகிறது. பிஜேபி ஐடி விங், மோடி, அண்ணாமலை என்ற தனி நபர்களை ஹீரோவாக்கும் வகையிலான ‘கண்டெண்ட்’களைத்தான் அதிகமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறது. திமுக ஐடி விங், அவற்றில் பல காணொளிகளுக்கு அதே பாணியில் பதிலடியும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் பேச தயார் - அதிமுக கோவை வேட்பாளர் மாஸ் பேச்சு

உதாரணமாக, ‘கோவைக்கு என்ன செய்தார் மோடி?’ என்று பிஜேபி தரப்பில் போட்டுள்ள வீடியோவுக்கு ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழக அரசின் பங்களிப்பு 50 சதவீதம்’ என்று பதிலடி போட்டுள்ளது. கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நிலத்தை எடுத்துக் கொடுத்ததற்கு தமிழக அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டதையும், விரிவாக்கத்துக்கு மத்திய அரசு எதுவும் தராததை ‘ஜீரோ’ என்றும் சுட்டிக்காட்டியும் மற்றொரு கார்டு போடப்பட்டுள்ளது.

கோவைக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கே பொதுவாக தயாரித்துள்ள ஒரு ரீல்ஸ் கவனம் கொள்ள வைக்கிறது. மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச பஸ் பயணத்தால் மாதம் மிச்சமாகும் 1500 ரூபாய், ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் ஸ்டாலின் தருகிறார்; காங்கிரஸ் ஆட்சியில் 500 ரூபாயாக இருந்த எரிவாயு சிலிண்டரை 1110 ரூபாயாக உயர்த்தியவர் மோடி; பெண்களே உங்கள் வாக்கு யாருக்கு?’ என்று கேட்கும் கேள்வி, பலரையும் யோசிக்க வைக்கிறது.

ஒப்பீட்டளவில், பிஜேபி ஐடி விங் போடுவதில் பாதியளவுக்குக் கூட, திமுக ஐடி விங் மெசேஜ் போடுவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் போட்டால் அர்த்தம் உள்ளதாகப் போட வேண்டும் என்பதிலும், சமூக ஊடகத்தில் பரப்புரை செய்வதை விட, களத்தில் பணி செய்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதிலும் டிஆர்பி ராஜா குறிப்பாயிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் திமுக ஐடி விங் நிர்வாகிகள்.

அவர்கள் சொல்வதைப் போலவே, ராஜாவும் ஓரிடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்காமல், தொழில் முனைவோரைச் சந்திப்பது, தொழிற்சங்கங்களைச் சந்திப்பது, செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது, பூத் கமிட்டிகளை ஆய்வு செய்வது என்று பம்பரமாகச் சுழன்று பணி செய்வதையும் பார்க்க முடிகிறது. அதற்கு மிக முக்கியமான ஒரு காரணத்தையும் அவர்கள் சொல்கிறார்கள். அது தான் இந்த தொகுதியின் இன்னுமோர் ‘ஹைலைட்’.

சமூக ஊடகங்களில் சடுகுடு ஆடும் அண்ணாமலைக்காக, டிஆர்பி ராஜா இங்கே இறக்கப்பட்டார் என்றால், அதிமுகவில் அண்ணாமலையை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும் அக்கட்சியின் ஐடி விங் நிர்வாகிதான். அந்தப் பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்து, சென்ற 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, கொங்கு மண்டலத்துக்குட்பட்ட மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மை தொகுதிகளை அதிமுக கைப்பற்றுவதற்கு அதிமுக்கியக் காரணமாக இருந்தவர்.

https://twitter.com/HARIKRI45922991/status/1773962786265260285

 

அதனால் அவருடைய டீமும் தங்கள் பங்குக்கு, அண்ணாமலையையும், திமுகவையும் கலாய்த்து கலர் கலராய் காணொளிகளையும், கார்டுகளையும், மீம்ஸ்களையும் போட்டுத் தாளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதிமுக வழக்கம் போல, சமூக ஊடகத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் தீவிரமாகக் களப்பணி செய்து கொண்டிருக்கிறது. மற்ற இரண்டு கட்சிகளையும் விட, அதிமுக பூத் கமிட்டிகள் தான் இரட்டிப்பு உறுப்பினர்களுடன் மிகவும் பலமாக இருக்கிறது என்பதே களத்தில் காண்கிற நிஜமாகத் தெரிகிறது.

கோவையில் மூன்று கட்சிகளிலுமே, வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் என எல்லோரும் சமூக ஊடகங்களில் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தாலும், வாட்ஸ் ஆப், ட்விட்டர், பேஸ்புக் என விரல்களில் விளையாடும் இந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் எத்தனை பேருக்கு, தேர்தல் நாளில் விரல்களில் மை வைப்பதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவுள்ளது.

நாக்கு சொல்வதை வாக்காகச் செலுத்த முடியாதவர்கள் எத்தனை ஆயிரம் பேர் ஆதரித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். இப்போதுள்ள கள நிலவரத்தைப் பார்க்கும்போது, சமூக ஊடகங்களில் பெருகும் ஆதரவைப் பார்த்து, வெற்றி நமக்குதான் என்று யாராவது நினைத்தால், அது காற்றிலே சித்திரம் வரைந்து காசுக்கு விற்க நினைக்கும் மடமைத்தனத்துக்கு ஈடானது.

–பாலசிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ டீஸர்: ஸ்பெஷல் என்ன?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு ஜிஞ்சர் ஜூஸ்

ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு!

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை பணம்?: விசாரணைக்கு உத்தரவு!

225 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment