எந்த கட்சிக்கு பலம்? ஈரோடு கிழக்கு சொல்லும் வரலாறு!

அரசியல்

தமிழக அரசியலில் தற்போது ஈரோடு இடைத்தேர்தல் ஹாட் டாபிக்காக உள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி!

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டி பாளையம், பவானிசாகர் ஆகிய 8 தொகுதிகள் உள்ளது.

who will win erode east assembly

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 98-வது தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது. 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது ஈரோடு தொகுதியானது, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்பாக ஈரோடு தொகுதியில் திமுக 5 முறை, அதிமுக 5 முறை, காங்கிரஸ் 2 முறை, கம்யூனிஸ்ட் 1 முறை வெற்றி பெற்றுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோடு தாலுக்கா (பகுதி), பிராமண பெரிய அக்ரஹாரம் பேரூராட்சி, ஈரோடு நகராட்சி மற்றும் வீரப்பன்சத்திரம் பேரூராட்சி ஆகியவை அடங்கும். இங்கு கொங்கு வெள்ளாள கவுண்டர் மற்றும் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக மக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2,28,402 வாக்காளர்கள் உள்ளனர்.

தந்தை பெரியார், கணிதமேதை ராமானுஜம் உள்ளிட்டோர் இந்த தொகுதியில் தான் பிறந்தனர். இங்கு ஜவுளிதொழில் மிக முக்கியமான தொழிலாக விளங்குகிறது. குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் இங்குள்ளது.

கடந்த கால தேர்தல்!

2011-ஆம் ஆண்டு முதல்முறையாக இந்த தொகுதி சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இதில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக-விற்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. தேமுதிக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். திமுக சார்பில் தற்போது தமிழக வீட்டு வசதி துறை அமைச்சராக இருக்கும் எஸ்.முத்துசாமி போட்டியிட்டார். இந்த தேர்தலில், வி.சி.சந்திரகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட எஸ். முத்துசாமியை 10,644 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

who will win erode east assembly

2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கப்போவதாக தேமுதிக அறிவித்தது. இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், தேமுதிக-வின் கொள்கை பரப்பு செயலாளருமான வி.சி.சந்திரகுமார் மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்து, தேமுதிக, திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று செய்தியாளர்களை சந்தித்து பகிரங்கமாக தெரிவித்தனர். இருப்பினும் விஜயகாந்த் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை.

இதனால் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை சந்திரகுமார் துவங்கினார். மேலும் திமுக-விற்கு மக்கள் தேமுதிக தனது ஆதரவை அளித்தது. இந்த தேர்தலில் திமுக, மக்கள் தேமுதிக-விற்கு ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கியது. அக்கட்சி சார்பில் வி.சி.சந்திரகுமார் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார். இந்த தேர்தலில் கே.எஸ். தென்னரசு, 64879 வாக்குகள் பெற்று வி.சி.சந்திரகுமாரை 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களிலும் தோல்வியடைந்த திமுக 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முழு முனைப்போடு தேர்தலை எதிர்கொண்டது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வே.ரா திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டார். அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. அதிமுக சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் திருமகன் ஈவேரா தன்னை எதிர்த்து போட்டியிட்ட யுவராஜாவை 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

திமுக ஆட்சியின் முதல் இடைத்தேர்தல்!

தேர்தல் நிறைவடைந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில், கடந்த ஜனவரி 4-ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ஈரோடு தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. ஒரு தொகுதியின் உறுப்பினர் காலமானாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

who will win erode east assembly

அந்தவகையில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதனுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அறிவிப்பால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு சீட் ஒதுக்கப்பட்டது போல், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்துள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிட விரும்பியதால் அந்த தொகுதியில் நாங்கள் போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஜனவரி 23-ஆம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க உள்ளார்.

இதன் மூலம் அதிமுக – காங்கிரஸ் கட்சி இடையே ஈரோடு கிழக்கு தேர்தலில் நேரடி போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறும் என்ற பாணியை முறியடிக்க அதிமுகவும், ஆளும் கட்சியாக முதல்முறையாக இடைத்தேர்தலை சந்திப்பதால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக-வும் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

செல்வம்

பாசக்கயிறாக மாறும் மாஞ்சா கயிறு: குஜராத்தில் சோகம்!

பனிக்கடலாக மாறிய கொடைக்கானல்

130 மருத்துவ உதவியாளர்களுக்கு பணியாணை: ரூ. 202 கோடியில் உயர்கல்வி கட்டிடங்கள் திறப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *