டெல்லியில் கெஜ்ரிவால் இடத்தில் யார்?

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏறத்தாழ 5 மாதங்கள் சிறையில் இருந்தவாறே ஆட்சியை நடத்திய நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்ததும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே 2014ஆம் ஆண்டு முதல்முறையாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, ஜன் லோக்பால் மசோதாவுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்  கெஜ்ரிவால். ஆனால் அதன் பிறகு நடந்த தேர்தலில் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக இடைக்கால ஜாமீனில் வந்த கெஜ்ரிவால் தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று செப்டம்பர் 13ஆம் தேதி வெளியே வந்த அவர் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதேசமயம் கெஜ்ரிவால் இடத்தை யார் நிரப்புவார்கள், அதாவது அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தசூழலில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா இன்று (செப்டம்பர் 16)  கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். முதல்வர் தேர்வு குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படும் நிலையில், ஜெஜ்ரிவால் வீட்டில் இருந்து வெளியேறும் போது சிசோடியா செய்தியாளார்களைச் சந்திக்கவில்லை.

இந்த முதலமைச்சர் பதவிக்காலம் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் என்ற போதிலும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியப் பிரச்சினைகளில் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய மற்றும் கட்சியினர் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முக்கிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆம் ஆத்மி கட்சித் தலைமை விரும்புகிறது என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

அடுத்த முதல்வர் யார்?

அமைச்சர் அதிஷி

கல்வி மற்றும் பொதுப்பணித்துறை போன்ற முக்கிய இலாகாக்களை வைத்துள்ள அமைச்சர் அதிஷி முக்கியப் போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

43 வயதான அதிஷி ஊழல் வழக்கில் சிசோடியா கைது செய்யப்பட்ட பின்னர் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். கெஜ்ரிவாலும், சிசோடியாவும் சிறையில் இருந்த போது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி கட்சிக்காக முக்கிய பங்காற்றினார்.

கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா திட்டத்தை முறியடித்து, ஆம் ஆத்மி தலைமை அதிஷியை தேசிய கொடியேற்ற வைத்தது. இதன்மூலம் அதிஷி மீது கட்சித் தலைமை மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சௌரப் பரத்வாஜ்


மூன்று முறை எம்.எல்.ஏ.வாக கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சௌரப் பரத்வாஜ், கெஜ்ரிவால் அரசாங்கத்தில் கண்காணிப்பு மற்றும் சுகாதார துறையை வைத்துள்ளார்.

அடிப்படையில் மென்பொருள் பொறியாளரான சௌரப் பரத்வாஜ் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். ஊழல் வழக்குகளில் மத்திய அமைப்புகளால் கைது செய்யப்பட்டு, முக்கியத் தலைவர்கள் சிறையில் இருந்த போது கட்சியின் நிலைப்பாட்டை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தெரிவித்து வந்தவர் சௌரப் பரத்வாஜ். இவரும் முதல்வர் ரேஸில் இருப்பதாக கூறப்படுகிறது.

ராகவ் சந்திரா


ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினரான ராகவ் சந்திரா ராஜ்யசபா எம்.பி. ஆவார். ஆம் ஆத்மியில் தொடக்கத்தில் இருந்தே இருக்கிறார். 2022 பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர். நாடாளுமன்றத்தில் டெல்லி மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவர் என்று ஆம் ஆத்மி கூறுகிறது.

கைலாஷ் கெலாட்


போக்குவரத்து, நிதி மற்றும் உள்துறை போன்ற முக்கிய இலாகாக்களை கையில் வைத்திருக்கும் கைலாஷ் கெலாட் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஆவார். டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இரண்டிலும் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். 2015 முதல் டெல்லியின் நஜப்கர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

சஞ்சய் சிங்


2018 ஆம் ஆண்டு முதல் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக அறியப்படுகிறார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர், கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். தேசிய செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்த 5 பேரில் யாரேனும் ஒருவர், அடுத்து தேர்தலை சந்திக்கும் வரை முதல்வராக இருப்பார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே மகாராஷ்டிரா தேர்தலோடு வரும் நவம்பர் மாதம் டெல்லிக்கும் தேர்தல் நடத்த கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். நான் நேர்மையானவன் என்று பொதுமக்கள் தீர்ப்பு வழங்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளார் கெஜ்ரிவால்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

“தெறிக்க விட்டான் வந்தல்லே” – ‘வேட்டையன்’ ஆடியோ லாஞ்ச் எப்போது?

வயநாடு நிலச்சரிவு: ஒரு உடலை எரிக்க 75 ஆயிரம் செலவு… கேரள அரசு கணக்கு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts