Discussions raised by the Selvaganapadhi verdict

10 வருடத்தை யார் திரும்பிக் கொடுப்பார்கள்? செல்வகணபதி தீர்ப்பு எழுப்பும் விவாதங்கள்!

அரசியல்

திமுகவின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்வகணபதி மீதான சுடுகாடு கூரை ஊழல் வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை நேற்று ( நவம்பர் 28-2023) ரத்து செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

ஜெயலலிதா தலைமையிலான 1991-96 அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார் செல்வகணபதி. அப்போது தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தியதில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அப்போதைய எதிர்க்கட்சிகளான திமுகவும் தமாகாவும் குற்றம் சாட்டின.

சிபிஐக்கு எஸ்.ஆர்.பி. கொடுத்த அழுத்தம்!

அதிமுக ஆட்சி முடிந்த நிலையில் மத்தியில் திமுக-தமாகா பங்கேற்ற ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அதில் தமாகாவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ யை நிர்வகிக்கும் அமைச்சராக இருந்தார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.

அந்த வகையில் அப்போதைய அதிமுக பிரமுகரான செல்வகணபதி மீது சுடுகாட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி திமுகவின் அழுத்தத்தின் பேரில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.

விவரங்களை ஆராய்ந்த சிபிஐ, செல்வகணபதி மீது வழக்குப் பதிவு செய்ய போதுமான முகாந்திரங்கள் இல்லை என்று தெரிவித்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் செல்வகணபதி மீது சிபிஐ 1997 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது என்று அப்போதே அரசியல் உயர் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. (காலத்தின் கோலம் அதே எஸ்.ஆர்.பி. 2016 இல் அதிமுகவில் சேர்ந்துவிட்டார் என்பது தனிக் கதை)

அந்த வழக்கில் தான் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி செல்வகணபதிக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சிபிஐ நீதிமன்றம். இடைப்பட்ட காலத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த செல்வகணபதி 2010-இல் ராஜ்யசபா எம்பியாகவும் ஆனார்.

ராஜினாமா செய்த செல்வகணபதி

சிபிஐ நீதிமன்றத்தின் இரண்டு ஆண்டு தண்டனையை அடுத்து ராஜ்யசபா எம்பியாக இருந்த செல்வகணபதியின் எம்பி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டால் உடனடியாக அவர்கள் வகித்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கத்துக்கு ஆளாவார்கள்.

இதில் விலக்கு அளிப்பதற்காக, ‘கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழக்க மாட்டார்கள். அவர்களுக்கு சட்ட நிவாரணத்துக்காக 3 மாதம், அவகாசம் கொடுக்கப்படும்’ என்ற ஒரு திருத்தத்தை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 2013 செப்டம்பரில் கொண்டுவந்தார்.

Discussions raised by the Selvaganapadhi verdict

ஆனால் அப்போது ராகுல் காந்தி இதை பகிரங்கமாக கடுமையாக எதிர்த்து கிழித்து எறிந்தார். அதனால் இந்த சட்டத்தைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு.

இந்த பின்னணியில் 2014-ஆம் ஆண்டு தனக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, ராஜ்யசபா எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார் செல்வகணபதி.

2014 ஏப்ரல் முதல் இப்போது 2023 டிசம்பர் வரை சுமார் பத்து ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தால் செல்வகணபதியின் 2 ஆண்டு தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சிபிஐ நீதிமன்றம் விதித்த தீர்ப்பை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த செல்வகணபதியின் மனு மீது நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த தீர்ப்பை அளித்தார்.

கலக்கத்தை ஏற்படுத்திய நீதிபதி ஜெயச்சந்திரனின் முந்தைய தீர்ப்புகள்!

இதற்கு முன் நீதிபதி ஜெயச்சந்திரன் இதுபோன்ற வழக்குகளில் அளித்த தீர்ப்புகளைப் பார்த்து செல்வகணபதி தரப்பினர் சற்று கலக்கத்தில் தான்  இருந்தனர்.

செல்வகணபதியோடு அதே 91-96 ஆட்சிக் காலத்தில் சக அமைச்சராக இருந்த சத்தியமூர்த்தி. இவரது குடும்பத்தினர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அடுத்து வந்த திமுக ஆட்சியால் வழக்கு தொடுக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் சத்தியமூர்த்தி.

Discussions raised by the Selvaganapadhi verdict

ஆனால் இவரது விடுதலையை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் 2018 ஜூன் 6 ஆம் தேதி, கீழ் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது தவறு என தீர்ப்பளித்து சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 2 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதுமட்டுமல்ல… லேட்டஸ்டாக கடந்த வாரம் அதாவது நவம்பர் 21-ஆம் தேதி இதே நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த இன்னொரு தீர்ப்பும் செல்வகணபதி தரப்பினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது என்றே சொல்லலாம்.

91-96 இல் செல்வகணபதியின் இன்னொரு சக அமைச்சராக இருந்தவர் பரமசிவன், இவர் மீதும் 1997-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் பரமசிவனுக்கு 2 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 1 ஆண்டும் சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் பரமசிவன். இந்த மேல் முறையீடு வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே பரமசிவன் மரணம் அடைந்தார். அதேநேரம் அவரது மனைவி நல்லம்மாள் தொடர்ந்த அப்பீல் வழக்கு தொடர்ந்து நடந்தது.

இந்த வழக்கில் இருபது ஆண்டுகளுக்கு பின் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஓர் ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு தற்போது 80 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனபோதும் ஒரு வருட சிறை தண்டனையை உறுதி செய்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

இப்படிப்பட்ட பின்னணியில் செல்வகணபதி வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரனிடம் இருந்து எப்படிப்பட்ட தீர்ப்பு வருமோ என்று அவரது ஆதரவாளர்கள் சற்றே கலங்கியிருந்த நிலையில்தான்… சிபிஐ நீதிமன்றம் கொடுத்த தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி ஜெயச்சந்திரன்,

செல்வணபதி தீர்ப்பு எழுப்பும் விவாதங்கள்!

இந்தத் தீர்ப்பால் செல்வகணபதியின் ஆதரவாளர்கள் உற்சாகமாக இருந்தாலும் செல்வகணபதிக்கு இது ஓர் ஆறுதல் தீர்ப்பாகவே அமைந்திருக்கிறது.

Discussions raised by the Selvaganapadhi verdict

அவருக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, “2014 இல் நீதிமன்றம் அளித்த தண்டனையால் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார் செல்வகணபதி. அதற்குப் பின் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன.

இந்த பத்து ஆண்டுகளில் செல்வகணபதிக்கு தேர்தலில் நிற்க வாய்ப்புகள் இருந்தாலும், அவரது அப்பீலில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் மறுபடியும் ஒரு முறை பதவி இழக்க வேண்டியிருக்கும் என்பதால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தள்ளிக் கொண்டே போனது.

இந்த பத்து ஆண்டுகளில் இதனால் அரசியல் ரீதியாக செல்வகணபதி இழந்தது ஏராளம். தனிப்பட்ட முறையிலும் மன உளைச்சலை அனுபவித்துள்ளார். இப்போது உயர் நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்திருக்கும் நிலையில், செல்வகணபதியின் கடந்த பத்து ஆண்டுகால அரசியல் இழப்பை யார் ஈடுகட்ட முடியும்?

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்படும் வழக்குகளில் உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதிப்படுத்தும் வரையில் தேர்தலில் போட்டியிடலாம், மக்கள் பிரதிநிதிகளாக ஆகலாம் என்று இனிமேலாவது மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திட வேண்டும்” என்கிறார்கள்.

இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்தான்!

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரே நாளில் ரூ.720 உயர்வு: 47 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *