அமைச்சர் பொன்முடி வழக்கை யார் விசாரிப்பது என்று அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என ஜூன் 28ஆம் தேதி பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்தது வேலூர் நீதிமன்றம்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 7) விசாரணைக்கு வந்த போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ராவும், பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகினர்.
அப்போது, விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் டெல்லியிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “இந்த வழக்கிலிருந்து தாங்கள் விலக வேண்டும் என்று கூறவில்லை. அதே நேரத்தில் சட்டப்படி இந்த வழக்கை யார் விசாரிப்பது என தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்து முடிவெடுக்க வேண்டும்” என்று வாதாடினார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இவ்வழக்கை தாமே விசாரிப்பதா அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது பற்றி அடுத்த வாரம் அதாவது செப்டம்பர் 14ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
பிரியா
சனாதனம்: அமைச்சர் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல்?
ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு!