புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக இன்று (மார்ச் 3) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் வேகம் காட்டி வருகின்றன.
அதேபோன்று புதுச்சேரியில் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக யார் நிறுத்தப்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடுவது அக்கட்சியை சேர்ந்தவரா இல்லை பாஜகவை சேர்ந்தவரா என்பதில் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “வரும் மக்களவை தேர்தலில் புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும்” என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்த நிலையில், தற்போது மக்களவை தொகுதியையும் பாஜகவுக்கு அளித்திருப்பது என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
24 உதயசூரியன்கள்… இழுத்துப் பிடிக்கும் ஸ்டாலின்- திமுக கூட்டணியின் நிஜ நிலவரம்!