கொங்கு மண்டலத்தின் தலைநகரமாகவுள்ள கோயம்புத்தூருக்கு, ஒரு நல்ல தலை கிடைக்காமல் தள்ளாடுகிறது மாநகராட்சி.
தலைமையின் உத்தரவின்படி, கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஜூலை 3 ஆம் தேதி பதவி விலகல் கடிதம் கொடுத்த பிறகு, அந்த இடத்துக்கு யாரைத் தேர்வு செய்வது என்பதில் ஆயிரம் குழப்பங்கள், ஆயிரம் யூகங்கள், பல லட்சம் மக்களின் எதிர்பார்ப்புகள் எல்லாமே நகர் வலம் வருகின்றன. சென்னை மாநகராட்சியின் மேயராக இருப்பவருக்கு, கெளரவம், மரியாதை எல்லாமே இருக்கும். ஆனால் பெரிதாக பொறுப்போ, வேலையோ இருக்காது; காரணம், தலைநகரம் என்பதால் முதல்வர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தின் அத்தனை தலைகளும் இருக்கின்றன. ஸ்டாலினைத் தவிர, அந்தப் பொறுப்பில் இருந்தவர்கள் பலரும், அரசியலில் அடையாளம் தெரியாமல்தான் போயிருக்கிறார்கள்.
சென்னைக்கு அடுத்து, ஒரு காலத்தில் மதுரை மேயருக்கு மரியாதையும், கெளரவமும் பெரிதாக இருந்தது. இப்போது அந்த இடத்துக்கு கோவை வந்து விட்டது. மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகி விட்ட கோவை, தொழில் வளம், பொருளாதாரம் ஆகியவற்றோடு, கடந்து சென்றுள்ள பத்தாண்டுகளில் அரசியலிலும் அதிமுக்கிய மையமாகி விட்டது.
அந்த ஒரே காரணத்தால்தான், அண்ணாமலை அங்கே போட்டியிட்டார்; மோடி மூன்று முறை வந்து போனார்; நாற்பது தொகுதியிலும் வென்றதற்கு, கூட்டணிக் கட்சித் தலைவர்களை எல்லாம் கூப்பிட்டு, கோவையில் வெற்றிவிழாவை ஸ்டாலின் நடத்தினார். இப்படி பல வழிகளிலும் கோவை, தேசிய அளவில் கவனம் பெற்ற ஒரு நகரமாகி விட்டது. அந்த வரிசையில், அந்த மாநகரத்தின் மேயர் ஒருவர் பதவி விலகியதும், புதிய மேயரின் தேர்வும் பேசுபொருளாகியுள்ளது.
கோவைக்கு இது இரண்டாவது அனுபவம். சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பாக, 2014ல், கோவை மேயருக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது நடந்தது அதிமுக ஆட்சி. அன்று முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஐந்தாண்டு இடைவெளிக்குப்பின், பத்தாண்டு கால அதிமுக ஆட்சிக்கு அச்சாரம் போட்ட 2011 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவதற்கு மாபெரும் திருப்புமுனையாக இருந்தது கோவையில் ஜெயலலிதா நடத்திய பிரமாண்ட மாநாடுதான்.
அதற்கு முந்தைய ஆண்டில் வெகு விமரிசையாக செம்மொழி மாநாட்டை கருணாநிதி நடத்திய பின், ஜெயலலிதா இந்த மாநாட்டை நடத்தி, சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலமே அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்தார். கோடநாடு செல்லும்போது மட்டுமே கடந்து சென்ற கோவையின் மீது, ஜெயலலிதாவுக்குத் தனிக்கவனம் திரும்பியது அப்போதுதான்.
அதிலிருந்து அதிமுகவிலும், ஆட்சியிலும் கொங்கு மண்டலத்தின் ஆளுமைகள் கோலோச்சத் துவங்கினார்கள். அந்த சூழ்நிலையில் 2011 ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், கோவையில் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்தான் செ.ம.வேலுச்சாமி. அமைச்சராக இருந்த ஒருவரை கோவை மேயராக நிறுத்தி, அதன் தகுதியை உயர்த்தினார் ஜெயலலிதா. அதே ஜெயலலிதாதான், 2014 ஆம் ஆண்டில் அதே வேலுச்சாமியிடமிருந்து பதவியைப் பறித்தார். ராவோடு ராவாக பதவி விலகல் கடிதத்தை வாங்கினார்.
மேயர் தேர்தல் முதல்முறையாக இடைத்தேர்தலாக நடந்தது. அப்போது ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்டு, கோவை மேயராக தேர்வு பெற்றவர்தான், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக சார்பில் நின்று அண்ணாமலையை தோற்கடித்த கணபதி ராஜ்குமார். அவர் எப்படி எதற்காக எப்போது கட்சி மாறினார் என்பதெல்லாம் தனிக்கதை.
நம்ம ‘கரண்ட் மேட்டருக்கு’ வருவோம்…கல்பனாவின் பதவி விலகல் கடிதத்துக்குப் பின், ஜூலை 8 அன்று, கோவை மாநகராட்சி மன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடக்க இருக்கிறது. அதில்தான் புதிய மேயர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
அநேகமாக இன்றோ நாளையோ மேயர் வேட்பாளரை அறிவித்து விடுவார்கள் அல்லது நாளை மறுநாள் கூட்டம் நடக்கும் வரை, சஸ்பென்ஸ் ஆகக் கூட வைத்திருப்பார்கள். அதற்கிடையில், அவர்தான், இவர்தான், அவருக்கு வாய்ப்பேயில்லை என்று ஆயிரம் கற்பனைக் கதைகள் கோவையில் உலவும் பாலக்காடு கணவாய்க் காற்றில் கலந்து கரைந்து கொண்டிருக்கின்றன. நாமும் நமக்குத் தெரிந்த கட்சி வட்டாரத்திலும், உளவுத்துறை வட்டாரங்களிலும் விசாரித்தோம். அப்போதுதான் தெரிந்தது, அது மேயர் தேர்தல் என்பதை விட, சாதிக்கான அங்கீகாரத் தேர்தலாகத்தான் நடக்கப்போகிறது என்று.
பதவியிழந்த கல்பனா, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்; அவரை நீக்கி விட்டு, வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரை மேயராக்கினால், கவுண்டர் சமுதாய மக்கள், திமுகவைப் புறக்கணித்து விடுவார்கள் என்று ஓர் அச்சம் நிலவுகிறது. அதற்கேற்ப 2014 ஆம் ஆண்டில், வேலுச்சாமியைப் பதவியை விட்டுத் தூக்கிய ஜெயலலிதா, மறுபடியும் அதே சமுதாயத்தைச் சேர்ந்த ராஜ்குமாருக்குதான் வாய்ப்பு கொடுத்தார்; மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட மேயருக்கே, அந்த வாய்ப்பு தரப்பட்டபோது, கவுன்சிலர்கள் கூடித் தேர்ந்தெடுப்பதில் ஏன் அதை மாற்ற வேண்டுமென்று கேட்கிறது கவுண்டர் தரப்பு. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் கவுண்டர் சமுதாயத்தின் பெரும்பான்மை மக்களை வளைத்து வைத்திருக்கிறார்கள்.
கட்சிக்காகவும், சில கொள்கைகளுக்காகவும் திமுகவை ஆதரிக்கும் கவுண்டர்களையும் கழன்று போகாமலிருக்க மீண்டும் கவுண்டருக்கே வாய்ப்பு தரப்படும் என்றே நம்புவதாகச் சொல்கிறார்கள் கட்சியில் பொறுப்புகளில் உள்ள கவுண்டர் உடன்பிறப்புகள்.
இதனால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த அம்பிகா தனபாலுக்கே முதல் வாய்ப்பு என்று பலமான நம்பிக்கையோடு இருக்கிறது கொங்கு வட்டாரம். இவர் கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபாலின் மனைவி என்பதில் கூடுதல் அரசியல் முக்கியத்துவம்.
சென்ற 2022 ஆம் ஆண்டில், மேயர் வேட்பாளர் என்று ஊடகங்களில் வண்டி வண்டியாக செய்திகளும், காணொளிகளும், பேட்டிகளும் வந்தபின், கைவிடப்பட்ட நிவேதா சேனாதிபதியும் அதே கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரும் இந்தத் தேர்வுப் பட்டியலில் இருக்கிறார் என்றும் ஒரு தகவல் உலா வருகிறது. 2022 உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றபோது நிவேதாவுக்கு 22 வயதுதான். கோவை மாநகராட்சியின் மிக இளம் வயது கவுன்சிலரும் இவரே.
கட்சியின் மிக முக்கியத் தலைகள் இதற்கு இன்னொரு ரகசியமான ஒரு காரணத்தையும் சொல்கிறார்கள். அந்தத் தேர்தலின்போது, பொறுப்பில் இருந்த ஒருவருக்கு, 22 பெரிய ஸ்வீட் பாக்ஸ்களை, அப்போது மாவட்டப் பொறுப்பில் இருந்த சேனாதிபதி கொடுத்து, தன் மகளை மேயராக்க வேண்டுமென்று கோரியிருந்தாராம்; அவரும் அதற்கு உறுதி கொடுத்து இருந்தாராம். ஆனால் கட்சித்தலைமை வேறு முடிவெடுத்து கல்பனாவை மேயராக அறிவித்து விட, கதி கலங்கிப் போனார் சேனாதிபதி. அலறியடித்து அவரைப் பிடிக்க, அவரும் தன்மையாக சாரி சொல்லி விட்டு, வாங்கியதில் 90 சதவீதத் தொகையைத் திருப்பிக் கொடுத்து விட்டாராம். அதிலும் இன்று வரை ஒன்றோ, ஒன்றரையோ அவருக்கு வந்து சேரவில்லை; அதனால் அவரும் திரும்ப முயற்சியைத் தொடர்கிறாராம்.
கொங்கு வேளாளர் பங்கு அப்படியென்றால், கோவையின் தொழில் வளத்துக்கு அடித்தளமாக இருக்கிற நாயுடு சமுதாயத்துக்கு இந்த வாய்ப்பை வழங்க வேண்டுமென்று தொழில் அமைப்புகளின் முக்கியத் தலைகள் சிலர், திமுக தலைமையிடம் சில அமைச்சர்களை வைத்து காய் நகர்த்துகிறார்களாம்.
இப்போது மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கிற கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வி, அங்குள்ள கிழக்கு மண்டலத்தின் தலைவராக இருக்கிறார். நாயுடு சமுதாயத்துக்கு வாய்ப்புத் தரப்படுவதாக இருந்தால், அவர்தான் முதல் சாய்ஸ் என்கிறார்கள். ஆனால் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த வெற்றிச் செல்வன், துணை மேயராக இருப்பதால் அதற்கு வாய்ப்பிருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
இவ்விரு பெரும் சமுதாயங்களும் ஒதுக்கப்பட்டு விட்டால், அடுத்து நிறையப்பேர் பட்டியலில் வருகிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பவர், இப்போது மாநகராட்சியின் மத்திய மண்டல தலைவராக இருக்கும் மீனா லோகு. அவர் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவரின் கணவர் லோகநாதன், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
மீனா லோகு, பல முறை கவுன்சிலராக இருந்துள்ளார்; நன்கு படித்தவர், பேச்சாளர், கட்சிக்காக பல வழக்குகளைச் சந்தித்தவர் என பல பிளஸ்களை வைத்துள்ளார். ஆனால் அதே அளவுக்கு நிறைய எதிரிகளையும் கட்சிக்குள் சம்பாதித்து வைத்திருக்கிறார். அவரை நியமித்தால் கல்பனாவை விட ஆதிக்கம் மிக்கவராக இருப்பார்; யாரையும் மதிக்க மாட்டார்; அதனால் மறுபடியும் கட்சிக்குள் அதிருப்தி கிளம்பும் என்று ஒரு பேச்சு உலவுகிறது.
இவருக்கு அடுத்ததாக கோவை மாநகராட்சியின் பணிகள் குழு தலைவராக இருக்கும் சாந்தி முருகன் கவுன்சிலரைச் சொல்கிறார்கள். அவர் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். முருகன் தற்போது பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார். பாரம்பரியமான திமுக குடும்பத்திலிருந்து வந்தவர். இதுவரை கோவை மேயராக தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் யாரும் இல்லை என்பதால், ஒரு வாய்ப்பு அவருக்கு இருக்கிறது என்கிறார்கள்.
இவர்களைத் தவிர்த்து, மேற்கு மண்டலத் தலைவராக இருக்கும் தெய்வயானை தமிழ்மறையும் பட்டியலில் இருக்கிறார். அவரும் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரின் கணவர் தமிழ்மறை, திமுக ஐடி விங்கில் மாநில அளவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். தெய்வயானையும் படித்தவர், எல்லோரோடும் இணக்கமாகச் செல்கிறவர் என்று பெயர் வாங்கி வைத்திருக்கிறார்.
இவர்களைத் தவிர்த்து, ரங்கநாயகி, பூங்கொடி, சுபஸ்ரீ உட்பட வெள்ளாளர், யாதவர், பட்டியலினத்தவர் என ஏழெட்டு கவுன்சிலர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறதாம்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் மேயரை வைத்தே, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கோவையில் கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளைச் செய்ய வேண்டுமென்பதால், அதற்குத் தகுதியான ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே திமுக கழகக் கண்மணிகளின் கவலையாக இருக்கிறது.
பலரும் ஒன்றை எதிர்பார்க்கும் நிலையில் யாருமே எதிர்பாராத ஒன்றைச் செய்வதுதான் முதல்வர் ஸ்டாலினின் ஸ்டைல். அதனால் மீண்டும் ஒரு புதுமுகத்துக்கே வாய்ப்பு இருக்கும் என்பதுதான் அவர்களின் கணிப்பாக இருக்கிறது. இந்த கவுன்சிலர்களைப் பற்றி பலவிதமான ப்ளஸ், மைனஸ் தகவல்களைத் திரட்டித் தந்திருக்கிற உளவுத்துறையினரும் அப்படித்தான் என்று தலையை அசைக்கிறார்கள். அத்தனைக்கும் நாளைக்குள் விடை தெரிந்து விடக்கூடும்.
அதற்கு முன்பாக ஒன்று மட்டும் தெரிகிறது…புதிதாக கோவை மேயராக வரப்போகிறவருக்கு எதிர்க்கட்சிகளை விட, சொந்தக்கட்சிக்குள்தான் அதிகமான எதிரிகள் இருக்கப் போகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–பாலசிங்கம்
வயிற்றுப் போக்கைத் தடுத்து நிறுத்த தேசிய அளவிலான இயக்கம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சியளிக்கிறது : ராகுல் கமல் இரங்கல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை : போலீசாருக்கு முதல்வர் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை… சென்னை வரும் மாயாவதி