“போலீஸுக்கு மாமூல், அமைச்சர், எம்.எல்.ஏ ஃப்ரண்ட்ஸ்” : கள்ளச்சாராய மரண வழக்கில் அதிர்ச்சி வாக்குமூலம்!

Published On:

| By Jegadeesh

கள்ளச்சாராய மரண வழக்கில் கைதானவர்கள், மெத்தனாலை வாங்கி விற்றது எப்படி என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்திலும், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியிலும் விஷ சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடித்தது சாராயம் அல்ல, மெத்தனால் எனப்படும் விஷச்சாராயம் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியிருந்தார்.

Who supplied the methanol
ஏழுமலை

இந்நிலையில் இத்தனை பேர் இறப்புக்கு காரணமான மெத்தனால் வழங்கியது யார்?, எங்கிருந்து வந்தது என முக்கிய குற்றவாளிகளிடம் மரக்காணம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கில் தொடர்புடைய திண்டிவனம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மரூர் ராஜா கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி கள்ளச்சாராயம் கடத்தல் மன்னன் புதுச்சேரி ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்று விசாரித்ததில் வில்லியனூர் ஏழுமலை மூலமாக சென்னை வானகரத்தில் உள்ள ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட் கம்பெனியில் இருந்து வாங்கியதாக கூறி அந்த கம்பெனி இருக்குமிடத்தையும் காட்டியுள்ளார் ராஜா.

இதையடுத்து அந்த கம்பெனியின் உரிமையாளர் இளையநம்பி மற்றும் சிலரை நேற்று முன்தினம் இரவு மரக்காணம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், விசாரணையில் இளையநம்பி என்ன வாக்குமூலம் கொடுத்தார் என விசாரணை அதிகாரிகள் வட்டாரத்தில் நாம் விசாரித்த போது,

”‘எனக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பக்கம். 2018-இல் சென்னை வானகரத்தில் ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட் என்ற பெயரில் ’தின்னர்’ தயாரிக்கும் தொழில் செய்து வந்தேன். அதற்கு மூலப்பொருள் மெத்தனால்தான்.

2019, 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமானதாலும், கடன் சுமை அதிகமானதாலும் 2021 இல் கம்பெனியை மூடிவிட்டேன். கம்பெனியில் இருந்த ஆறு பேரல் மெத்தனால் விற்பனை செய்வதற்கு ஆள் தேடினேன். அப்போதுதான் சென்னை நண்பர் ஒருவர் புதுச்சேரி வில்லியனூர் ஏழுமலையை அறிமுகம் செய்தார்.

ஏழுமலைதான் வில்லியனூரில் ஒருவருக்கு ’மூன்று பேரலும்’ , பாண்டிச்சேரி ராஜாவிடம் ’மூன்று பேரலும்’ விற்பனை செய்து கொடுத்தார். மொத்தம் ரூ 66 ஆயிரத்திற்கு விற்பனையானது’ என்று கூறினார்.

அடுத்தபடியாக புதுச்சேரி ராஜாவிடம் போலீசார் விசாரித்தனர். அவர், ‘செங்கல்பட்டு சாராய வியாபாரிக்கு இரண்டு பேரலும், மரக்காணம் முத்துவிடம் ஒரு பேரலும். கொடுத்தேன். நான் இதுவரையில் ஆர்எஸ் (ரெட்டிப்பெய்டு ஸ்பிரிட் –  வடித்துப்பிரித்த சாராயம்) தான் கள்ளத்தனமாக விற்பனை செய்துவந்தேன். மெத்தனால் கொடுத்தது இதுதான் முதல்முறை.இவ்வளவு பெரிய விபரீதம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்றவரிடம்

சரி, புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கள்ளத்தனமாக எப்படி சரக்கை கடத்துற என போலீசார் கேட்க

‘பெரும்பாலும் நான் போலீஸ்கிட்ட மாட்டமாட்டேன். அப்படியே மாட்டினாலும் சரக்கை விட்டுட்டு என் ஆட்கள் வந்துவிடுவார்கள். சரக்கு எடுத்து போனது என் வண்டி என தெரிந்ததும் போலீசார் என் பெயரை சேர்த்து கேசு மட்டும் போடுவார்கள். இதுபோல் தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட கேசுகள் உள்ளன’

சரி போலீஸூக்கு மாமூல் கொடுப்பியாமே ?

‘ஆமாம் சார் போலீஸுக்கும் கொடுப்பேன், அரசியல் பிரமுகர்களுக்கும் கொடுப்பேன், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ எனக்கு நல்ல ஃபிரண்ட். பாஜகவிலும் எம்எல்ஏ, அமைச்சர் என பிரண்ட்ஸ் இருக்காங்க, அவர்களுக்கும் செலவு செய்வேன்’ என வாக்குமூலம் கொடுத்தார்.

மரக்காணம் முத்துவிடம் விசாரணை செய்ததில், ‘மெத்தனாலில் எவ்வளவு தண்ணீர் கலக்க வேண்டும் என்ற அளவு தெரியவில்லை. ஒரு லிட்டருக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் கலந்துவிட்டேன். நான்கு லிட்டர் கலந்து இருந்தால் இப்படி ஒரு விபரீதம் நடந்து இருக்காது. இறந்துபோன குடும்பம் எல்லாமே எனக்கு நல்லா தெரிந்தவர்கள். அவர்கள் முகத்தில் எப்படி முழிக்கப்போரேனோ என அழுதார்.

சரி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கொடுத்தியாமே? என்று கேட்டதற்கு

‘வழக்கமாக இரண்டு பாக்கெட் 100 ரூபாய்க்கு விற்பனை செய்வேன். மெத்தனால் மலிவான விலையில் கிடைத்ததால் நான்கு பாக்கெட் 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய சொன்னேன் ” என்று வாக்குமூலத்தில் முத்து கூறியதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தவர்கள். மெத்தனால் கிடைத்ததும் அதிக லாபம் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் மக்களை மாய்ச்சிவிட்டார்கள்” என்கிறார்கள்.

 வணங்காமுடி

கர்நாடக வெற்றி: காங்கிரஸை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்

விஷச்சாராய மரணம்: அறிக்கை கேட்கும் ஆளுநர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment