ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்து, வாடகை வீட்டில் வசிப்பவராக நீங்கள் இருந்தால், மாத வாடகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்கிறது மத்திய அரசின் புதிய அறிவிப்பு.
ஆடி கார் முதல் அரிசி வரை ஜிஎஸ்டி வரி!
இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். ஒன்றிய கலால் வரி, கூடுதல் சுங்க வரி, சேவை வரி என பல முறைகளின் வசூலிக்கப்பட்ட வரியை, ’ஒரே இந்தியா, ஒரே வரி’ என்னும் நோக்கத்தில் ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கான வரி விகிதங்களை முடிவு செய்ய இதற்காகத் தனியாக ஜிஎஸ்டி கவுன்சிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஆடம்பரமாக இருக்கும் ஆடி கார் முதல், அத்தியாவசிய உணவான அரிசி வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வாழ்க்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகின்றன.
வீட்டு வாடகைக்கு 18 % ஜிஎஸ்டி வரி!
இந்நிலையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகளின்படி, வாடகைக்கும் குடியிருக்கும் வீட்டுக்கும் வரி கட்டவேண்டும் என்ற புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதன்படி ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகைதாரர் மாத வாடகை வழங்கும்போது ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் செலுத்த வேண்டும். இந்த புதிய விதிமுறை கடந்த ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும் இந்த விதிமுறை ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துள்ள வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும்.
கடந்த ஜூலை 17ம் தேதி வரைவீட்டு குடியிருப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ வாடகைக்கு விட்டிருந்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதேவேளையில் வணிக பயன்பாட்டிற்காக இடங்கள், அலுவலகங்கள், காலி இடங்களை வாடகைக்கோ அல்லது லீசுக்கோ வழங்கினால் மட்டுமே அதற்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் ஜூலை 18 முதல் அமலுக்கு வந்த புதிய விதியின்படி, ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகைதாரர், தான் குடியிருக்கும் வீட்டுக்கு மாத வாடகை வழங்கும்போது அதோடு சேர்த்து அவர் ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிஸம்(ஆர்சிஎம்) விதியின் கீழ் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். இந்த 18 சதவீத வரியை வாடகைதாரர் உள்ளீட்டு வரி கிரெடிட் மூலம் கழித்துக்கொள்ளலாம்.
யார் வரி செலுத்த வேண்டாம்?
இந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியானது, ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும், அவர் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வீட்டின் உரிமையாளர் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதேவேளையில் சாதாரண வீடு, பிளாட் அல்லது சிறிய வீட்டில் வாடகைக்கு வசிக்கும் மாத சம்பளதாரர்கள், குறிப்பாக ஜிஎஸ்டியில் பதிவு செய்யாதவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
ஜிஎஸ்டியின் கீழ் யார் பதிவு செய்ய வேண்டும்?
ஜிஎஸ்டியின் கீழ் அனைவரும் பதிவு செய்ய முடியாது. மாறாக ஆண்டுக்குக் குறிப்பிட்ட உச்ச வரம்பிற்கு மேல் தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த உச்ச வரம்பு என்பது தொழிலுக்கு ஏற்ப மாறும். ஒரு நிதியாண்டில் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சமும், பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சமும் உச்ச வரம்பாகும்.
கிறிஸ்டோபர் ஜெமா