அதிமுகவை இதுவரை காப்பாற்றியது தொண்டர்கள் தான் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 19) தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் சோமண்ணா, மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மத்திய அமைச்சர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாடுக்கும், கர்நாடகாவுக்கும் பிரச்சினை இருக்கும் போது, அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை பாஜக அரசு நீர்வளத்துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் ஆகும்.
ஏற்கனவே தண்ணீர் கிடைக்காமல் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கின்றன” என்றார்.
அப்போது அவரிடம் திமுகவுக்கு பி டீமாக நீங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என டிடிவி தினகரன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “எதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். டிவியிலும், மீடியாவிலும் வர வேண்டும். இல்லை என்றால் மக்கள் அவரை மறந்துவிடுவார்கள்” என்றார்.
சசிகலா அதிமுகவை காப்பாற்றுவேன் என்று சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “இத்தனை நாளாக யார் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ரீ எண்ட்ரி என்றால்…மூன்று ஆண்டுகள் இடைவெளி எடுத்துவிட்டு மீண்டும் வந்து சேர இது என்ன வேலைக்கு போகிற விஷயமா…
இத்தனை நாட்களாக அதிமுகவை தொண்டர்கள்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் எந்த சரிவும் இல்லை. தோல்வியை சந்திக்காத அரசியல் கட்சி எது?.
அதிமுகவில் எல்லா சாதியினரும் உள்ளனர். அதிமுக சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுக அரசில் கொடநாடு வழக்கில் கொலையாளியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். ஆனால் திமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் வாங்கிக்கொடுத்தனர்.
அப்படியானால் கொலைகுற்றவாளியை காப்பாற்றுவது திமுகதான்” என்றார்.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்கள் என்று திமுகவினர் சொல்கிறார்களே…
“கற்பனையான கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? திமுக ஆட்சியில் மக்கள் வேதனைதான் படுகின்றனர். புதிய திட்டம் எதையும் திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் 5.18 லட்சம் கோடி கடன்தான் இருந்தது.
ஆனால் திமுகவினர் ஆட்சிக்கு வந்தது முதல் 3.5லட்சம் கோடி கடன் கொடுத்திருக்கிறார்கள். 40க்கு 40 இடத்தில் வந்து என்ன செய்தார்கள். நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க சொல்லுங்கள்” என பதிலளித்தார்.
2026 தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி வைத்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓ.பன்னீர்செல்வம். சுயநலமாக செயல்படுவார். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமைதான். தேர்தலில் பலாபழத்தை வைத்து பூஜை செய்துள்ளார்” என்று விமர்சித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
காலாவதியான ’காமராஜர் ஆட்சி’ வாசகம்!
மீண்டும் ‘பேட்ட ரேப்’ கூட்டணி: ரகுமானுடன் இணையும் பிரபு தேவா