பாஜக நிர்வாகிகள் திருச்சி சூர்யா- டெய்சி ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடலை பதிவு செய்து, மீடியாவுக்குக் கொடுத்தது யார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டுபிடிக்க வேண்டுமென காயத்ரி ரகுராம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக ஆறு மாத காலத்துக்கு பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம், தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.
நேற்று இரவு, “உங்கள் தலைமையையும் பதவியையும் காப்பாற்ற 100 பொய்களைச் சொல்லலாம். ஆனால் ஒரு உண்மை உங்கள் 100 பொய்களை அழித்துவிடும். தலைவனாக சித்தரிக்கும் முன் மனிதனாக இரு” என்று ஒரு ட்விட்டர் பதிவிட்டார் காயத்ரி.
இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையையே அவர் பெயர் குறிப்பிடாமல் தாக்கினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக நிர்வாகிகள் காயத்ரியின் அந்த பதிவில் அவருக்கு கடுமையாக பதிலளித்தனர்.
ஆனால், “நான் இதை ஒரு புத்தகத்தில் படித்தேன். ஆனால் இப்போது கருத்துகளைப் படிக்கிறேன்.
ஏன் இவ்வளவு வெறுப்பு? படித்ததை பிடித்தது, இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் என்று நினைத்தேன்” என்று மீண்டும் அண்ணாமலை ஆதரவாளர்களை வெறுப்பேற்றினார் காயத்ரி ரகுராம்.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 29) காலை காயத்ரி விடுத்திருக்கும் செய்தியில், “நான் சில நேர்காணல்களை பார்த்தேன். நான் திருச்சி சூர்யா ஆடியோவை கசியவிட்டதாக மக்களிடம் என்னை கட்டமைக்கிறார்கள்.
அவர்கள் அப்படி சொல்லச் சொன்னார்களா அல்லது வதந்திகளை நம்புகிறார்களா அல்லது வதந்திகளை உருவாக்குகிறார்களா என்று எனக்குத் தெரியாது.
ஆனால் முதலில் உரையாடலை பதிவு செய்தவர் நான் அல்ல. அதேபோல ஆடியோவை மாநில அலுவலகத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நான் கொடுக்கவில்லை.
பிரபல ஊடகவியலாளர் ஒருவர் இந்த ஆடியோவை வெகு காலத்துக்கு முன்பே பெற்று உரையாடலைக் கேட்டார் என்று ஒரு பேட்டியில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
மீடியாவுக்கு ஆடியோவை யார் கொடுத்தார்கள் என்று அண்ணாமலை கண்டுபிடிப்பது எளிது. சில பிரபல அரசியல் விமர்சகர்கள் இந்த குற்றச்சாட்டுகளை என் மீது கூறி வருகிறார்கள். அதற்காக பாஜக மாநில தலைவரிடம் புகார் அளித்துள்ளேன்.
திருச்சி சூர்யா ஆடியோவை மீடியாக்களுக்கு கசியவிட்டது யார் என்பதை கண்டுபிடித்து அந்த நபர் மீது அண்ணாமலை உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம்.
மேலும், ”இந்த பொய்களால் என் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதை என் குடும்பம் ஏற்காது. என் குடும்பத்திற்கு இது அநீதி” என்றும் குறிப்பிட்டுள்ளார் காயத்ரி.
24 ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் பாஜக அலுவலகத்தில் நடந்த விசாரணைக்குப் பின் சூர்யாவும், டெய்சியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, ‘நாங்கள் அக்கா தம்பியாக பழகுகிறோம்.
இந்த பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொண்டோம்’ என்று அறிவித்த நிலையில் சூர்யாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் இந்த விவகாரத்தில் அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஆடியோவை மீடியாவுக்கு கசியவிட்டது யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் காயத்ரி ரகுராம்.
மேலும் இந்த பதிவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், மத்திய அமைச்சர் முருகன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
தமிழக பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், தமிழக பாஜக பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி, அந்த ஆடியோவில் சூரியாவுடன் பேசிய டெய்சி, தமிழக பாஜக நிர்வாகிகள் கரு. நாகராஜன், சி.டி.நிர்மல் குமார் ஆகியோரை டேக் செய்திருக்கிறார் காயத்ரி.
இதன் மூலம் இப்பிரச்சினையை காயத்ரி சும்மா விடுவதில்லை என்றும் தேசிய தலைமை வரை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கிறார் என்றும் தெரிகிறது. ஏற்கனவே காயத்ரி அளித்த பேட்டிகளில் டெல்லி பிரமுகர்களிடம் பேசியிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, “அந்த ஆடியோ பதிவு மொத்தம் 19 நிமிடங்கள் இருக்கிறது. அந்த பதிவில் டெய்சி தன்னை ஆபாசமாக பேசியது எடிட் செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் சூர்யா தெரிவித்திருந்தார்.
அந்த பதிவு வேலூர் பாஜக பிரமுகர் மூலமாகவே வெளியிடப்பட்டுள்ளது எனவும் சூர்யா விசாரணையில் தெரிவித்தார்” என்று நவம்பர் 26 ஆம் தேதி மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை பகுதியில், ‘சூர்யா-டெய்சி 19 நிமிட ஆடியோ: பாஜக விசாரணையில் வெளிவந்த பகீர்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில்தான் காயத்ரி ரகுராம், ‘இந்த ஆடியோவை வெளியிட்டது யார் என்று அண்ணாமலை கண்டுபிடிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதாவது இந்தப் பிரச்சினையை அண்ணாமலை அப்படியே முடித்துவிட முயல்வதாக கூறப்படும் நிலையில்… இந்த விவகாரத்தை விடாமல் அடுத்தடுத்த பொறிகளை கிளப்பிவிட்டு வருகிறார் காயத்ரி.
நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சதி: மு.க.ஸ்டாலின்
நடிகை ஐஸ்வர்யா மேனன்! வைரல் போட்டோஸ்..!