திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் 7 தொகுதிக்கு வேட்பாளர் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி, மயிலாடுதுறை தொகுதிகளின் வேட்பாளர் பெயர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது.
திருநெல்வேலி தொகுதியை வாங்குவதற்கு காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன், பால்ராஜ், ராபர்ட் புரூஸ் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.
ஒருவழியாக இன்று (மார்ச் 25) திருநெல்வேலி வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் (62) அறிவிக்கப்பட்டிருக்கிறார். நாடார் சமூகத்தைச் சேர்ந்த சி.எஸ்.ஐ கிறித்தவரான ராபர்ட் புரூசின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை ஆகும். இவர் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் என தொடர்ந்து நீண்டகாலமாக கட்சியில் இருந்து வருபவர். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் பின்னால் இருந்து அனைத்து வேலைகளையும் கட்சிதமாக செய்து முடிப்பதில் வல்லவர் என்றும் அதனால் அப்பகுதியில் மக்கள் செல்வாக்கும் அவருக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.
2015 ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர். கேரள முன்னாள் முதல்வர் மறைந்த உம்மன் சாண்டிக்கு நெருக்கமாக இருந்தவர். ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்ட போது அங்கேயே தங்கி இருந்து தேர்தல் வேலைகளை மும்முரமாகப் பார்த்து ராகுலின் பாராட்டைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி தொகுதியில் கிறித்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எனவே CSI கிறித்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சீட்டு வழங்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பியிருக்கின்றனர். அப்போது வேட்பாளர் தேர்வுக்கான பட்டியலில் ராபர்ட் புரூசின் பெயர் இருந்ததால் தொகுதிக்கு இவர்தான் வேட்பாளர் என்று காங்கிரஸ் மேலிடம் டிக் அடித்திருக்கிறதாம். இன்னொரு பக்கம் திருநெல்வேலியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள நயினார் நாகேந்திரன் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். நயினார் நாகேந்திரனுக்கு எதிராக ராபர்ட் புரூசை களமிறக்கினால் கிறித்தவ நாடார் மக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்பது காங்கிரஸ் கட்சியின் கணக்காக இருக்கிறதாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!
வேட்புமனு தாக்கல்… சேகர்பாபு – ஜெயக்குமார் இடையே வாக்குவாதம்: என்ன நடந்தது?
திமுக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் சிக்கல்!
Dummy piece.