மன்னை டு சென்னை அல்ல… சென்னை டு மன்னை: யார் இந்த டி.ஆர்.பி.ராஜா?

அரசியல்

2021இல் திமுக ஆட்சி அமைந்த பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகு திருவாரூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா திமுக அரசில் அமைச்சராக மே 11 ஆம் தேதி பதவியேற்கிறார்.

கோ.சி.மணி, உபயதுல்லா, மதிவாணன் என்று டெல்டா தொடர்ந்து திமுக ஆட்சியில் அமைச்சர்களை பெற்று வந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் டெல்டாவில் இருந்து யாரும் அமைச்சராகவில்லை.

1989 இல் இருந்து ஆறு முறை திருவையாறு தொகுதியில் வென்ற துரை. சந்திரசேகரன், கலைஞர் மறைவுக்குப் பின் திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலிலும் பின் 2021 தேர்தலிலும் வென்ற பூண்டி கலைவாணன், 2011, 16, 21 என மூன்று முறை மன்னார்குடி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற டி.ஆர்பி.ராஜா மற்றும் சாக்கோட்டை அன்பழகன், திருவிடைமருதூர் கோவி செழியன் ஆகிய பெயர்கள் அமைச்சர்கள் பட்டியலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்… முதல்வர் ஸ்டாலின் டெல்டாவில் யாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை.

’நானே டெல்டா காரன் தான்’ என்று ட்விட்டர் பதிவிட்டு டெல்டாவில் இப்போது யாருக்கும் அமைச்சர் பதவி இல்லை என்பதை சொல்லிவிட்டார். இரு வருடக் காத்திருப்புக்குப் பின் டெல்டாவில் இருந்து முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவரும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

டிஆர்பி ராஜாவை சுற்றி சாதி வளையம்

16ஆவது சட்டமன்றத்தின் முதல் நாளான 2021 மே 11ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது திமுகவின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றபோது தனது தாத்தாவின் பெயரை சாதிப் பின்னொட்டோடு குறிப்பிட்டுப் பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று கூறி பதவியேற்றுக் கொண்டார். அதே பாணியில் சொல்வதாக கருதி, ‘தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ராஜா ஆகிய நான்’ என்று பதவியேற்றுக் கொண்டார் டி.ஆர்.பி.ராஜா. இது அப்போதே அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதேநேரம் டெல்டாவில் தேவர் சாதியினரின் அடையாளமாக தன்னை ராஜா முன்னிறுத்திக் கொள்கிறார் என்று அந்த சமுதாயத்துக்குள் பெருமை பேசப்பட்டது.

யார் இந்த டி.ஆர்.பி.ராஜா? எப்படி மன்னை திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆனார்?

கலைஞரின் டெல்டா கவலை! ராஜாவை அறிமுகப்படுத்திய பாலு

தஞ்சை மாவட்டம் தளிக்கோட்டையை சேர்ந்த டி.ஆர்.பாலு ஒரு கட்டத்தில் சென்னை மாநகரத்திலேயே தீவிர அரசியல் செய்தார். அதன் பின் தஞ்சை மாவட்டத்தில் அரசியல் செய்தார். பின் மீண்டும் சென்னையை மையமாகக் கொண்ட அரசியலுக்குத் திரும்பிவிட்டார். ஆனால் அவருக்கு டெல்டா மீது ஒரு கண் இருந்துகொண்டே இருந்தது.

2006 ஆட்சி முடிந்து 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக தயாராகிக் கொண்டிருந்த நேரம். அப்போது டெல்டாவில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்துக்கு தளபதியாக நின்று செயலாற்றிக் கொண்டிருந்தார் திவாகரன். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் திவாகரனிடம் ஏதோ ஒரு வகையில் இணக்கமாகவே இருந்தார்கள். அப்போது கலைஞர் டி.ஆர்.பாலுவை அழைத்தார்.

‘டெல்டாவுல திமுக ஒரு காலத்துல எப்படி இருந்துச்சுனு உனக்கே தெரியுமில்ல. இப்ப பாத்தியா” என்று தனது கவலையைப் பகிர்ந்துகொண்டார். ’இந்த சமரசத்துக்கு ஆளாகாதவரா நாம ஒரு ஆளுமையை உருவாக்கணும்யா’ என்று பாலுவிடம் கூறினார் கலைஞர். அப்போதுதான் டி.ஆர்.பாலு, ‘அண்ணே… என் பையன் ராஜா நல்லா படிச்சிருக்கான். அரசியல்லயும் ஆர்வமா இருக்கான். இந்த காலத்து டெக்னாலஜியோட அரசியல் செய்வான். அவனை வேணும்னா மன்னார்குடியில இறக்கிப் பாக்கலாமா?’ என்று கேட்டிருக்கிறார்.

சென்னை டு மன்னை

1976ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிறந்த டி.ஆர்.பி. ராஜா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி பள்ளியில் படித்து முடித்து, சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் படித்தார். சென்னை பக்லைக்கழகத்தில் சைகாலஜியில் முதுநிலைப்பட்டம் பெற்ற ராஜா… வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் `வாக்காளர்கள் மனநிலை’குறித்து ஆய்வுகள் செய்து முனைவர் பட்டமும் பெற்றவர்.

பாலுவின் பேச்சைக் கேட்ட கலைஞர், ‘பாலு… உன் மகனை மன்னார்குடி தொகுதியில நிறுத்துவோம்யா’ என்று பச்சைக் கொடி காட்டினார். இப்படித்தான் சென்னையில் இருந்து மன்னை அரசியலுக்கு வந்தவர் டி.ஆர்.பி.ராஜா.

எம்.எல்.ஏ.வாக செயல்பாடு எப்படி?

2011, 2016 என தொடர்ந்து வெற்றி பெற்றார் ராஜா. ஆனாலும் அப்போது ஆளுங்கட்சியாக அதிமுக இருந்ததால் தொகுதிக்காக முழுமையாக அவரால் செயல்படமுடியவில்லை. ஆனபோதும் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தினார். சட்டமன்றத்திலே தொகுதிக்காக நிறைய பேசினார்.

2021 இல் மீண்டும் மன்னார்குடியில் நின்று வென்றதும் திமுக ஆட்சியில்தான் எம்.எல்.ஏ.வாக முழு வீச்சில் செயல்படத் தொடங்கினார் ராஜா. இப்போது மாநில திட்டக் குழு உறுப்பினராகவும் இருப்பதால் அது அவருக்கு எளிதானது.

மன்னார்குடியில் இருக்கும் காமராஜர் பேருந்து நிலையம் மிகப் பழமையானது. மன்னை நகரின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு பேருந்து நிலையம் இல்லை. இதனை கருத்தில் கொண்டு சுமார் 27 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையத்தைக் கொண்டுவர முதல்வரிடம் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் திட்டக் குழு உறுப்பினர் என்ற வகையிலும் வலியுறுத்திப் பெற்றார். சில நாட்களுக்கு முன்பு கூட புதிய பேருந்து நிலையப் பணிகளை பார்வையிட்டார் ராஜா. இது மன்னை மக்களுக்கு முக்கியமான ஒரு தேவை.

மன்னார்குடி கோயில் தெப்பக்குளம் புகழ் வாய்ந்தது. அதில் படகு சவாரி விடுவதற்கான பணிகளையும் செய்துகொண்டிருக்கிறார் டி.ஆர்.பி.ராஜா. மன்னார்குடி நகரத்தை விரிவாக்கம் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

பரவாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக ராஜா செய்த வேலை

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உள்ளடக்கிய பரவாக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து இதற்காக போராடி வருகிறார் ராஜா. திமுக ஆட்சி அமைந்தவுடன் அதற்காக இடத் தேர்வும் நடைபெற்று பணிகளும் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் சுகாதார நிலையம் அமையும் இடத்துக்கு செல்லும் பாதை இன்னொருவரின் சொந்த நிலம் என்று தெரியவந்தது. இந்த நிலையில் அந்த இடத்தின் சொந்தக்காரரை கூப்பிட்டுப் பேசிய ராஜா, அந்த இடத்தை தன் சொந்தப் பணத்தைப் போட்டு கிரயம் செய்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான பாதைக்காக கொடுத்திருக்கிறார். இது பரவாக்கோட்டை மக்களிடையே ராஜாவுக்கு பெரும் நற்பெயரைக் கொடுத்திருக்கிறது.

இப்படி பல விஷயங்களில் ராஜாவின் அரசியலும் சட்டமன்ற உறுப்பினர் பணிகளும் மன்னார்குடி மக்களை கவர்ந்திருக்கின்றன.

இதற்கிடையே கட்சியிலும் தனக்கான செல்வாக்கை படிப்படியாக உயர்த்திக் கொண்டார் ராஜா. உதயநிதியோடு நல்ல நெருக்கமாகிவிட்டார்.

திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் அணியின் செயலாளராக இருந்த ராஜா, பின் ஐடி விங் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தந்தை டி.ஆர்.பாலுவும் மகன் ராஜாவும் வெளிப்படையாக பாசத்தை கொட்டிக் கொள்வதில்லையே தவிர, மன்னார்குடியில் ராஜாவின் அரசியல் பயணத்தைத் தொடக்கி வைத்து வெற்றி பெற வைத்ததில் டி.ஆர்.பாலுவின் பங்கு முக்கியமானது. ’

கலைஞரிடம் பேசி ராஜாவை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய டி.ஆர். பாலு… இப்போது ராஜா அமைச்சராகும் வாய்ப்பு வந்தவுடன் அதற்கு தடையாக இருந்துவிடக் கூடாது என்று டெல்டா மாவட்ட திமுக சீனியர்கள் துரை சந்திரசேகரன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோரிடம் இமேஜ் பார்க்காமல் சமரசம் பேசி தன் மகனுக்கு ரூட்டை க்ளியர் செய்திருக்கிறார்.

ராஜாவிடம் திமுக எதிர்பார்ப்பது என்ன?

ஒரு காலத்தில் கம்யூனிஸ்டு கோட்டையாக இருந்த டெல்டாவை திமுக தனது கோட்டையாக்கியது. பிறகு அதிமுகவின் சசிகலா குடும்பத்தினர் டெல்டாவில் திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிப் பிரமுகர்களை விட தங்கள் சாதிப் பாசத்தில் முடிந்து வைத்திருந்தனர். கலைஞர் இதை நினைத்துதான் கவலைப்பட்டார்.

இப்போது ராஜாவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில்… டெல்டாவில் திமுகவின் செல்வாக்கை பழையபடி உயர்த்த வேண்டும், சாதி இணக்கங்களைத் தாண்டி திமுக என்ற கட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான் தலைமை ராஜாவிடம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு. அதை ராஜா நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

ஆரா

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை: உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பாளர் மனு!

டிஎம்கே ஃபைல்ஸ்: அண்ணாமலை மீது ஸ்டாலின் அவதூறு வழக்கு!

Who is this TRB Rajaa
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *