ஆக்ஸ்போர்டு டூ அரசியல் – தலைநகருக்கு மீண்டும் பெண் முதல்வர் : யார் இந்த அதிஷி?

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி மாலை திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

கெஜ்ரிவாலின் வருகையை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடிய நிலையில் அவர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்த 48 மணி நேரத்தில் ராஜினாமா முடிவை அறிவித்த கெஜ்ரிவால், “நான் இல்லாத நேரத்தில் அதிஷி என்னுடைய இடத்தில் இருந்து தேசிய கொடியேற்ற வேண்டும் என்று நான் துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுதினேன். அதற்குக் கிடைத்த பதிலில், இனி ஒருமுறை உன்னிடம் இருந்து  எனக்கு கடிதம் எழுதினால் உன்னுடைய குடும்பத்தை பார்க்கவே முடியாது என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

நான் சிறையில் இருந்த போது என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை. எனக்கு ஜனநாயகத்தின் பலம் தேவைப்பட்டது. சிறையில் இருந்தவாறு ஆட்சியை நடத்த முடியும் என்று நிரூபித்து விட்டேன். இனி மக்கள் எனக்கு தீர்ப்பு வழங்கும் வரை நான் முதல்வர் நாற்காலியில் உட்காரமாட்டேன்” எனக் கூறியிருந்தார்.

மக்கள் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் வரை மற்றொரு ஆம் ஆத்மி தலைவர் முதல்வர் பொறுப்பு வகிப்பார் என்றும் அவர் யார் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் குழு இரண்டு நாட்களுக்குள் கூடி முடிவெடுப்பார்கள்’  என்றும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

கெஜ்ரிவாலின் இந்த முடிவை பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் நாடகம் என்று கடுமையாக விமர்சித்தன.

காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்ஷித் கூறுகையில், “எந்தவொரு கோப்புகளையும் தொடுவது அல்லது முதலமைச்சர் இருக்கையில் அமர்வது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியே வரும்போது இப்படி எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதுபோன்ற சூழலில் தான் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவை அறிவித்து நாடகம் ஆடுகிறார். சொல்லப்போனால் அவர் முதல்வராக இருக்க தகுதி அற்றவர். அவர் முன்னதாகவே பதவி விலகியிருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இப்படி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்தது.  கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது ஆம் ஆத்மியின் நிலைப்பாட்டை செய்தியாளர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வந்த கல்வித்துறை அமைச்சர் அதிஷி  அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வந்தன.

அதிஷி பெயரோடு, சௌரப் பரத்வாஜ், ராகவ் சதா, கைலாஷ் கெஹ்லாட், சஞ்சய் சிங் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.

இந்நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று (செப்டம்பர் 17) அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அவரது தலைமையில் கூடியது.

இந்த கூட்டத்தில், அர்விந்த் கெஜ்ரிவால் அதிஷியின் பெயரை முன்மொழிந்த நிலையில் ஆம் ஆத்மி சட்டமன்றக் குழுத் தலைவராக  அவரை சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஒருமனதாக தேர்ந்தெடுத்தது.

யார் இந்த அதிஷி?

1981ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான விஜய் சிங் மற்றும் திரிப்தா வாஹி தம்பதிக்கு மகளாக பிறந்தார் அதிஷி.

டெல்லியில் ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் படித்த அதிஷி, உயர் கல்வியை செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பயின்றார்.

பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தொடர்ந்து அங்கேயே கல்வி ஆராய்ச்சியில் மேலும் ஒரு முதுநிலை பட்டத்தையும் பெற்றார்.

அதன்பிறகு மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் கல்விக்காக ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார். ஆந்திராவில் உள்ள ஒரு பள்ளியில் சிறிது காலம் வரலாறு மற்றும் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பின்னர் ஆம் ஆத்மியில் இணைந்த அதிஷி 2013 டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் போது தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவில் இருந்தார். கட்சியின் கொள்கைகளை வடிவமைத்த முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

முதலில் அதிஷிக்கு அவரது பெற்றோர்  ‘அதிஷி மார்லெனா சிங்’ என்றே பெயர் வைத்தனர். மார்க்ஸ் மற்றும் லெனினின் பெயரை இணைத்து  மார்லெனா என வைத்திருக்கின்றனர். ஆனால் 2018முதல் மார்லெனா என்ற துணை பெயரை அதிஷி பயன்படுத்தவில்லை. அதிஷி என்பதை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

பெயரை நீக்கியது முற்றிலும் எனது தனிப்பட்ட முடிவு என்று அதிஷி கூறிய நிலையில், இரண்டு கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதிகளின் பெயரை இணைத்து அதிஷிக்கு பெயரிடப்பட்டிருப்பதால் அது பாஜகவின் கிசுகிசு பிரச்சாரத்துக்கு வழிவகுத்துவிடும். அதோடு அவர் வெளிநாட்டவர் அல்லது கிறிஸ்தவர் என முன்னிறுத்தி பாஜக பிரச்சாரம் செய்யும்  என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூறினர்.

அதிஷி 2018 முதல் அப்போதைய கல்வித் துறை அமைச்சர் மணிஷ் சிசோடியாவின் ஆலோசகராக இருந்தார். தேசிய தலைநகரில் அரசு நடத்தும் பள்ளிகளில் கல்வி நிலையை சீரமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மகிழ்ச்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதாவது புத்தகம் இல்லா வகுப்புகள். மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவையும் கற்பிக்கப்படுகிறது. டெல்லி அரசு பள்ளிகள் ஏசி வகுப்பறை, டிஜிட்டல் பாடத்திட்டங்கள் என தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படுகிறது.

இந்த பள்ளிகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது தமிழ்நாட்டிலும் டெல்லியில் இருப்பது போல பள்ளிகள் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார்.

இந்த அளவுக்கு டெல்லி பள்ளிக் கல்வித் துறையில் முக்கிய பங்காற்றியவர் அதிஷி.

2019 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் சார்பில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி, பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் தோல்வியுற்றார்.

கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில் தெற்கு டெல்லியின் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு, 11,422 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தரம்பீர் சிங்கை தோற்கடித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்கு உரியவரான அதிஷி தற்போது, பொதுப்பணித்துறை, தண்ணீர், மின்சாரம், கல்வி உட்பட 14 துறைகளுக்கு அமைச்சராக உள்ளார்.

கெஜ்ரிவால் கைதுக்கு பின்னர் தன்னை பாஜகவில் சேரும்படியும், அப்படி சேராவிட்டால் ஆம் ஆத்மி தலைவர்களை போல சிறை அடைக்கப்படுவேன் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இந்த மிரட்டலுக்கு எல்லாம் அடிப்பணியமாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார் அதிஷி.

தான் உட்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிஷி கூறியிருந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கு, “பாஜக புகார் கொடுத்தால் மட்டும் விரைந்து செயல்படும் தேர்தல் ஆணையம், ஆம் ஆத்மி கொடுக்கும் புகார்களுக்கு மட்டும் செவி சாய்ப்பதில்லை. சிபிஐ, அமலாக்கத் துறை தேர்தல் ஆணையம் என அனைத்தும் பாஜகவுக்கு அடிபணிந்துவிட்டன” என குற்றம்சாட்டியிருந்தார் அதிஷி.

இப்படி கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது ஆம் ஆத்மி கொள்கைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து தேசிய அளவில் அக்கட்சியின் முகமாகவே மாறினார் அதிஷி.

இந்தசூழலில் தான் இடைக்கால முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைநகருக்கு 43 வயதே ஆன பெண் ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டின் இளம் முதலமைச்சர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். 1991ல் தனது 43-ஆவது வயதில் தமிழக முதல்வராக ஜெயலலிதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்  என்பது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக 1998 -2013 வரை 15 ஆண்டுகள் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீக்‌ஷித் டெல்லி முதல்வராக பதவி வகித்தார். அதன்பிறகு மூன்று முறை கெஜ்ரிவால் முதல்வராக இருந்த நிலையில் மீண்டும் ஒரு பெண் தலைநகருக்கு முதல்வராகியுள்ளார்.

அதிஷி டெல்லியில் தேர்தல் நடக்கும் வரை இடைக்கால முதல்வராக இருப்பார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”நடக்காத விஷயங்களை பரப்பாதீங்க” : குமுறும் குக் வித் கோமாளி மணிமேகலை

பக்கிங்ஹாம் மர்டர்ஸ் : விமர்சனம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts