ஸ்ரீராம் சர்மா
இப்படி ஒரு தலைப்பில் எழுத நேர்ந்துவிட்டதே என மனம் நொந்து கொண்டாலும், கலகங்கள் யாவும் நன்மையை நோக்கியே எனுமொரு சொலவடையும் இங்குண்டல்லவா ? நம்பித் தொடர்கிறேன்…
நிற்க !
திருவள்ளுவர் பிறந்த மண் எது ?
மைலாப்பூரில்தான் தோன்றினார் எனச் சிலர் கொண்டாட, அல்ல அந்தப் பேராசான் தோன்றியது நெல்லை பெருங்குளத்தில்தான் என்பார் சிலர்.
மதுரையில் பிறந்தார், காங்கேயத்தில் பிறந்தார், விழுப்புரத்தில்தான் பிறந்தார் என உரிமை கொண்டாடி சொல்லக் கூடுமானாலும், விஷயம் என்னவோ ஒன்றுதான்.
திருவள்ளுவர் தோன்றியது தமிழ்நாட்டில்தான். அதில் மாற்றுக் கருத்து இருந்துவிட முடியாது.
நிற்க !
திருவள்ளுவர் பிறந்த நாள் எது ?
மரியாதைக்குரிய பெரியவர் சாமி தியாகராஜன் அவர்கள் அவரது நீண்ட நெடிய ஆய்வுகளோடு பல்லாண்டுகளாக அது குறித்து எழுதியும் பேசியும் வருகிறார். அது குறித்த ஞானம் எனக்கில்லை என்பதால் முன்னாள் கமிஷனர் வள்ளுவர் குரல் சி. ராஜேந்திரன் அவர்களின் கூற்றை அப்படியே வழி மொழிகிறேன்.
நிற்க !
திருவள்ளுவர் தோன்றிய கால கட்டம் எது ?
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு எனப் பொதுவில் சொல்லப்பட்டாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த மறைமலை அடிகளாரது தலைமையில் அன்று கூடிய பெரியோர்கள் அது கிமு 31 என்றே குறித்தார்கள். முன்னோர்கள் காட்டிய காலக் குறியினை மனதார வழி மொழிகிறேன்.
அது, ஜைன – பௌத்த மதங்கள் கோலோச்சிய காலம் என்பதையும் – அந்த மதங்கள் ஏன் அன்று கோலோச்சியது என்பதையும் பிறகு பார்ப்போம்.
நிற்க !
திருவள்ளுவர் தோன்றிய மதம் எது ?
இங்குதான் கொஞ்சம் நின்று நிதானிக்க வேண்டியுள்ளது.
நிற்க !
என அமைதிப்படுத்த முடியாதபடிக்கு அட்டகாசம் செய்யும் மனிதர்களின் மனதுக்குள் எந்தவித மருந்தை இட்டு நிரப்புவது ?
நாத்திகத்துக்கும் இடம் கொடுக்கும் இந்துமதப் பற்றாளர்கள் நியாயம் ஒன்றினுக்கு செவி கொடுக்காமல் முகம் திருப்பிக் கொண்டு போகும் விதம்தான் எனக்கு ஆச்சரியம் அளிக்கின்றது.
மத்திய – மாநில அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரின் திருவுருவம் மனமாச்சர்யத்தோடு தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவது வேதனை அளிக்கின்றது.
இது குறித்து பக்கம் பக்கமாக எழுதிவிட்டேன். ஒருவர் நிறுத்தினால் மற்றொருவர் தொடர்கிறார். என்ன செய்வது ?
மீண்டும் என்னளவில் மெல்ல எடுத்துரைக்கிறேன் !
குலமுறைக்கேனும் கொள்க !
*******
திருவள்ளுவர் தோன்றிப் பொலிந்ததாகக் கொள்ளப்படும் அந்த கி மு 31ல் தமிழகத்தில் எந்த மதம் வழக்கில் இருந்திருக்கக் கூடும் ? அன்று, ஜைன பௌத்த மதங்களோடு போராடி நின்ற மதம் எதுவாக இருந்திருக்கக் கூடும் என்பதில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
அன்றிருந்தது சனாதன தர்மமே என்று ஒரு சாராரும், அல்ல அது ஆசீவகம் என்னும் மதமே எனச் சிலரும் சொல்கிறார்கள் !
மேற்கண்ட இரண்டில் ஆசீவகத்துக்கு ஆதாரமான நூல்கள் ஏதும் உண்டா எனில் இல்லை. அது, பௌத்தத்திலும், ஜைனத்திலும் தன் அடையாளம் இருப்பதாக அடம்பிடிப்பதால் வலுவிழந்து போகிறது.
சனாதன தர்மமோ தனக்கான மூல நூல்களாக வேதங்களை காட்டி நிற்கின்றது. இடைப்பட்டு எழுந்த அன்றாண்ட மன்னர்களின் பஞ்சாயத்து படிவங்கள் போலான மனுஸ்மிருதிகள் போன்றவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சனாதனம் காட்டும் ஆதி நூல்களான வேதங்களை புறக்கணித்து விட முடியாது.
சரி, சனாதனம் எனில் என்ன ?
காலம் காலமாக இருந்து வருவது என்றே அதற்கு பொருளாகிறது. அது சொல்லும் காலமோ ஜைன பௌத்த காலங்களைக் கடந்திருக்கின்றது.
பீகாரில் தோன்றிய மகாவீரர் – நேபாள லும்பினியில் தோன்றிய புத்தர் போன்ற ஞானவான்களின் தத்துவங்கள் அனைத்தும் அவர்தம் சமகால மதக் கோட்பாடுகளை மறுத்து எழுந்தவைகளே என்பதால்…
அன்றந்த நாளில் வேறு ஒரு கோட்பாட்டுத் தத்துவமும் இருந்திருக்கவே கூடும் எனவும் புரிந்து கொள்ள முடிகின்றது.
சனாதனத்தின் மூல செய்யுள்களில் ஒன்றைக் காண்போம்.
சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்
ப்ரியம் சா ந அன்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம : சனாதன :
அதாவது, சத்தியமும் இனிமையும் கொண்டு பேச வேண்டும். உண்மையாய் இருப்பினும் அதைக் கடுமையாக பேசிவிடலாகாது. அதுவே சனாதன தர்மமாகும் என்பதே மேற்கண்ட செய்யுளின் சுருக்கமாகும்.
அடடா, எத்துனை அற்புதமான வாழ்க்கை தத்துவம் இது என எண்ணத் தோன்றுகிறதல்லவா ?. கூடவே, இப்படியானதொரு அற்புதத் தத்துவத்தை ஏன் மகாவீரரும் புத்தரும் மறுத்து எழுந்தார்கள் எனவும் கேட்கத் தோன்றுகிறதல்லவா ?
கவனியுங்கள்…
அன்று முதல் இன்று வரை ஒட்டுமொத்த சமூக அவலங்களுக்கும் காரணமாகி நிற்பது நல்ல நல்ல தத்துவங்களை சமூகத்துக்குள் மொண்ணையாய் கொண்டு செலுத்திய மூட மனிதர்களின் அவசர ஆட்டங்களேயன்றி வேறில்லை எனலாம்.
இன்று தொலைக்காட்சியில் – யூ ட்யூபில் பார்க்கிறோம். வாய்ப்பு கிடைத்த பலரும் மனம் போன போக்கில் மட்டரகமாகப் பேசக் காண்கிறோம். நமக்கு பிடித்த கொள்கைகளைக் கூட கேவலமான தோரணையும் உடல் மொழியும் கொண்டு அவர்கள் பேசக் கண்டு வெறுத்து ச்சீச்சீ என ஒதுக்கி அணைத்து விடுகிறோம்.
ஒருவர் ‘ஓஸிதானே’ என்கிறார். இன்னொருவர் ஒரு கண் இடுக்கியபடி ‘கெட் அவுட்’ என்கிறார். ஓஸி எனச் சொன்னவரோ தன் தலைமைக்கு அடிபணிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். கெட் அவுட் என்றவரோ மீண்டும் இளித்தபடி அங்கே ப்ரஸ்மீட் காண்கிறார். மொத்தமும் அவலம்.
ஆம், வழிமொழிவோரின் குணம் கெட்டால் கொள்கை நீர்த்து விடுகின்றது. நீர்த்துப் போன கொள்கைகளை அதன் தலைமைகள் கண்டு கொள்ளாமல் விடுகையில் சராசரி சமூகம் மனம் சுளித்து வெம்புகிறது. அது கண்டு அறிவுச் சமூகம் கொதித்தெழுகின்றது.
அப்படியாக எழுந்ததே பௌத்தமும் சமணமும் மற்றும் பிறவெல்லாமும்…
ஆயினும், நீங்கள் கண்டதல்ல நாங்கள் கடைபிடிப்பது என மறுகியபடியே அந்தந்தக் கொள்கைக்குரியவர்கள் அதனதன் உண்மைத் தன்மைகளை இழுத்துப் பிடித்தபடி காலமெல்லாம் நகர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.
சரி, விஷயத்துக்கு வருவோம்.
திருவள்ளுவர் கொண்ட மதமென்ன ?
இந்தக் கேள்வியே அபத்தமானது. அதன் காரணத்தை ஆழ விரித்துரைப்பது எனது கடமையாகிறது. அதனை விறுப்பு வெறுப்பின்றி செவிமடுக்க வேண்டுமாய் விழைந்து பணிந்து தொடர்கிறேன்.
திருவள்ளுவர் யாரென முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
திருவள்ளுவரை அறிவுப் பேராசானாய் உலகமே கொண்டாடுவதன் காரணம் குறித்து பல முறை பக்கம் பக்கமாக எழுதிவிட்டேன். மீண்டும் எழுதுகிறேன். தயவுசெய்து கவனியுங்கள்.
அறிவு என்பது ஒன்றல்ல. அது பல நிலைகளைக் கடந்தேறி நிற்பதாகும்.
மெய் – வாய் – கண் – மூக்கு – செவி எனும் பொதுவான ஐந்து அறிவுகளோடு – மனிதர்களுக்கேயான ஆறாம் அறிவாம் பகுத்தறிவையும் கொண்டு – அந்த அளவிலேயே நின்று இதுகாறும் நாம் கதையளந்து கொண்டிருக்கிறோம்.
அந்த பகுத்தறிவையும் கடந்த ஏழாவது அறிவு ஒன்று உண்டு. அது குறிப்பறிவு ஆகும். அதையும் கடந்த எட்டாவது அறிவு ஒன்றும் உண்டு. அது, உள்ளறிவு ஆகும்.
அதனையும் ஊடாடிப் போகும் ஒன்பதாம் அறிவு ஒன்றும் உண்டு என அறுதியிடுகின்றன தமிழ் மண்ணில் தோன்றிய சித்த நூல்கள். அதற்குப் பெயர் நுண்ணறிவாம்.
அம்மவோ, அதற்கும் மேம்பட்ட பத்தாம் அறிவு நிலை ஒன்றும் உண்டாம்.
அதற்குப் பெயர் வாலறிவன் என்பதாம் !
தூய்மையான கடவுள் தன்மையை எட்டிவிட்டதைக் குறிக்கும் நிலையாம் அது. ஆகாகா…. அதனை அவ்வளவு எளிதில் எட்டிவிட முடியுமா ? கடினம், கடினம், மிகக் கடினம்.
அதற்கு ஊண் மறக்க வேண்டும். ஐம்புலத்துக் கருவியாம் உடல் மறக்க வேண்டும். உறவு மறந்து, உலகம் மறந்து, நான் எனும் சிந்தை முற்றிலும் ஒழிந்தாக வேண்டும்.
அது குறித்துத்தான் ஔவைப் பெருமாட்டி …
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்துள் என்னை அழுத்துமே அழுத்துமே
என விநாயகர் அகவலில் மன்றாடி நின்றார் !
பிறப்பும் இறப்பும் அற்று
பேச்சுமற்று மூச்சுமற்று
மறப்பும் நினைப்பும் அற்று
மாண்டிருப்பது எக்காலம் ?
என பத்திரகிரியார் தன் ஞானப் புலம்பலில் கதறுகிறார் !.
அண்மைக்காலத்தில் வள்ளலாரும் பாம்பன் சுவாமிகளும் அதற்காகத்தான் தனித்திருந்து பெருங்கீர்த்தி கொண்டார்கள் ! பாரதியாரின் ஆழ்மனம் குயில் பாட்டு காதையினூடே அந்த மனோலயம் காணவே ஓடியிருக்கும் !
கண்ணதாசன் என்பான் தனது கிருஷ்ணகாந்தன் பாமாலையில் இன்னும் கொஞ்சம் ஆயுள் கொடேன் எனக் கதறியது அந்த நிலையை எட்டிவிடத் தானோ என்னமோ !?
கடினம். மிகக் கடினம். வாலறிவன் எனும் அந்த பத்தாம் அறிவு நிலையை அடைவது பெருங்கடினம்.
மறப்பும் நினைப்புமற்ற அந்த சூன்ய நிலையினை எட்டிவிட்ட மனதில் சொல்லுக்கடங்காத பேரானந்த சூழலொன்று தோன்றி நிற்க, இந்த உலகம் மட்டுமல்ல அகண்ட பேரண்டமும் ஒருமைபடத் துலங்கிவிடக் கூடும்.
திருவள்ளுவப் பேராசான் தன் 1330 குறட்பாக்களில் தன் தாய்மொழியை மட்டுமல்ல – பிறந்த பொன்னாட்டை – அதன் பூகோள அமைப்பின் சிறு குறியூடுகளைக் கூட எங்குமே குறிக்காது விட்டதன் ரகசியம் இதுதான்.
அது சகலத்தையும் கடந்து பொதுமைப்பட்டுவிட்டதொரு சித்து நிலை.
அப்படியான, வாலறிவன் நிலையினை தன்னுள்ளே ஊன்றி ஊன்றிப் போராடிக் கண்டடைந்து – அதன் பலன்களை எல்லாம் ஒன்று கூட்டி உலக மாந்தர்க்கு குறட்பாக்களாக ஓதி உரைத்த பேராசானே திருவள்ளுவர்.
சொல்லுங்கள், நான் எனும் ஆணவ மலத்தை – ச்சீச்சீ எனப் போராடித் தொலைத்து – வாலறிவன் நிலையினை எட்டி – சூனியத்தில் நிலை கொண்டு,
‘உலக மாந்தரே, பிழைத்துக் கொள்ளுங்கள்’ எனக் குறள் படைத்துப் போன திருவள்ளுவருக்கு எப்படிப் பொருந்தும் உங்கள் மத வேடம் ?
சொல்லுங்கள், எப்படிப் பொருந்தும் புரிநூலும் – திருநீறும் – அந்த செந்தூரப் பொட்டும் ? பதட்டமின்றி சிந்தியுங்கள் !
நூறு கேள்விகள் இருந்தாலும் கேளுங்கள்.
ஆயிரம் பதில்களோடு காத்திருக்கிறேன் !
கட்டுரையாளர் குறிப்பு
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
கொண்டாட்டம் என்னுமொரு மதம்! – வே.ஸ்ரீராம் சர்மா
புறக்கணிக்கப்பட்ட இலவச அறிவுரை ! – வே.ஸ்ரீராம் சர்மா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!