அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நேற்று (டிசம்பர் 30) தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 31) சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சம்பவம் நடந்த போது, ’அந்த சார் கூட கொஞ்ச நேரம் இரு’ என்று குற்றம்சாட்டப்பட்டவர் சொன்னதாக செய்திகள் வருகிறது. யார் அந்த சார்? என மக்கள் கேட்கிறார்கள்.
குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது என்பதற்காக அதிமுக போராட்டம் நடத்துகிறது. உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.
யார் அந்த சார்… இதுவரை போலீஸ் சொல்லவில்லை. அந்த பெண் அளித்த புகார் குறித்து சென்னை காவல் ஆணையரும், உயர்கல்வித் துறை அமைச்சரும் கூறுவதில் முரண்பாடுகள் உள்ளன. யாரையோ காப்பாற்றுவதற்காக அமைச்சர்கள் ரகுபதி, கோவி.செழியன், கீதா ஜீவன் ஆகியோர் வரிந்துகட்டிக்கொண்டு பேசுகிறார்கள்.
இதை கேட்டால் பொள்ளாச்சி சம்பவத்தை பற்றி பேசுகிறார்கள். ஆனால் பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டேன். திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை.
இந்தநிலையில் தான் யார் அந்த சார் என்று பாதகைகளை ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், ஆனால் அவர்கள் மீது வழக்குப்போடுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக “தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், படிக்கும் மாணவர்கள் சார்ந்த இந்த சென்ஸிட்டிவ் விவகாரத்தில் அரசியல் செய்து, அரசியல் அறத்தையும் மாண்பையும் குழி தோண்டி புதைத்துவிட்டார் பழனிசாமி. அவரது இந்த அற்பத்தனமான செயலை தமிழக மக்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள்” என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியிருந்தார்.
அமைச்சர்கள் கோவி.செழியன், ரகுபதி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா