கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு 6 E 7339 என்ற இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த அன்று இண்டிகோ விமானத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பயணம் செய்தனர்.
விமானம் ரன்வேயில் இருந்தபோது எமர்ஜென்சி கதவை திறந்தது பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி தேஜஸ்வி சூர்யா தான் என்று விமானத்தில் பயணம் செய்த சில பயணிகள் குற்றம் சாட்டினர்.
சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு எமெர்ஜென்சி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்த விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்ட சம்பவம் குறித்து தேஜஸ்வி சூர்யா விமான குழுவினருக்கு தெரிவித்து விட்டதாகவும், தவறுதலாக நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதாகவும் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தேஜஸ்வி சூர்யா யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஏபிவிபி-யில் தீவிரமாக பணியாற்றிய தேஜஸ்வி
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 1990-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் தேஜஸ்வி பிறந்துள்ளார். இவரது மாமா ரவி சுப்ரமணியா மூன்று முறை பசவங்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவரது தந்தை சூர்ய நாரணயணா, தாய் ரமா. தந்தை சூர்ய நாராயணா கலால் இணை ஆணையராக இருந்துள்ளார்.
பெங்களூரு, தியாகராஜ நகரில் உள்ள ஸ்ரீ குமரன் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த தேஜஸ்வி, பெங்களூரு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். பள்ளி படிக்கும் போது arise india என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வந்தவர், அகில பாரதி வித்யார்த்தி பரிசத் என்ற வலது சாரி மாணவர் அமைப்பில் தீவிரமாக பணியாற்றியுள்ளார்.
இவர் 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜவிற்காக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் கர்நாடகாவில் இளைஞர்கள் மத்தியில் அவரது மைலேஜ் அதிகமானது. 2018-ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இணைய பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்திய தேஜஸ்வி, இணைய பிரச்சார குழுவை தொடங்கினார்.
வழக்கறிஞரான தேஜஸ்வி சூர்யா, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஊழல் வழக்கில் அவருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். இதனால் கட்சியின் சீனியர்கள் மத்தியிலும் தேஜஸ்விக்கு நல்ல பெயர் கிடைத்தது.
இதனால் அவருக்கு 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹரி பிராசாத்தை விட இவர் 3,31,192 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். கட்சியில் அவரது செல்வாக்கு அதிகரிக்கவே கடந்த 2020-ஆம் ஆண்டு தேஜஸ்வி சூர்யாவிற்கு பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது.
தேஜஸ்வி சூர்யாவும் தொடர் சர்ச்சைகளும்!
கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா தொற்று உச்சத்திலிருந்தபோது, பிபிஎம்பி கட்டுப்பாட்டு அறையில் கொரோனா படுக்கைகளை நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் லஞ்சம் வாங்குவதாகத் தேஜஸ்வி குற்றம் சாட்டினார்.
மே 4-ஆம் தேதி கட்டுப்பாட்டு அறைக்கு ஆய்விற்கு சென்ற தேஜஸ்வி சூர்யா, அங்கு பணியாற்றிய 206 மருத்துவர்களில் 17 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, அவர்களது பெயரை வாசித்தார். அவர் வாசித்த 17 பேரும் முஸ்லீம் மருத்துவர்கள். அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. தேஜஸ்வி சூர்யா முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என அவரை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. பலத்த எதிர்ப்பிற்கு பிறகு தேஜஸ்வி சூர்யா, பிபிஎம்பி கட்டுப்பாட்டு அறை மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி பாரதிய ஜனதா இளைஞர் அணி இந்துமதம் புத்துயிர் என்ற தலைப்பில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி சூர்யா பேசியபோது, “இந்தியாவில் வேறு மதங்களுக்கு சென்ற கிறித்தவ, இஸ்லாமியர்கள் அனைவரையும் இந்து மதத்திற்கு திரும்பச் செய்ய வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை தொடர வேண்டியது நமது கடமை. பாகிஸ்தானில் மதம் மாற்ற செய்யப்பட்ட இந்து மக்களையும் இந்து மதத்திற்கு திரும்ப வர வைக்க வேண்டும்.” என்று பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தனது கருத்தை திரும்ப பெறுவதாக தேஜஸ்வி தெரிவித்திருந்தார்.
அரபு நாட்டு பெண்கள் குறித்து கடந்த 2015-ஆம் ஆண்டு தேஜஸ்வி சூர்யா போட்ட ட்விட்டர் பதிவு 2021-ஆம் ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. “அந்த பதிவில் அவர், சில நூற்றாண்டுகளாக அரபு நாட்டில் உள்ள 95 சதவிகித பெண்கள் ஆர்கசமே அடைந்ததில்லை. தாய்மார்கள் உடலுறவின் வாயிலாக மட்டுமே குழந்தைகளை ஈன்றெடுக்கிறார்கள். அன்பின் வெளிப்பாடாக இல்லை.” என்று பதிவிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, அரபு நாட்டில் உள்ளவர்களும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்பு அதிகரிக்கவே அந்த பதிவை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார்.
இப்படி தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வந்த தேஜஸ்வி சூர்யா இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்துவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த முறையும் அவர் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். ஆனால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலுவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
வாரிசு துணிவு: தவறான வசூல் தகவலும் திருப்பூர் சுப்பிரமணி பதிலும்!
வடிவேலுவுக்கு முதல்வர் சொன்ன ஆறுதல்!
மன்னிப்பு கேட்டு பிழைப்பு நடத்தும் தலைவரின் வாரிசு… மக்களுக்கு என்ன தொண்டு செய்தான்? இந்த நாயை உள்ளே தள்ளவேண்டும்