தமிழக உளவுத்துறை புதிய ஐஜியாக பொறுப்பேற்றுள்ள டாக்டர் செந்தில்வேலன் ஐபிஎஸ் நேற்று (ஜூலை 22) தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். முதல்வரிடம் அவர் வாழ்த்து பெறும் முன்பே, செந்தில்வேலன் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டதுமே சமூக தளங்களில் பல்வேறு சமூக ஆர்வலர்களும் தத்தமது பகுதிகளில் செந்தில்வேலன் பணியாற்றியபோது ஏற்பட்ட சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லி அவரை வாழ்த்தத் தொடங்கிவிட்டனர்.
யார் இந்த செந்தில்வேலன்? இப்போது அவர் உளவுத்துறை ஐஜியாக பொறுப்பேற்பதன் முக்கியத்துவம் என்ன?
டாக்டர்… ஐ.ஏ.எஸ்… ஐ.பி.எஸ்….
மதுரை மாநகரில் வசித்துவந்த, புஷ்ப ராஜாமணி, அர்ச்சுனன் தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகள், ஒரே ஒரு ஆண் பிள்ளை. நான்காவதாகப் பிறந்த கடைக்குட்டிதான் செந்தில்வேலன். இரண்டு சகோதரிகள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சகோதரி தமிழகத்திலேயே வசித்து வருகிறார்.
கடைக்குட்டி செந்தில் போலீசில் சேர்ந்து கடைக்குட்டி சிங்கமானது எப்படி?
பெற்றோர்கள் மற்றும் சகோதரிகளின் ஆசைப்படியே செந்தில்வேலன் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பிஎஸ் படித்தார், சில காலங்கள் மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். ஆனாலும் அவர் மனதில் ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும், அநியாயத்தைத் தட்டி கேட்கவேண்டும், ரவுடிகளை ஒடுக்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது.
அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அதேநேரம் டாக்டராக இருந்தபடியே சிவில் சர்வீஸ் எழுதுவதற்குத் தயாராகி வந்தார். 2004இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். இந்திய அளவில் 84வது இடத்தைப் பிடித்த அவர், ஐபிஎஸ் பணியை தேர்வு செய்கிறார்.

பெஸ்ட் ப்ரொபஷனர்
ஹைதராபாத் போலீஸ் ட்ரெயினிங் அகாடமியில் பயிற்சி பெற்றபோது, அகில இந்திய அளவில் பெஸ்ட் ப்ரொபஷனர் விருது பெற்றார். இந்தியப் பிரதமர் கையால் வழங்கக்கூடிய அந்த விருதை அப்போது பிரதமர் வெளிநாட்டில் இருந்ததால், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் செந்தில்வேலனுக்கு வழங்கினார். கை தடி, கை துப்பாக்கி, கோல்டு காயின் போன்றவை அந்த விருதில் இருக்கும்.
சிதம்பரத்தில் சந்தித்த சவால்கள்
பயிற்சி காலம் முடிந்து தமிழக பணிக்கு இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஏ.எஸ்.பி.யாக ஒரு வருடம் பணி செய்தார் செந்தில்வேலன். அதன் பின் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோட்டத்திற்கு ஏஎஸ்பியாக பணியில் அமர்ந்தார். அந்த காலகட்டத்தில்தான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர் சிவசாமி என்பவரை 2008 ஜனவரி 30ஆம் தேதி, காலையில் பைக்கில் வரும்போது துணைவேந்தர் பங்களா எதிரில் ஒரு கும்பல் வழி மறித்து கொலை செய்துவிட்டுத் தப்பித்துவிட்டார்கள்.
கொலைக்குப் பின்னால் இருக்கும் சர்வ அதிகாரம் படைத்த எஸ் ஆர் என்று அழைக்கக்கூடிய ராஜேந்திரனைப் பல தடைகளை மீறி ஏ1 குற்றவாளியாக இணைத்து நீதி மன்றத்தில் நிறுத்தினார் செந்தில்வேலன். அப்போதே செந்தில்வேலனைப் பழிவாங்கத் துடித்தது எஸ்.ஆர், குரூப். காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு பகுதியில் உள்ள எஸ் ஆர்.க்கு சொந்தமான கல்லூரியில், அவரது மனைவியை மிரட்டி சொற்ப பணத்தைக் கொள்ளை அடித்ததாக… சிவசாமி கொலை வழக்கின் விசாரணை அதிகாரி கண்ணன், கொலை செய்யப்பட்ட சிவசாமியின் மனைவி பிரேமா, ஏஎஸ்பி செந்தில்வேலன், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து புலனாய்வு செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர் காசி ஆகியோர் மீது செங்கல்பட்டு நீதி மன்றத்தில் பிரேவேட் வழக்கு தொடுக்கப்பட்டது. பொய்ச் சாட்சிகளை தயார்ப்படுத்தி அனைவருக்கும் பிடி வாரண்ட் போடப்பட்டது.
அப்போதைய முதல்வர் கலைஞருக்கு இந்த தகவல் எடுத்துச் செல்லப்பட்டது. ‘ஒரு கொலை வழக்கை நேர்மையான புலனாய்வு செய்துவரும் போலீஸ் அதிகாரிக்கே இந்த கதியா?’ என்று செயல்பட்ட கலைஞர் ஏ.எஸ்.பி. செந்தில்வேலன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்கை உடைத்தார்.
அன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சேத்னா என்ற மாணவி மரணம் அடைந்தார். அப்போது தற்கொலைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள, சேத்னா பயன்படுத்திய செல்போனை ஆராய்ந்து, இன்கம்மிங் கால், அவுட்கோயிங் கால், எஸ்.எம்.எஸ்,களை அலசி ஆராய்ந்து பேராசிரியர் ஒருவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததைக் கண்டுபிடித்தார் ஏ.எஸ்.பி. செந்தில்வேலன். மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அந்த பேராசிரியரை கைது செய்தார் ஏ.எஸ்.பி செந்தில்வேலன், அவர் பணியாற்றிய காலத்தில் அனைத்து வழக்குகளையும் துப்பு துலக்கியவர் என்று போலீசில் பெயரெடுத்தவர் செந்தில்வேலன்.

எஸ்பியாக பதவி உயர்வு பெற்று மீண்டும் இராமநாதபுரம் சென்றார். யார் எஸ்பியாக பொறுப்பேற்றாலும் சில தலைவர்களை நேரடியாகச் சென்று பார்த்துவிட்டு வரவேண்டும். ஆனால் செந்தில்வேலன் யார் வேண்டும் என்றாலும் எந்த நேரத்திலும் என்னை வந்து பார்க்கலாம் என்று பணியைத் துவங்கினார். அப்போது ஒரு குறிப்பிட்ட மதத்தின் இளைஞர்கள் குளத்தில் குளிக்கும் போது தவறி இறந்துவிட்டார்கள். அதைக் கொலை வழக்காக மாற்றவேண்டும் என்று போராட்டம் செய்தனர். அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை செந்தில்வேலன். இதனால் அந்த மதத் தலைவர்கள் முதல்வராக இருந்த கலைஞரை சந்தித்து எஸ்பியை மாற்றச் சொன்னார்கள். ஆனாலும் செந்தில்வேலனைப் பற்றி அறிந்த அப்போதைய முதல்வர் கலைஞர் அவரை மாற்றவில்லை.
தஞ்சாவூர் எஸ்.பி.யாக இருந்தபோது நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார் செந்தில்வேலன். அப்போது நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சர்ச் நிர்வாகத்துக்கு உட்பட்ட விடுதியில் ஒரு பெண் இறந்து கிடந்தார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே செந்தில்வேலன் ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டார். ஆனபோதும் தான் விசாரித்து வந்த வேளாங்கண்ணி வழக்கில் தொடர்ந்து துப்பு துலக்கி ராமநாதபுரத்தில் இருந்தபடியே ஒரு பாதிரியாரை கைது செய்தார் செந்தில்வேலன். இதுபோல, மாறுதல் ஆகிச் சென்றபோதும் தான் விசாரித்த வழக்குகளை துப்பு துலக்குவதில் பெரும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர் செந்தில்வேலன்.
செந்தில்வேலன் தஞ்சை மாவட்ட எஸ்பியாக இருந்தபோது மத அடிப்படைவாதிகளையும், சாதி அடிப்படை வாதிகளையும், ரவுடிகளையும் கடுமையாக ஒடுக்கினார்.
பரமக்குடி ஃபயரிங்
சென்னை அடையாறு துணை ஆணையராக 2011இல் பொறுப்பேற்றுப் பணி செய்துவந்தார் செந்தில்வேலன். அப்போது 2011 செப்டம்பர் மாதம் இமானுவேல் சேகரன் 54வது நினைவு நாள் நிகழ்வுக்காக பாதுகாப்புப் பணிக்கு சென்றிருந்தார். பரமக்குடி ஐந்துமுனை சாலையில் டூட்டி. சில டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், போலீஸாரும் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர். 11ஆம் தேதி கலவரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு கூட்டம் களமிறங்கியது. கல் மற்றும் பாட்டில் வெடிகுண்டுகளை வீசுகிறார்கள். ஆங்காங்கே தீ வைக்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷனை அட்டாக் செய்கிறார்கள். காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் வயிற்றில் குழந்தையை சுமந்தபடி உள்ளே கதவைப் பூட்டிக்கொண்டு இருக்கிறார். போலீஸாருக்கே அடி விழுந்துகொண்டிருக்கிறது. சில டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளே சீருடையுடன் தப்பித்து ஓடுகிறார்கள்.
அப்போது அந்த கலவர களத்தில் செந்தில்வேலனுடன் இருப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே. செந்தில்வேலன் மீதும் கற்கள் வந்து விழுந்தன. அந்தத் தாக்குதலால் கீழே விழுந்தவரைக் காலில்
கல்லால் அடிக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் கலவரத்தை அடக்க, காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர் உயிரைக் காப்பாற்ற, மற்ற போலீஸாரைக் காப்பாற்றத் துப்பாக்கியை எடுத்து ஃபயரிங்கை ஓப்பன் செய்தார் செந்தில்வேலன்.
கொஞ்ச நேரத்தில் கலவரம் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இரத்தக் காயத்துடன் மதுரை மாட்டு தாவணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து அடிப்பட்ட காலில் ஆப்ரேஷன் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். துப்பாக்கி சூட்டுக்கான விசாரணையையும் எதிர்கொண்டார்.
தாய்லாந்தில் தாய்நாட்டுப் பணி
அதன் பிறகு சென்னை சாஸ்திரிபவனில் பணியாற்றினார். 2017 ஜனவரியில் மத்திய பணிக்கு டெல்லிக்கு சென்றார். ஐபி பணியாக பாகிஸ்தான் நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்தது உள்துறை அமைச்சகம். ஒரு வருடம் காத்திருந்தார். பாகிஸ்தான், செந்தில்வேலனுக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மத்திய பணிக்காலம் முடிந்ததும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு அனுப்ப ஆர்டர் வழங்கியது மத்திய அரசு.

அனைத்து ஃபார்மாலிட்டிகளும் முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வருவதாக இருந்தவரை, தமிழக அரசு உடனடியாக அழைத்தது. ஜூலை 20ஆம் தேதியே உளவுத் துறை ஐஜியாக ஆர்டர் போட்டார் மாநில உள்துறை செயலாளர். ஆர்டரை ஏற்று உடனடியாக ஜூலை 21ஆம் தேதி, உளவுத் துறை ஐஜியாக பொறுப்பேற்றுக்கொண்டு, தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரைச் சந்தித்துவிட்டு டிஜிபி ஆபீஸான வெள்ளை மாளிகையில் அமர்ந்து உளவு பணியைத் துவங்கியுள்ளார் டாக்டர் செந்தில்வேலன்.
கடைக்குட்டி சிங்கம் டாக்டர் செந்தில்வேலனின் ஆபரேஷன்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது தமிழ்நாடு.
–மின்னம்பலம் டீம்
Comments are closed.