திரிபுரா மாநிலத்தில் இரண்டாவது முறையாக மாணிக் சாஹா இன்று (மார்ச் 8) முதல்வராக பதவியேற்றார்.
திரிபுராவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யார் இந்த மாணிக் சாஹா?
திரிபுரா அகர்தலாவில் 1953-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி மகான் லால் சாஹா, பிரியா பாலா சாஹா தம்பதியர்களுக்கு மாணிக் சாஹா மகனாக பிறந்தார்.
இவர் இளங்கலை பல் மருத்துவ படிப்பை பாட்னாவிலும், முதுகலை பல் மருத்துவ படிப்பை லக்னோவிலும் படித்து முடித்தார்.
பின்னர் ஸ்வப்னா சாஹாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஸ்மிதா, ட்ரிஷிதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஹபானியாவில் உள்ள திரிபுரா மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். 2015-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்தார்.
நகர்ப்புற பொறுப்பாளர், 2018 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் பூத் மேலாண்மை குழு உறுப்பினராக இருந்தார். இவருடைய தீவிரமான கட்சி பணிகளால் அடுத்தடுத்து தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனால் 2020-ஆம் ஆண்டு பாஜகவின் மாநில தலைவர் ஆனார்.
பின்னர் 2021-ஆம் ஆண்டு திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜவிற்கு வெற்றியை தேடி தந்தார்.
தொடர்ச்சியான தனது செயல்பாட்டால் கவனம் ஈர்த்த மாணிக் சாஹாவுக்கு 2022-ஆம் ஆண்டு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்தது.
அடுத்த சில மாதங்களிலேயே இவர் திரிபுரா மாநில முதல்வராக பதவியேற்றார்.

2023-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இடது சாரிகள், காங்கிரஸ் கூட்டணி, திப்ரா மோதா என மும்முனை போட்டி நிலவியது.
60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஆட்சியமைக்க 31 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பாஜக, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கூட்டணி 33 இடங்களையும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி 14 இடங்களையும் திப்ரா மோதா 13 இடங்களையும் கைப்பற்றியது.
இரண்டாவது முறையாக மாணிக் சாஹா முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் முதல்வர் பதவியை பெற முனைப்பு காட்டினார்.
ஆனால் மாணிக் சாஹா 32 எம்.எல். ஏ-க்கள் ஆதரவால் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார்.
செல்வம்
ஜெயலலிதா மாதிரியான தலைவரா?: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!
சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!