சசிகலா குடும்பத்தில் யாரைப் பற்றிக் கேட்டாலும் கதை கதையாய் சொல்வார்கள். ஆனால் டாக்டர் சிவகுமார் என்று கேட்டால் பலரும், ‘சிவகுமாரா…. ‘ என்று இழுக்கிறார்கள்.
ஆமாம்… மன்னார்குடி வகையறாக்களிலேயே ஜெயலலிதாவின் மருத்துவராக இருக்கும் அளவுக்கு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் பெரிய அளவு வம்புதும்புகளில் சிக்காதவராகவே கருதப்பட்டவர் டாக்டர் சிவகுமார். ஆனால், இப்போது ஒரு பெரும் வம்பில் சிக்கியிருக்கிறார்.
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம், ’குற்றம் செய்திருக்கிறார்கள்’ என்றும் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கும் எட்டு பேரில் ஒருவர்தான் டாக்டர் சிவகுமார்.
திருச்சி திருவெறும்பூர் ராஜா காலனியைச் சேர்ந்த சத்தியமூர்த்தியின் மகன் தான் சிவகுமார்.
மருத்துவரான சிவகுமாருக்கு சம்பந்தம் பண்ணிய இடம்தான் அவரை செய்திகளில் அடிபட வைத்திருக்கிறது. திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் அரசங்குடியை பூர்வீகமாகக் கொண்ட சிவகுமார் டாக்டராக இருப்பது அவரது உறவினர்களில் ஒருவரான கலிய பெருமாளுக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த கலியபெருமாள் யாரென்று கேட்டால் இளவரசியின் சம்பந்தி.
அதிமுக அப்போது முழுக்க முழுக்க சசிகலாவின் கையில் இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு பொறுப்பாளரை தன் குடும்பத்தில் இருந்து நியமித்திருந்தார், கோவைக்கு ராவணன் போல திருச்சிக்கு பொறுப்பாளராக இருந்தவர்தான் கலியபெருமாள்.
இந்த கலியபெருமாள்தான் அரசங்குடியை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் சிவகுமாருக்கு தங்கள் குடும்பத்தில் இருந்து பெண் கொடுக்கலாம் என்று பேச்சை ஆரம்பித்தவர். அப்போது சிவகுமார் தஞ்சாவூரில் அருளானந்தா நகரில் ’சுகம் ஆஸ்பத்திரி’ யை லீசுக்கு எடுத்து நடத்திக் கொண்டிருந்தார்.
கலியபெருமாளின் பேச்சின் வழியாகத்தான் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மூத்த மகள் பிரபாவதியை திருமணம் செய்தார் சிவகுமார். அந்த குடும்பத்தின் இரண்டாவது பெண்ணான அனுராதாவை திருமணம் செய்தவர்தான் டிடிவி தினகரன்.
ஆக தினகரனின் சகலை என்று சொன்னால் டாக்டர் சிவகுமாரை மன்னார்குடி குடும்பத்தில் எளிதாக அடையாளப்படுத்தி விட முடியும்.
ஆனால் மன்னார்குடி வகையறாக்களில் மற்றவர்களைப் போல ஆள், அம்பு, படை, பரிவாரங்கள் என்று எந்த செல்வாக்கையும் காட்டாதவர் சிவகுமார் என்கிறார்கள். திருச்சி முதல் தஞ்சை, மன்னார்குடி வரையில் சிவகுமாரை பற்றி விசாரித்தபோது, ‘டாக்டர் சிவகுமார் இந்தப் பக்கம் தலைகாட்டுவதே கிடையாது.
அவர் முழுக்க முழுக்க சென்னையில்தான் இருக்கிறார். ஒரத்தநாடு அருகே சிவகுமாருக்கு தோப்பு இருக்கிறது. வருடத்தில் எப்போதாவது தோப்புக்கு ரிலாக்சாக வருவார். ஆனால் அவர் வருவதும் போவதும் யாருக்கும் தெரியாது” என்கிறார்கள்.
திருச்சியைச் சேர்ந்த டாக்டர் சிவகுமார், மன்னார்குடி குடும்பத்தில் பெண்ணெடுத்ததால் அதிகார வர்க்கத்துக்கு நெருங்கியவரானார். சிவகுமாரை பற்றி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த சத்திய பிரமாண வாக்குமூலத்தில் சொல்லப்பட்டிருப்பது அவரைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தரும்.
பரப்பன அக்ரஹாரா சிறைச் சாலையில் இருந்து தனது வழக்கறிஞர் மூலம் ஆறுமுகசாமி ஆணையத்தில் சத்திய பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் சசிகலா.
அதில், “அக்காவைப் பொறுத்தவரை எந்த ஒரு மருத்துவர் தரும் ஆலோசனையையும் திறம்பட கேள்விகள் கேட்டு திருப்தி அடைந்த பின்னரே ஏற்றுக் கொள்வார். சிகிச்சை பிடிக்கவில்லை என்றால் அதைத் தொடமாட்டார்.
இது ஆரம்ப காலம் முதலே அக்காவின் சுபாவமாகும். அக்காவுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனை, சிகிச்சை தரும் மருத்துவர்களை ஒருங்கிணைக்கும் பணியை எனது உறவினரான டாக்டர் சிவகுமார் செய்யவேண்டும் என்று அக்கா பணித்திருந்தார்.
2000 காலகட்டத்தில் இருந்தே அக்காவின் மருத்துவ சிகிச்சை ஒருங்கிணைப்புப் பணியை அக்காவின் விருப்பப்படி டாக்டர் சிவகுமார் செய்து வந்தார்” என்று சிவகுமாரைப் பற்றி தனது சத்தியப் பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சசிகலா.
ஆக ஜெயலலிதாவின் தனிப்பட்ட மருத்துவராக இருந்ததோடு குறிப்பாக 2014 முதல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லும் 2016 வரை அவருக்கு சிகிச்சை அளித்த இருபது மருத்துவர்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்தவர் டாக்டர் சிவகுமார்தான்.
சசிகலா கூட சில நாட்கள் ஜெயலலிதாவை சந்திக்காமல் இருந்திருப்பார். ஆனால் சிவகுமார் ஜெயலலிதாவை சந்திக்காத நாட்களே கிடையாது. ஜெயலலிதா சென்னையில் இருந்தால் தினமும் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவுடன் பேசிக் கொண்டிருப்பார்.
உணவு முறைகள், உணவுப் பொருட்கள் என தன் இயல்புகளை சிவகுமார் சொல்லி மாற்றிக் கொண்டார் ஜெயலலிதா.
2011 ஆம் ஆண்டு சசிகலா உள்ளிட்ட அனைவரையும் நீக்கியபோதும் சிவகுமாரை போயஸ் கார்டனுக்குள் அனுமதித்தார் ஜெயலலிதா. அதற்குக் காரணம் அவர் ஒரு டாக்டர் என்பதால்தான்.
அதுவும் பல விஷயங்களில் டாக்டர் சிவகுமாரின் அறிவுரைகள் தனக்கு பயனுள்ளதாக இருந்ததால் சிவகுமாரை முழுமையாக நம்பினார் ஜெயலலிதா.
இந்த நிலையில்தான் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாக்டர் சிவகுமார் சபரிமலைக்கு மாலை போட்டு சென்றிருந்தபோது செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் விட்டுவிட்டு அடித்தது. அப்போது கார்டனில் இருந்து சசிகலா போன் செய்தது சிவகுமாருக்குத்தான்.
உடனடியாக சிவகுமார் சபரிமலையில் இருந்தே அப்பல்லோவைத் தொடர்புகொண்டு ஒரு குழுவை போயஸ் கார்டனுக்கு அனுப்பினார். அவர்கள்தான் ஜெயலலிதாவின் சளி, ரத்த மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
தகவல் அறிந்ததும் 21 ஆம் தேதியே சபரிமலையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்துவிட்டார் டாக்டர் சிவகுமார். ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆனது 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு.
அன்று காலை, மாலை இருவேளையும் கார்டனுக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்து சென்றார். அன்று இரவு ஜெயலலிதா போயஸ் கார்டனில் மயக்கமானதும் அவரது கை, கால்களை தேய்த்துவிட்டு உடனடியாக அப்பல்லோவுக்கு போன் செய்து ஆம்புலன்சை வரவழைத்தது டாக்டர் சிவகுமார்தான்.
ஜெயலலிதாவை அன்று இரவு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸில் சசிகலாவோடு இருந்தவரும் டாக்டர் சிவகுமார்தான்.
இந்த சிவகுமாரைத்தான் (CW17) ஆறுமுகசாமி ஆணையம், ‘ஜெயலலிதாவுக்கு மருத்துவமனை செல்வதற்கு முன்பே காய்ச்சல் இருந்தபோதும் அதற்காக பாராசிட்டமாலை மட்டுமே சிவகுமார் அளித்தார்’ என்று குறிப்பிடுகிறது.
ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல் ரீதியான கோளாறுகள் இருந்தன என்பதை சசிகலா தனது சத்திய பிரமாண வாக்குமூலத்தில் பட்டியலிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட அனைத்து கோளாறுகளும் டாக்டர் சிவகுமாருக்கு நன்கு தெரியும்.
இந்த நிலையில்தான் ஜெயலலிதாவுக்கு உரிய ஆஞ்சியோ சிகிச்சை அளிக்காமல் தனிப்பட்ட ஒருவரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக வெற்றிகரமாக செயல்படுத்தினர் என்று சசிகலாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் டாக்டர் சிவகுமாரை நிற்க வைத்திருக்கிறார் நீதிபதி ஆறுமுகசாமி.’
ஜெயலலிதாவுக்கு சுமார் இருபது ஆண்டுகளாக தனிப்பட்ட மருத்துவராக இருந்த சிவகுமார், இந்த ஆணையத்தின் குற்றச்சாட்டில் இருந்து தார்மீக ரீதியாக வெளியே வருவது அவருக்கு சவாலான ஒன்றுதான்.
-ஆரா
அண்ணா பல்கலையில் ரூ.11.41 கோடி முறைகேடு!
தடையை மீறி போராட்டம் : எடப்பாடி விடுவிப்பு!