இந்திய குடியரசு துணை தலைவராக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜக்தீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த குடியரசு துணை தலைவர் தேர்தலில் ஜக்தீப் தங்கர் 528 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்க்ரெட் ஆல்வா 182 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம், பா.ஜ.க. வேட்பாளர் ஜக்தீப் தங்கர் துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யார் அவர்? அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது எப்படி?
ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு மாவட்டத்தில் உள்ள கித்தானா கிராமத்தில் 1951-ம் ஆண்டு மே 18-ம் தேதி பிறந்தார் ஜக்தீப் தங்கர். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் தொடக்கக் கல்வியை தனது கிராமத்தில் பயின்றுள்ளார். அப்போது, கிராமப்பகுதியில் கடினமாக உழைக்கும் மக்களை கண்ட அவருக்கு படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சித்தோர்கர் கிராமத்தில் உள்ள சைனிக் பள்ளிக்குச் சென்று தனது உயர்நிலை படிப்பை நிறைவு செய்துள்ளார்.
பின்னர், ஜெய்ப்பூரில் உள்ள மகாஜாரா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார். சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மீதான அவரது ஆர்வம் வழக்கறிஞர் படிப்பை தேர்வு செய்ய தூண்டியது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் எல்.எல்.பி. படிப்பை முடித்த அவர், 1978-79-ல் பார் கவுன்சிலில் பதிவு செய்தார். அதே ஆண்டு சுதேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காம்னா என்கிற மகள் இருக்கிறார்.
முதலில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அவர், பின்னர் உச்ச நீதிமன்றத்தை நோக்கி நகர்ந்தார்.
அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த ஜக்தீப் தங்கர், 1989-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தள் சார்பில் போட்டியிட்டு ஜுன் ஜுனு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார். பிரதமர் சந்திரசேகரின் ஆட்சியின் போது ஒன்றரை வருடங்கள் மட்டும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
ஜக்தீப் தங்கருக்கு ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நல்ல வரவேற்பு இருந்ததால் தேசிய அரசியலுக்கு இடைவேளை விட்டு மாநில அரசியலில் இறங்கினார். 1993-ல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின் போது, கிஷாங்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பி.வி. நரசிம்ம ராவ் பிரதமரானபோது காங்கிரசுக்கு தாவிய ஜக்தீப் தங்கர், ராஜஸ்தானில் அசோக் கெஹ்லாட்டுக்கு கிடைத்த ஆதரவை கவனிக்க தவறவில்லை. இதனால், 2003-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அவர், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார். திடீரென அரசியலில் இருந்து மாயமான ஜக்தீப் தங்கர், தனது வழக்கறிஞர் தொழிலில் கவனம் செலுத்தி வந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் கடந்த 2019-ம் ஆண்டு அவரை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக நியமித்தது மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு. பதவியேற்றது முதலே அவர் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பனர்ஜிக்கு கடும் குடைச்சலைக் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற மம்தா பானர்ஜி, மாநிலத்தின் ஆளுநர் என்றும் பாராமல் அவரை பா.ஜ.க.வின் ஏஜெண்ட் என்று விமர்சித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்தும் முடக்கி வைத்தார். ஜக்தீப் தங்கர் மாநில நிர்வாகத்தில் தலையிடாமல் இருப்பதற்காக, இனி பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே தொடர வேண்டும் என மசோதா நிறைவேற்றி அதை ஆளுநர் ஜக்தீப் தங்கருக்கே அனுப்பி வைத்தார்.
நாளுக்கு நாள் இருவருக்கும் இடையில் மோதல் முற்றி வந்த நிலையில் தான், ஜக்தீப் தங்கரை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க. இதனால், திரிணாமுல் கங்கிரஸ் கட்சி தேர்தலையே புறக்கணிக்கிறது என அறிவித்தார் மம்தா பானர்ஜி.
ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜக்தீப் தங்கர். 2023-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 12 சதவீதம் மக்கள் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தமுள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகளில் ஜாட் சமூகத்தினர் வெற்றியை முடிவு செய்யும் பலத்தோடு இருக்கிறார்கள். இதனால் ராஜஸ்தானையும் அங்குள்ள ஜாட் சமூக மக்களையும் குறிவைத்து ஜக்தீப் தங்கரை பா.ஜ.க. களமிறக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஹரியானாவிலும் ஜாட் சமூகத்தினர் இருக்கிறார்கள்.
அவரது இந்த வெற்றி ராஜஸ்தான் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சமுதாய ரீதியாக பலம் கொடுக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. நடக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
–அப்துல் ராஃபிக்
கலைஞருக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மரியாதை!