இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்?

அரசியல் சிறப்புக் கட்டுரை

நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி கட்டத்தில் இந்தியா நிற்கிறது. 57 தொகுதிகளில் ஏழாம் மற்றும் இறுதி கட்டத் தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்று தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலக்கட்டத்தில் அவர் செய்து கொண்டிருப்பது மறைமுகமான தேர்தல் பிரச்சாரம் என்ற விமர்சனத்தை எதிர்கட்சிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழாம் கட்டத் தேர்தலைப் பொறுத்தவரை பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. எனவே பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளிலும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. சண்டிகர் ஒரே தொகுதியாக இருப்பதால் அங்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் ஏற்கனவே நடந்து முடிந்த தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளிலும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளிலும், உத்திரப் பிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், பீகாரில் 8 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு கட்டத் தேர்தல்களின் முடிவுகளிலேயே 278 தொகுதிகளை வென்று ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டது பாஜக. ஆனால் இந்த முறை அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள் 2024 தேர்தல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். எனவே ஏழாம் கட்டத் தேர்தல்தான் இந்தியாவை ஆளப் போவது யார் என்பதை முடிவு செய்யப் போகிறது என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஏழாவது கட்டத் தேர்தல் நடைபெறுகிற தொகுதிகளின் முடிவுகள் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு சாதகமில்லாத முடிவுகளைத் தந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த 57 தொகுதிகளைப் பொறுத்தவரை, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து 30 தொகுதிகளைக் கைப்பற்றின. பாஜக தனியாக 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் 21 தொகுதிகளைக் கைப்பற்றின. ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சி 4 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி உத்திரப் பிரதேசத்தில் 2 தொகுதிகளையும் கைப்பற்றியது.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. அங்கு போட்டியே ஆம் ஆத்மிக்கும் காங்கிரசுக்கும் இடையில் தான். கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளம் இந்த முறை பாஜக கூட்டணியிலிருந்து விலகி விட்டதால் பாஜகவால் பஞ்சாபில் ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது என்பதே பஞ்சாப் அரசியல் வட்டாரங்கள் சொல்லும் செய்தியாக இருக்கிறது. எனவே 57 தொகுதிகளில் பஞ்சாபைச் சேர்ந்த 13 தொகுதிகளை மொத்தமாக பாஜக இழக்கும் வாய்ப்புகளே அதிகம். மீதமுள்ள 44 தொகுதிகளைத் தான் பாஜக நம்பியுள்ளது.

உத்திரப் பிரதேசம்

கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் தேர்தல் நடைபெறுகிறது. உத்திரப் பிரதேசத்தில் பாஜக வலுவாக இருப்பதாகக் கருதப்பட்டாலும் இந்த முறை சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணி பாஜகவிற்கு கடும் போட்டியைக் கொடுப்பதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாக இருக்கக் கூடிய சிறிய கட்சிகளான அப்னா தள், நிஷாத் கட்சி, SBSP ஆகிய கட்சிகளும் கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க வலுவினைக் கொண்டிருக்கின்றன. இது இந்தியா கூட்டணிக்கு சில பின்னடைவுகளை உருவாக்கும்.

சமாஜ்வாதி கட்சி தனது வழக்கமான அடையாளமான யாதவ்-முஸ்லீம் கட்சி என்ற அடையாளத்தை போக்கும் வண்ணம், சோசியல் இஞ்சினியரிங் முறையில் யாதவ் தவிர்த்த மற்ற ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இது ஓரளவுக்கு கிரவுண்டில் வொர்க் அவுட் ஆகும் என்று பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சில தொகுதிகளில் பாஜகவை வீழ்த்தினாலும் அது இந்தியா கூட்டணிக்கு முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

பீகார்

பீகாரில் 8 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த முறை இந்த 8 தொகுதிகளையுமே பாஜகவே வென்றது. ஆனால் அதற்குப் பிறகு 2020 ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த 8 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றிகளின் அடிப்படையில் பார்த்தால், 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் கட்சிகளே அதிகமான வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. மேலும் இந்த முறை தேஜஸ்வி யாதவின் பிரச்சாரம் பீகாரில் பெரிய அளவுக்கு எடுபட்டிருப்பதாக சொல்லப்படுவதால், இந்தியா கூட்டணி இந்த தொகுதிகளில் ஓரளவுக்கு வெற்றிகளைப் பெற முடியும் என்று எதிர்பார்த்திருக்கிறது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் தென்கிழக்குப் பகுதியில் 9 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் கடந்த முறை அனைத்து தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ் வலுவாக உள்ள பகுதிகளில் விரிசலை ஏற்படுத்த பல ரோடு ஷோக்களை நடத்தியிருக்கிறார் மோடி. ஏழாவது கட்டத் தேர்தலில் மற்ற மாநிலங்களில் பாஜக இழக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஈடுகட்ட மேற்கு வங்கத்தைத்தான் குறிவைத்திருக்கிறது பாஜக.

ஒடிசா

ஒடிசாவில் தேர்தல் நடைபெறும் ஆறு தொகுதிகளில் 4 தொகுதிகளை பிஜூ ஜனதா தளம் கட்சியும், 2 தொகுதிகளை பாஜகவும் கைப்பற்றியது. இந்த முறை ஒடிசாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாஜக பிரச்சாரம் செய்திருப்பதால், அங்கும் தனது கணக்கை அதிகப்படுத்த முடியும் என்று பாஜக நினைக்கிறது.

ஏழாவது கட்டத் தேர்தலில் பெரிய இழப்புகளை பாஜக சந்திக்கும் பட்சத்தில் மீண்டும் மோடி என்ற பாஜக கூட்டணியின் கனவு பறிபோக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் எப்படியாவது கடந்த முறை பெற்ற எண்ணிக்கையை மீட்டு விட வேண்டும் என்று பாஜக வேலை செய்திருக்கிறது. 2024 தேர்தலில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதையே ஏழாம் கட்டத் தேர்தல்தான் முடிவு செய்யப்போகிறது என்பதால் நாடு முழுதும் அரசியல் விமர்சகர்களால் உற்றுக் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

விவேகானந்தன்

 

ராஜஸ்தானில் இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்லும்?

மகாராஷ்டிரா: உள்ளே, வெளியே… பாஜகவுக்கு எதிரான பல்முனைத் தாக்குதல்!

யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?

+1
0
+1
1
+1
0
+1
3
+1
1
+1
0
+1
1