தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜனவரி 8) அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரம் தொடர்பாக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
பெயரை சொல்லமாட்டேன்
இந்த தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், “பல்கலைக் கழகத்தின் பெயரை சொல்லி நீங்கள் எல்லாம் பேசியிருக்கிறீர்கள். ஆனால் நான் பல்கலை பெயரை சொல்லி அந்த பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் எங்களை எல்லாம் ஆளாக்கியவர் அவர்.
அந்த பெயரை தவிர்த்து, சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்க கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுகுறித்து இந்த அவையில் வேல்முருகன், சிந்தனை செல்வன், ஜி.கே.மணி, ஜெகன்மூர்த்தி, நாகை மாலி, உதயக்குமார் ஆகியோர் கருத்துகளை பேசியிருக்கிறார்கள்.
இதில் உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசியிருக்கீறீர்கள்.
இந்த ஆட்சி மீது தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காகவும் ஒரு உறுப்பினர் பேசியிருக்கிறார்.
துரிதமான நடவடிக்கை
யாருக்கு எந்த எண்ணம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நின்று சட்டப்படி நியாயம் பெற்றுத் தரக்கூடிய காரியத்தை தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
குற்றம் நடந்த பிறகு ஒருவேளை உடனடியாக குற்றவாளியை கைது செய்யாமல் விட்டிருந்தாலோ… குற்றவாளியை காப்பாற்ற முயன்றிருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம்.
சில மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த பிறகும் குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகும் அரசை குறை சொல்வது என்பது அரசியல் ஆதாயத்துக்குதான், உண்மையான அக்கறையோடு செயல்படுவதில்லை என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
24.12.2024 அன்று சென்னை மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மறுநாள் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இது துரிதமான, சரியான நடவடிக்கை.
இருந்தாலும் எதிர்க்கட்சிகள் எப்.ஐ.ஆர் கசிந்தது தொடர்பாக பேசுகிறார்கள். இதற்கு காரணம், ஒன்றிய அரசின் கீழ் செயல்படுகிற தேசிய தகவல் மையம்தான்(என்.ஐ.சி).
அதுகாவல்துறையால் சுட்டிக்காட்டப்பட்டு தொழில்நுட்ப கோளாறும் சரி செய்யப்பட்டது. விளக்கம் கொடுத்து என்.ஐ.சி-யும் கடிதம் எழுதியுள்ளது.
அடுத்ததாக, பாதுகாப்பு இல்லை… கேமரா இல்லை என பொத்தாம் பொதுவாக கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. சம்பவம் நடந்த வளாகத்தில் சுற்றியிருக்கக் கூடிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் உதவியோடுதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
யார் அந்த சார்?
முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு, யார் அந்த சார்? என கேட்கிறீர்கள்.
உயர் நீதிமன்ற உத்தரவுபடி நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுதான் இந்த புகாரை விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த புலன் விசாரணையில் வேறு யாராவது குற்றம் செய்தது தெரிய வந்தால் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று 100 சதவிகித உறுதியுடன் தெரிவித்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிமன்றம் மூலம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என்பதை இந்த அவைக்கு மீண்டும் உறுதியோடு தெரிவித்துகொள்கிறேன்.
யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறீர்கள். உண்மையில் உங்களிடம் இதற்கு ஆதாரம் இருந்தால் அதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் கொடுங்கள். யார் தடுக்க போகிறார்கள்.
அதைவிட்டுவிட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில் வீண் விளம்பரத்துக்காக, குறுகிய அரசியல் லாபத்துக்காக மலிவான செயலில் ஈடுபட வேண்டாம்.
இந்த அரசை பொறுத்தவரை பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்கும். இந்த ஒரு சம்பவத்தை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் இருப்பது போல ஒரு சதி தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். இது மக்கள் மத்தியில் எடுபடாது.
பெண்களுக்கு எதிரான குற்றத்துக்கு எவ்வளவு நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்பது மக்களுக்குத் தெரியும். 86 சதவிகித வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றி 2,39,000 க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம்.
சத்யா என்ற பெண்ணை ரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் மிக குறுதிய காலத்தில் உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை பெற்று தந்தது இந்த அரசுதான்.
வீண் பழியை சுமத்தாதீர்கள்.
வழக்கு ஒன்றில் நீதிமன்றமே எதிர்க்கட்சி வழக்கறிஞரை பார்த்து பெண்களின் பாதுகாப்புக்கான உண்மையான அக்கறையோடு செயல்படுவதை விட்டுவிட்டு, இந்த வழக்கில் ஏன் அரசியலாக செயல்படுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறது என்பதை இங்கு நினைவுப்படுத்துகிறேன்.
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரங்களில் முதல் 10 இடங்களில் சென்னையும் கோவையும் உள்ளது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு தான்.
10 லட்சத்துக்கும் உட்பட்ட மக்கள் தொகை கொண்ட சிறிய நகரங்களான, திருச்சி,வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய ஐந்து நகரங்களும் பாதுகாப்பான நகரங்களாக உள்ளன.
மனசாட்சி இல்லாமல் பெண்களின் பாதுகாவலர்கள் போல் பேசுபவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று நினைத்துப் பாருங்கள் .
பொல்லாத ஆட்சி பொள்ளாட்சியே சாட்சி…
பொள்ளாச்சியில் நடந்தது ஒரு பெண் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றம் அல்ல. தொடர்ச்சியாக பல பெண்களுக்கு இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. அப்போது அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை, கைதானவர்களையும் விடுவித்துவிட்டார்கள்.
சிபிஐக்கு வழக்கு போன பிறகுதான் உண்மையெல்லாம் வெளியில் வந்தது. இதுதான் அதிமுக ஆட்சியின் லட்சணம்.
இது மட்டுமா, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை குற்றம் செய்தவர்களிடமே கொடுத்துவிட்டனர். இதையடுத்து அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்குகிறார்.
அந்த புகார் மீதும் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பிரச்சனை பெரிதாகிறது என்று தெரிந்ததும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரான திருநாவுக்கரசை கைது செய்யாமல் யாரோ மூன்று பேரை கைது செய்து கணக்கை முடிக்க பார்த்தார்கள்.
ஆனால் சிபிஐ விசாரணையில் பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அதிமுக பிரமுகர்களால் நடத்தப்பட்டது என்று தெளிவாக சொல்லிவிட்டார்கள்” என்று அதிமுகவினர் மீது குற்றம்சாட்டி பேசிக்கொண்டிருந்த போதே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருக்கையில் இருந்து எழுந்து கோஷம் எழுப்பினர்.
அப்போது சபாநாயகர் சிஎம் பதில் சொல்லி முடிக்கட்டும் உட்காருங்கள் என்று கூறினார்.
எனினும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், [அவர் பதில் சொல்வதை உங்களால் ஏற்க முடியவில்லை’ என்று கூறி மீண்டும் முதல்வர் ஸ்டாலினை பேச அனுமதித்தார் சபாநாயகர்.
அப்போது பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அதிமுக பிரமுகர்களால்தான் நடத்தப்பட்டது என்று சிபிஐ தெளிவாக சொல்லிட்டார்கள் என பேசிக்கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எல்லாம் கதை என்று கத்தினர்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “அதிமுகவினரை காப்பாற்றத்தான் செயல்பட்டார்கள். இதனால் தான் நான் சொன்னேன், பொல்லாத ஆட்சிக்கு சாட்சிதான் பொள்ளாச்சி என்று.
இதுபோல 100 சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும்… ஒரு முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையும் தகுதியை மறந்து அரசியலில் எந்தளவுக்கு தாழ்ந்து போக தயாராக இருக்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு…
பொள்ளாச்சி வழக்கில் முதல்தகவல் அறிக்கை தாக்கல் செய்ய 12 நாட்கள் ஆச்சு… ஆனால் சென்னை மாணவி வழக்கில் புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
பாஜக செய்வதையெல்லாம்…
இந்த வழக்கு பற்றி பாஜகவினர் பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாஜகவினர் செய்வதையெல்லாம் சொல்லி இந்த அவையின் மாண்பை குறைக்க விரும்பவில்லை.
அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புடன் பேச வேண்டும். சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முழு வீச்சில் நடந்துகொண்டிருக்கிறது.
வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். திராவிட மாடல் ஆட்சி மகளிருக்கான ஆட்சி” என்று பதிலளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் போதே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
“அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது? காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்தது? யார் அந்த சார்? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய முழு விவரங்களை உரிய அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டிருந்தார். அதன்படியே அந்த ரிப்போர்ட் முதல்வர் கையில் நேற்று இரவு அளிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி எதிர்க்கட்சிகளுக்கு இன்று ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
அண்ணா நகர் சிறுமி விவகாரம் குறித்து பேசிய அவர், “இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த 103ஆவது வட்டச் செயலாளர் சுதாகர், இன்ஸ்பெக்டர் ராஜி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுதாகர் அதிமுகவைச் சேர்ந்தவர்.
ஆனால் ஞானசேகரன் திமுக காரர் அல்ல. ஆதரவாளர் தான்… அதை நான் மறுக்கவில்லை. அமைச்சர்களோடு, அரசியவாதிகளோடு படங்கள் எடுத்திருக்கலாம். அதில் தவறு இல்லை. திமுக காரராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்பேன்.. ஆனால் திமுக காரர் இல்லை. எங்களுக்கு பெண்கள் பாதுகாப்புதான் முக்கியம்” என விளக்கமளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஹனிரோஸ் பாலியல் புகார் : பதுங்கிய பாபி செம்மனூர் கைதானது எப்படி?
போக்சோ வழக்கில் கைது : அதிமுக நிர்வாகியை கட்சியைவிட்டு தூக்கிய எடப்பாடி