தாய்மாமன் போட்ட விதை… வைகோ வளர்த்த விருட்சம்! யார் இந்த கணேசமூர்த்தி?

அரசியல்

மதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஈரோடு எம்பி கணேசமூர்த்தியின் தற்கொலை அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்தி… மார்ச் 24 ஆம் தேதி ஈரோட்டில் உள்ள தனது இல்லத்தில் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். முதலுதவிக்குப் பின் கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணேசமூர்த்தி மார்ச் 28 ஆம் தேதி காலமாகிவிட்டார்.

ஈரோடு அருகில் உள்ள பூந்துறை தாலுகா, சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு கிராமத்தில் பிறந்தவர் கணேசமூர்த்தி. செல்வச் செழிப்பான விவசாய குடும்பத்தின் மகனாகப் பிறந்த கணேச மூர்த்தி தன்னுடைய பள்ளிப்பருவத்தில் சென்னிமலை அருகில் உள்ள தனது தாய்மாமன் ஊரான உலகபுரத்தில் பள்ளி படிப்பு படித்தவர்.

அவரது தாய் மாமன்களில் ஒருவரான உலகபுரம் பாலசுப்பிரமணியம் சோசியலிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.அன்றைய காலகட்டத்தில் இராம் மனோகர் லோகியா மதுலிமாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற பெரும் தலைவர்கள் அடிக்கடி உலகபுரம் வருவதும் ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடுவதுமான அரசியல் வகுப்புகள் அங்கு நடந்து வந்தது. அதுதான் கணேசமூர்த்திக்குள் பள்ளிப் பருவத்திலேயே அரசியலை விதைத்தது.

இந்தியா முழுதும் இருந்தும் தலைவர்கள் வருவதைப் பார்த்து பிரம்மித்த கணேசமூர்த்தி, அவர்களைப் பற்றி தாய்மாமா உலகபுர பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
’மாமா… இதுபோல நானும் அரசியலுக்கு வரணும்’ என்ற தனது ஆர்வத்தையும் அப்போது அவரிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் கணேச மூர்த்தி.

மருமகனின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட பாலசுப்பிரமணியம்… கணேசமூர்த்தியை பள்ளிப் படிப்பு முடித்ததும் சென்னை தியாகராயர் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். அங்கே பி.ஏ. பொருளாதாரம் பயின்றார். அதன் பின் சென்னையிலேயே சட்டக் கல்லூரியில் இணைந்தார்.

இந்த கல்லூரி காலகட்டத்தில்தான் கணேசமூர்த்திக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இந்தி மொழித் திணிப்புக்கு எதிர்ப்பு, தமிழ் மொழிக்கான பாதுகாப்பு ஆகிய திமுகவின் முழக்கங்கள் உலகபுரத்தில் இருந்தே அரசியல் ஆர்வத்தோடு வந்திருந்த கணேசமூர்த்தியை இயல்பாகவே ஈர்த்தன. திமுக மாணவர் அணியில் இணைந்தார் கணேசமூர்த்தி.

சட்டக் கல்லூரியில் கணேசமூர்த்தியோடு பயின்ற செஞ்சி இராமச்சந்திரன், கரூர் சின்னசாமி ஆகியோர் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். அப்போது பெருஞ்சித்திரனார் நடத்திய மாதப் பத்திரிகையான தென்மொழி தமிழ் உணர்வு தகிக்க வெளிவரும். அந்தப் பத்திரிகையின் தீவிர வாசகர்கள் இவர்கள்.

திமுக மாணவர் அணியில் இடம்பெற்றிருந்தபோதுதான் வை.கோபால்சாமி என அப்போது பரபரப்பாக அறியப்பட்ட வைகோவின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது கணேசமூர்த்திக்கு. சட்டக் கல்லூரி தேர்தல் களத்தில் கணேசமூர்த்தியை ஈடுபடுத்தினார் வைகோ. மாணவர்கள் சார்பில் அறுபதுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களான வைகோ, கணேசமூர்த்தி உள்ளிட்டோர் வீரியமாக பங்கேற்றனர்.

கணேசமூர்த்தியின் தீவிரமான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட அன்றைய திமுக தலைவர் கலைஞர், இளைஞரான கணேசமூர்த்திக்கு மாணவரணியில் பதவி கொடுத்தார். அதன் பின் 1984ல் ஒருங்கிணைந்த ஈரோடு பெரியார் மாவட்டச் செயலாளராக திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியைப் பெற்றார் கணேசமூர்த்தி. கொங்கு பகுதி விவசாயிகளுக்காக பல போராட்டங்களை நடத்தினார்.

வைகோவின் சிபாரிசின் பேரில் 1989 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு முதன் முறையாக சட்டமன்றம் சென்றார் கணேசமூர்த்தி.

கல்லூரி மாணவராகத் தொடங்கி திமுகவின் மாசெ என வைகோவுடன் தொடர் பயணத்தை மேற்கொண்ட கணேச மூர்த்தி, 1993 இல் திமுகவில் இருந்து வைகோ வெளியேறும்போது வைகோ பின்னால் பயணித்தார். கொங்கு மண்டலத்தில் கணேசமூர்த்தியின் கரம் வைகோவுக்கு பெரும் பலமாக இருந்தது.

இந்த நன்றிக்காக 1998 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய பழனி தொகுதி (இப்போது திண்டுக்கல் எம்பி தொகுதி) யில் கணேசமூர்த்தியை வேட்பாளராக நிறுத்தினார் வைகோ. தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுகவின் ஆதரவோடு வெற்றி பெற்றார் கணேசமூர்த்தி.
தமிழீழப் போராட்டத்தை மிக உறுதியோடு ஆதரித்தவர். இதற்காகவே 2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் வைகோவோடு பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது வைகோவுடன் மிகவும் நெருங்கியவராக ஆகிவிட்டார் கணேசமூர்த்தி.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அடுத்து 2009 நாடாளுமன்றத் தொகுதியில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் தோல்வி அடைந்த கணேசமூர்த்தி, மீண்டும் 2019 இல் ஈரோட்டில் இருந்து வெற்றி பெற்றார்.

கெய்ல், ஐடிபிஎல், உயர் மின் கோபுரம் இதுபோன்ற வேளாண் துறையை பாதிக்கின்ற போராட்டங்களில் முன்னணியில் நின்று விவசாய இயக்கங்களை இணைத்து போராட்டத்திற்கு வலுச் சேர்த்தவர்.

ஈரோடு மாநகரில், அன்றைய பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட அனைத்திந்தியத் தலைவர்களையும் அழைத்து எழுச்சியுடன் நடத்திய மாபெரும் மாநாடு கணேசமூர்த்தியின் கள அரசியலுக்கு மாபெரும் எடுத்துக் காட்டாக அமைந்தது.  கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற போது, தமிழ்நாடே என் தாய்நாடு என்று முழக்கமிட்டு பதவி ஏற்றார் கணேசமூர்த்தி.

சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை இழந்த கணேசமூர்த்தி, முழுவதும் மக்கள் பணியிலேயே வாழ்நாளை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த நிலையில் திடீரென இப்படி தற்கொலை செய்துகொண்டது அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கணேசமூர்த்தியின் மறைவுக்காக தனது ஐம்பதாண்டு நண்பரை இழந்து கண்ணீர் வடிக்கிறார் வைகோ.

“கணேசமூர்த்தி கடந்து வந்த பாதையை கவனித்துப் பார்த்தால், ஒரு எம்.பி. சீட்டுக்காக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கான மீச்சிறு அரசியல்வாதி அல்ல அவர். கொள்கைப் பெருக்கோடு தமிழ்ச் செருக்கோடு அரை நூற்றாண்டு அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரர் கணேசமூர்த்தி” என்கிறார்கள் ஈரோட்டில் அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்களும்.

வேந்தன்

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரிய தம்பிக்கு என்னாச்சி?

பினராயி விஜயன் மகள் மீது வழக்கு பதிந்த அமலாக்கத்துறை..கொதிக்கும் கேரள சிபிஎம்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *