திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று (மார்ச் 25) திருநெல்வேலி தொகுதிக்கான வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் மயிலாடுதுறை தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் யார் என்ற குழப்பம் தொடர்ச்சியாக நீடித்து வருகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்களில் பேசியபோது, ”சோனியா காந்தி ஒருவர் பெயரை சொல்கிறார், ராகுல் காந்தி ஒருவர் பெயரை சொல்கிறார். இரண்டு வேட்பாளர்களை மையப்படுத்தி யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது” என்கிறார்கள்.
அகில இந்திய மகிளா காங்கிரசின் தேசிய நிர்வாகி ஹசீனா சையத் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டின் தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்.
சோனியா காந்தி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் அவருடனேயே இருப்பவராக ஹசீனா சையத் இருக்கிறார். டெல்லியிலும் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வருகிறார். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதற்கு ஹசீனா சையதைத்தான் கை காட்டுகிறார் சோனியா காந்தி.
அடுத்ததாக போட்டியில் இருக்கும் அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரசின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ராகுல் காந்திக்கு நெருக்கமானவர். அரசியல் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்களை நுணுக்கமாக எடுத்து வைப்பதில் திறன்மிக்கவர்.
நிர்மலா சீதாராமன் பாஜக ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி குறித்து வைக்கும் வாதங்களுக்கு புள்ளி விவரங்களோடு எதிர் வாதத்தை வைத்து பெயர் பெற்றவர். தேசிய அளவில் தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் சார்பாக கலந்து கொள்பவர். ராகுல் காந்தி இவரை வைத்து காங்கிரசில் புள்ளிவிவர பகுப்பாய்வு பிரிவு என தனி பிரிவையே உருவாக்கினார். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதற்காக பிரவீன் சக்ரவர்த்தியைத்தான் கை காட்டுகிறார் ராகுல் காந்தி.
இவர்கள் இருவர் பெயரையும் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மயிலாடுதுறை தொகுதிக்கு பரிந்துரைத்து வருவதால் இருவரில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்ற பிரச்சினை கட்சிக்குள் முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது.
மேலும் இவர்கள் இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களை மயிலாடுதுறை தொகுதிக்கு வேட்பாளராக களமிறக்கினால், இந்த தொகுதியில் இத்தனை ஆண்டு காலம் உழைத்த நாங்கள் எங்கே போவது என்று உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளும் மல்லுக்கு நிற்கிறார்கள். ஆகமொத்தம் மயிலாடுதுறையை மையப்படுத்தி காங்கிரசுக்குள் ஒரு மினி பூகம்பமே நடந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவை தேர்தல்: விலைபோகும் வேட்பாளர்கள்!
நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!