தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா ஜூலை 1ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பார்த்து பார்த்து நியமனம் செய்தார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில் அரசின் தலைமை செயலாளராக இறையன்புவை நியமித்தார்.
இறையன்புவை நியமித்ததற்கு முன்னதாகவே தலைமை செயலாளரை தேர்வு செய்வதற்கான லிஸ்டில் முதலில் சிவதாஸ் மீனாதான் இருந்துள்ளார்.
“2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது சிவதாஸ் மீனா மத்திய அரசில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தார். அப்போதே, சிவதாஸ் மீனாவை முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டனர். “நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துவிடுங்கள், புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்படுவீர்கள்” என சிவதாஸ் மீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பின் பேரில் சிவதாஸ் மீனாவும் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் அவர் தலைமை செயலாளராக நியமிக்கப்படவில்லை. இறையன்பு தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். சிவதாஸ் மீனா நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைமை செயலாளர் பதவி வழங்காததால் சற்று அதிருப்தியில் இருந்தார்” என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில்தான் அப்போது கொடுத்த வாக்குறுதியின் படி தற்போது தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் சிவதாஸ் மீனா.
இவர் தான் அடுத்த தலைமை செயலாளர் என்று மின்னம்பலத்தில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியான டிஜிட்டல் திண்ணையில் தெரிவித்திருந்தோம். இன்று (ஜூன் 29) அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
யார் இந்த சிவதாஸ் மீனா
ராஜஸ்தான் மாநிலம் டோன்க் மாவட்டத்தில் 1964ஆம் ஆண்டு பிறந்தார். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்த இவர், ஜப்பான் சென்று சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றார்.
முதுகலை பட்டம் பெற்றதோடு ஐஏஎஸ் பணிக்கு தயாரான சிவதாஸ் மீனா, கடந்த 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சில் தேர்வானார். தமிழகத்தில் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பணியை தொடங்கினார்.
தொடர்ந்து கோவில்பட்டியில் கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
1993 – 1996 வரை கோவை, வேலூர் மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியர் அந்தஸ்திலான ஊரக வளர்ச்சி, வருவாய் நிர்வாக செயலாளராக பணியாற்றினார்.
அப்போது ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஜீவா போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார்.
சிவதாஸ் மீனா 1998ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் நாகை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தார். 2001 வரை நாகை ஆட்சியராக இருந்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இணைச் செயலாளர், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக இருந்த சிவதாஸ் மீனா, 2002ல் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தின் நிர்வாக இயக்குநராகவும், 2006ல் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றினார்.
உணவுத் துறை, உயர்கல்வித் துறை, வணிக வரித் துறை, சிவில் சப்ளை துறையின் இணை ஆணையராகவும் சிவதாஸ் மீனா பொறுப்பு வகித்தார். மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல் இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார்.
ஜெயலலிதா குட்புக்கில் சிவதாஸ் மீனா
2011ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நிதி முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பல்கலையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கியது. அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் சிறப்பாக செயல்பட்டு பல்கலையை வழிநடத்தியவர் என ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் பெற்றார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது, ஜெயலலிதாவின் இரண்டாவது தனி செயலாளராக இருந்தார் சிவதாஸ் மீனா. ஜெயலலிதா மறைந்த பின் ஓபிஎஸ், ஈபிஎஸ் என அதிகார மாற்றம் ஏற்பட்ட போதும் 2017 ஜூலை வரை முதல்வரின் தனி செயலாளராக பதவி வகித்தார்.
2017ஆம் ஆண்டு ஜூலைக்கு பிறகு மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட சிவதாஸ் மீனா, வீட்டு வசதித் துறை கூடுதல் செயலாளராகவும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்து முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மீண்டும் தமிழகத்துக்கு அழைத்துக்கொள்ளப்பட்டார் சிவதாஸ் மீனா. கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றினார்.இப்படி 34 ஆண்டுகளாக இந்திய ஆட்சி பணியில் அனுபவம் பெற்ற சிவதாஸ் மீனா தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவதாஸ் மீனாவுடன் போட்டியில் இருந்தவர்கள்.
சீனியாரிட்டி படி பார்த்தால் சிவதாஸ் மீனாவுடன் 1986 – 1992ஆம் ஆண்டு வரையில் உள்ள 32 ஐஏஎஸ் அதிகாரிகள் போட்டியில் இருந்தனர். இவர்கள் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கின்றனர். இந்த ரேங்க் பட்டியலில் முதலிடத்தில் ஹன்ஸ்ராஜ் வர்மா இருந்தார். 12வது இடத்தில் தான் சிவதாஸ் மீனா இருந்தார். அதாவது, ஹன்ஸ்ராஜ் வர்மா 1986ஆம் ஆண்டு பேட்ஜ் அதிகாரி. சிவதாஸ் மீனா 1989 பேட்ஜ் அதிகாரி.
சீனியாரிட்டி படி, ஹன்ஸ்ராஜ் வர்மாவை நியமிக்காமல் சிவதாஸ் மீனாவை நியமிப்பதற்கு காரணம் 2021ஆம் ஆண்டு முதல்வர் தரப்பில் கொடுத்த வாக்குறுதிதான். முதல்வர் குடும்பத்திலிருந்தே அவரது மருமகன் சபரீசன் அடுத்த தலைமை செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மாவை நியமிக்கலாம் என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் ஏற்கனவே எடுத்த முடிவின் படியும், நகராட்சி துறையில் சிவதாஸ் மீனா செயல்பட்ட விதத்தையும் பார்த்தும் அவர்தான் தலைமை செயலாளராக வர வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஹன்ஸ்ராஜ் வர்மா
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் சிவதாஸ் மீனா 49ஆவது தலைமை செயலாளராக தனது பணியை தொடங்கவுள்ளார்.
தற்போது தலைமை செயலகத்திலேயே மத்திய அரசின் விசாரணை அமைப்பான அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருக்கும் வேளையில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே சுமூக உறவு இல்லாமல் இடைவெளி அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.
இந்தசூழலில் தலைமை செயலாளராக பொறுப்பேற்கவுள்ள சிவதாஸ் மீனா என்ன செய்ய போகிறார் என்பதை அனைவரும் உற்று நோக்கியுள்ளனர்.
பிரியா
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்!
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால்