கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கான பெரும்பான்மையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில்… அக்கட்சிக்கே உரிய பதவிச் சண்டை இன்று(மே 13) காலையே அங்கே தொடங்கிவிட்டது.
”கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் சார்பில் இன்னார் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று யாரும் முன்னிறுத்தப்படவில்லை.
அதேநேரம் சட்டமன்றத் தேர்தலுக்கான பெரும்பான்மை செலவுகளை ஏற்றுக்கொண்டு மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை தீவிரமான வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றவர் மாநிலத் தலைவர் டி கே சிவகுமார் ” என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது பதவி சண்டையாலேயே பின்னடைவை சந்திக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளரான பசவ ராஜ் பொம்மை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில்…
அதை இப்போது உறுதிப்படுத்தி இருக்கிறார் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் மகன் யதீந்திரா.
இன்று காலை ஏ என் ஐ செய்தி நிறுவனத்திற்கு யதீந்திரா அளித்த பேட்டியில்…
‘ஒரு மகன் என்ற அடிப்படையில் சித்தராமையா மீண்டும் முதலமைச்சராவதை நான் விரும்புகிறேன். அவர் ஏற்கனவே கர்நாடகத்துக்கு நல்லாட்சியை கொடுத்தவர்.
கடந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. நிர்வாகம் சீர்கெட்டு விட்டது.
அவற்றையெல்லாம் சரிப்படுத்தி மீண்டும் நல்லாட்சி தருவதற்கு என்னுடைய தந்தையாருக்கு முதலமைச்சர் பதவியை தர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தில் இருக்கும் வேட்பாளர்கள் வெற்றிச் சான்றிதழ் பெற்ற உடனேயே பெங்களூருக்கு வந்து சேர வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பேரம் பேசி விலைக்கு வாங்கி விடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த உத்தரவை காங்கிரஸ் பிறப்பித்துள்ளது.
–வேந்தன்
ஆஸ்கர் விருது குறித்து ’டைம்’ இதழில் தீபிகா
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 10 மணி நிலவரம்!