ராகுலின் சாதியை இழுத்த பாஜக எம்.பி…டிசைன் டிசைனாய் சர்ச்சைகள்…யார் இந்த அனுராக் தாக்கூர்?

சொந்த சாதியே தெரியாதவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கிப் பேசி நாடாளுமன்றத்தை ரணகளமாக்கியிருக்கிறார் பாஜக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர். இதற்கு இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சர்ச்சைக்குரிய அந்த வார்த்தைகள் நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி அவரது பேச்சை அனைவரும் அவசியம் கேட்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார். மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தினை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது.

அனுராக் தாக்கூரின் பெயர் சர்ச்சைகளில் அடிபடுவது இது முதல் முறையல்ல. டிசைன் டிசைனாக பல சர்ச்சைகளை தனது பேச்சில் கிளப்பி விட்டு சர்ச்சைகளுக்கே பெயர் பெற்றவர் அனுராக் தாக்கூர். ஹிமாச்சலப் பிரதேச பாஜகவில் வாரிசு அரசியலின் அடையாளமாகத் திகழும் இந்த அனுராக் தாக்கூர் யார் என்பதைப் பார்ப்போம்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான பிரேம் குமார் துமாலின் மகன் தான் அனுராக் தாக்கூர். இவர் அம்மாநிலத்தில் ஹமிர்பூர் தொகுதியிலிருந்து 5 வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மோடியின் இரண்டாவது ஆட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும், தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார். மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இவருக்கு இடம் வழங்கப்படவில்லை.

அனுராக் தாக்கூர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கிரிக்கெட் ப்ளேயராக இருந்தார். ஆனால் நிறைய மேட்ச் எல்லாம் விளையாடவில்லை. ஹிமாச்சலப் பிரதேச அணிக்காக ரஞ்சி ட்ராபியில் ஒரே ஒரு மேட்ச் மட்டும் விளையாடியிருக்கிறார். அதன்பிறகு ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் அசோசியேசனில் ப்ளேயர்களை தேர்வு செய்யும் தேர்வாளர் குழுவின் தலைவராகிவிட்டார். கிரிக்கெட் அசோசியேசனின் தேர்வாளராக ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென்றால் அவர் ரஞ்சி ட்ராபியில் ஒரு மேட்சாவது விளையாடியிருக்க வேண்டும் என்பது பிசிசிஐ-யின் விதி. தேர்வுக் குழுவில் இடம்பெறுவதற்காகத்தான் அந்த ஒரு மேட்சில் அனுராக் தாக்கூர் விளையாடினார் என்பதும் சர்ச்சையாக மாறியது.

தேர்வுக் குழு தலைவராக மட்டுமல்லாமல், ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் அசோசியேசனின் தலைவராகவும் மாறினார். கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துபவராக வளர்ந்த அனுராக் தாக்கூர் 2016 ஆம் ஆண்டு பிசிசிஐ-ன் தலைவராகவும் ஆனார்.

ஆனால் சில மாதங்களிலேயே அவர் பிசிசிஐ-ன் தலைவராக நீடிக்கத் தகுதியற்றவர் என்று சொல்லி அனுராக் தாக்கூரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் துவங்கி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுக்க நடைபெற்றன. டெல்லியில் ஷாகின்பாக் பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. போராட்டத்தில் பங்கேற்றவர்களில் இசுலாமியர்கள் அதிகம். அந்த நேரத்தில் டெல்லியில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அனுராக் தாக்கூரின் பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையாக மாறியது.

2020 ஜனவரி மாதம் பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அனுராக் தாக்கூர், கூட்டத்தினரைப் பார்த்து ஷாகின்பாக் போராட்டக்காரர்களை மையப்படுத்தி அவர்கள் ”தேசத்தின் துரோகிகள்” என்று கத்தினார். எதிரே பாஜகவினர் ”அவர்களை சுட்டுத் தள்ளுவோம் சுட்டுத் தள்ளுவோம்” என்று பதிலுக்கு கத்தினர். மேலும் அவர்களை தூண்டும் விதமாக மீண்டும் மீண்டும் ”தேசத்தின் துரோகிகள், தேசத்தின் துரோகிகள்” என்று அனுராக் தாக்கூர் பல முறை கத்தினார். கூட்டத்தினர் மீண்டும் மீண்டும் சுட்டுத் தள்ளுவோம் சுட்டுத் தள்ளுவோம் என்று கத்தினர். தேர்தலில் பிரச்சாரத்தில் நிகழ்ந்த இந்த வெறுப்புப் பேச்சு நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அனுராக் தாக்கூரின் பேச்சிற்குப் பிறகு தான், சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது மூன்று இடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனையடுத்து தேர்தல் ஆணையம் பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலிலிருந்து அனுராக் தாக்கூரை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அனுராக் தாக்கூர் தேர்தல் பிரச்சாரம் செய்ய 72 மணி நேரத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.

மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பல முறை முஸ்லீம்களை மையப்படுத்தி பிரச்சாரத்தினை மேற்கொண்டார் அனுராக் தாக்கூர். தனது ஹரிம்பூர் தொகுதியில் பேசிய அனுராக் தாக்கூர், அந்நிய சக்திகளுக்காக காங்கிரஸ் கட்சி வேலை செய்து கொண்டிருப்பதாகவும், உங்கள் குழந்தைகளின் சொத்துகளை முஸ்லீம்களுக்கு தூக்கிக் கொடுக்க உள்ளார்கள் என்றும் மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அனுராக் தாக்கூர் தேர்தல் விதிகளுக்கு எதிராக பேசி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

மேலும் காங்கிரஸ் வந்தால் உங்கள் இட ஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடும் என்றும், உங்கள் சொத்துகளை அதிக மனைவிகள் வைத்துக் கொள்பவர்களுக்கும், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கும் கொடுத்து விடுவார்கள் என்றும்  பிரதமர் மோடிக்கு இணையாக பேசினார்.

இப்படி அரசியலுக்கு வந்ததிலிருந்தே சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற அனுராக் தாக்கூர் இப்போது ராகுல் காந்தியின் சாதி குறித்த சர்ச்சையை நாடாளுமன்றத்தில் கிளப்பி விட்டுள்ளார். ஆனாலும் இதனை சாதூர்யமாகக் கையாண்ட ராகுல் காந்தி, “நீங்கள் தினந்தோறும் என்னை எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ செய்யுங்கள். ஆனால் நாங்கள் கேட்பது சாதி வாரிக் கணக்கெடுப்பு; அதனை நாங்கள் நிச்சயம் கொண்டுவருவோம்” என்று சொன்னது பல பாசிட்டிவ் ரியாக்சன்களை அள்ளியுள்ளது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வயநாடு நிலச்சரிவு… ரெயின் கோட்டுடன் களத்தில் இறங்கிய ராகுல், பிரியங்கா

அருந்ததியர் 3% இட ஒதுக்கீடு… உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு!

Paris Olympics 2024 : இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்… ஸ்வப்னில் குசலே சாதனை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts