யார் இந்து? அண்ணாமலை – ஆ.ராசா வார்த்தைப் போர்!

அரசியல்

திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா இந்து மதம் பற்றி பேசிய வீடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (செப்டம்பர் 12) ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதில் இருந்து திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது.

இந்த வீடியோ வைரலான நிலையில், தற்போது ஆ.ராசா ஒரு ட்வீட் மூலம் இந்த விவாதத்தை மேலும் பற்ற வைத்துள்ளார்.

ஆ.ராசா அந்த வீடியோவில், இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி யார் எல்லாம் இந்து என பேசியுள்ளார். அதில், முஸ்லிம், கிறிஸ்தவர் அல்லது பார்சி அல்லாத யாராக இருந்தாலும் இந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறுவதாக பேசியிருந்தார்.

இந்த கொடுமை எந்த நாட்டிலாவது உண்டா என கேள்வி எழுப்பிய அவர், இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கிற வரை விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கிற வரை பஞ்சமன், தீண்டத்தகாதவன் என்றும் கூறியிருந்தார்.

எத்தனை பேர் தீண்டத்தகாதவனாகவும் விபச்சாரியின் மகனாகவும் இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க எழுப்புவதுதான் சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும் என்று பேசியிருந்தார் ஆ.ராசா.

மற்றவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் இந்துக்கள் மீது வெறுப்பை காட்டுவதாக இந்த வீடியோவை பகிர்ந்து விமர்சனத்தை தொடங்கி வைத்தார் அண்ணாமலை. அதனை தொடர்ந்து, பாஜகவினர் பலரும் இதற்கு எதிராக கொந்தளிக்க ஆரம்பித்தார்கள்.

மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிய ஸ்டாலின், ஆ.ராசாவை கைது செய்து சிறையில் அடைப்பாரா? என கேள்வி எழுப்பினார் பாஜக மாநில துணை தலைவர் நாராயண் திருப்பதி.

இந்த விவாதம் பரபரப்பாக சென்று கொண்டிருந்த சூழலில், இதுதொடர்பாக இன்று ட்வீட் செய்துள்ளார் ஆ.ராசா.

அவரது ட்விட்டர் பதிவில், ‘சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது? அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்?’ என கேள்விகளை அடுக்கியுள்ளார்.

இந்த பதிவுக்கு பதில் கொடுத்து ட்வீட் செய்திருக்கிறார் பாஜக மாநில துணை தலைவர் நாராயண் திருப்பதி. மனுஸ்மிருதி நூலே கிடையாது என்றும், அது உபதேசம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சர்.வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரால் திரித்து எழுதப்பட்ட நூலை ஆ.ராசா குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதை படித்து ஹிந்துக்கள் மத்தியில் குழப்பத்தையும் வெறுப்பையும் வளர்த்த வெள்ளையர்களின் அடிமையான திராவிட இயக்கம் ஹிந்து விரோத கூட்டம்தான் என கடுமையாக விமர்சித்துள்ளார் நாராயணன் திருப்பதி.

இந்துக்களுக்கு எதிரான கட்சியாக திமுக செயல்பட்டு வருவதாக பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இதற்கு திமுக தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. திமுகவில் இந்துக்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாக கூறியிருந்தார் ஸ்டாலின்.

இந்து மதத்தை வைத்து திமுகவை பாஜக ரவுண்டு கட்டும் நேரத்தில், ஆ.ராசாவின் பேச்சு இரு கட்சியினர் மத்தியிலும் மீண்டும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெயப்ரியா

நீட் தேர்வில் 104 மார்க் : அண்ணாமலை சொன்னால் சீட் கிடைக்குமா?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

1 thought on “யார் இந்து? அண்ணாமலை – ஆ.ராசா வார்த்தைப் போர்!

  1. இந்தக் கட்டுரை ஆசிரியருக்கு படிப்பறிவே இல்லையா?… இந்துமதம் எதுனு அரசியலமைப்புச் சட்டம் சொல்லுது… உச்சநீதிமன்றம் தனியா சொல்லல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *