அரசியல் செலவுக்கு சினிமாவில்தான் சம்பாதிப்பேன்… பொதுக்குழுவில் கமல்!

Published On:

| By Kavi

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (21-09-2024) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

இதில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு, சமூகநீதி திட்டங்களை முறையாக அமல்படுத்த சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “நீங்கள் எல்லாம் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்… பிக் பாஸுக்கு ஏன் போகிறீர்கள் என்றெல்லாம் என்னிடம் கேட்டார்கள். ஆனால் மக்களைச் சந்திக்கும் எந்த இடமானாலும் நான் செல்வேன் என்று கூறினேன்.

2014, 15  காலகட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அறிவித்திருந்தால், இந்நேரம் இந்தியா என்னவாக இருக்கும்?

ஒரே ஸ்வீப்பாக குடுமியை கையில் எடுத்திருப்பார்கள். அதன்பிறகு ஒருவர் பெயரை சொல்லி இங்கே ஒரு திருநாமம் தானே உரைக்கப்படும். அப்படியொரு சர்வாதிகார ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருப்போம்.

அதில் இருந்து நாம் தப்பித்திருக்கிறோம். கொரோனாவை விட கொடுமையான ஒரு நோயில் இருந்து தப்பித்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

எல்லா சிக்னல்களிலும் ஒரே நேரத்தில் பச்சையாக எரிந்தால் எப்படி இருக்கும். எனவே யோசிக்க வாக்காளர்களுக்கும், ஆட்சியில் அமர்பவர்களுக்கும் நேரம் கொடுக்க வேண்டும். அடுத்த 5 வருடத்தில் இதை செய்தால் வழிவிடுவார்கள் என்று பயம் வேண்டும்.

இப்போது ஆட்சி செய்பவர்களையும், ஆட்சியில் இருந்தவர்களையும், இனி வருபவர்களையும் குறிப்பிட்டுதான் இதை சொல்கிறோன். இது யாருக்கும் விடுக்கும் சவால் அல்ல.

இந்த பீடம் யாரும் நிரந்தரமாக அமரமுடியாத அசவுகரியமான பீடமாகத்தான் இருக்க வேண்டும். இது, நிரந்தர பதவி அல்ல. அப்படி இருக்கக்கூடாது என்பதுதான், நாங்கள் விரும்பும் ஜனநாயகம்.” என்று குறிப்பிட்டார்.

“நாளைய அரசியல் நம்மை பார்த்து பேசப்போகிறது. அதற்கு முன்னுதாரணமாக இன்றைய அரசியல்வாதிகள் நம்மைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலைபார்த்தார்கள் என்று நம்மை பற்றி முதல்வர் சொல்லியிருக்கிறார். பிள்ளைகளை நல்லா வளர்த்திருக்கிறியே என்றார்கள். நான் வைத்த வசவுக்கு எல்லாம் எனக்கு ஆனந்த கண்ணீர் கிடைத்தது” என்று தெரிவித்த கமல்,

Image

“என்னை மறுபடியும் சினிமாவுக்குள் போய்விட்டார் என்கிறார்கள். பிறகென்ன நான் கோட்டைக்கு சென்று கஜானாவை திறந்து பணம் எடுப்பேனா. வேலைக்குதான் போக வேண்டும். இந்த கூட்டம் நடத்துவதற்கு காசு வேண்டும்.

உங்களிடம் இவ்வளவு இருக்கிறதா? என்னிடம் இவ்வளவு இருக்கிறது? என எல்லாத்தையும் போட்டுதான் கூட்டம் நடத்துகிறோம். அதனால் தைரியமாக சொல்கிறேன். ரெய்டு வருவது என்றால் வாங்கள் என்று சொல்கிறேன். அந்த தைரியம் தொடரும்.

என்னை முழுநேர அரசியல்வாதி இல்லை என்கிறார்கள். அரசியல்வாதிகள்,பெரிய பெரிய தலைவர்கள் என பலரும் உட்கார்ந்து சீட்டு விளையாடுவதை பார்த்திருக்கிறேன். இவர்கள் எல்லாம் முழு நேர அரசியல்வாதிகளா?

யாரும் முழுநேர அரசியல்வாதி இல்லை என்று பெரியார் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது. 8 மணி நேரம் தூங்குபவர்களும் முழுநேர அரசியல்வாதி இல்லை. அவர்கள் வேறு கனவில்தானே இருப்பார்கள்.

எனவே இந்த விமர்சனம் எல்லாம் எங்களுக்கு பொருந்தாது. 9-5 வரை வேலை செய்தால் நாடே முன்னேறிவிடும்” என்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

“ஒரு தமிழன் பிரதமராக முடியுமா?  என்று கேள்வி எழுப்பிய கமல், அதற்கு நாம் தயாராக வேண்டும். நான் அரசியலுக்கு வந்தது எனக்காகவும் அல்ல.. நமக்காகவும் அல்ல..நாளைக்காக..

இன்றைய நாளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் விடியாது. நாளை என்றால்தான் அது பழுக்கும்.

2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை எனது அன்புக் கட்டளையாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று நிர்வாகிகளிடம் கூறினார் கமல்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

மகளுக்கு திருமணம் : முதல்வருக்கு பத்திரிகை வைத்த துரை வைகோ

விமர்சனம் : லப்பர் பந்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel