மாநில அரசுகள் தனியாக தொலைக்காட்சி நடத்தவோ, கேபிள் நிறுவனம் நடத்தவோ கூடாது என மத்திய அரசு அக்டோபர் 21ம் தேதி அறிவித்தது நாடெங்கும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னால் முக்கியமான அரசியல் காரணங்களும் புதைந்து கிடக்கின்றன என்கிறார்கள் தொலைக்காட்சி வட்டாரத்தினர்.
சில மாநில அரசுகள் தனியாக சேனல்கள் ஆரம்பித்தன. குறிப்பாக கொரோனா காலத்தில் கல்வி தொலைக்காட்சியை தொடங்கின. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கல்வி தொலைக்காட்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.
ஆனால் இதை விட மற்றொரு முக்கியமான ஒரு விஷயம், அரசு கேபிள்கள்… இதை கொண்டு வந்ததற்கு பின்னாலும் அரசியல் இருக்கிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2007ஆம் ஆண்டு கலைஞரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சன் டிவி எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால் கலைஞர் அந்த முடிவுக்கு வந்திருந்தார். காரணம், அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொலைக்காட்சியின் பங்கு அதிகம் இருந்தது என்பதுதான்.
அரசு கையில் கேபிள் டிவி நிறுவனம் இருக்கும் போது எந்த சேனல் தெளிவாக தெரிய வேண்டும், எந்த சேனல் மறைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஆள்வோர் கையில் இருக்கும்.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான வேலைகளில் இப்போதே தீவிரமாக இறங்கியுள்ள பாஜக, தமிழ்நாட்டில் உள்ள சேனல்களில் தங்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
எம்.பி பாரிவேந்தரும் தன்னுடைய புதிய தலைமுறை சேனலில் பாஜகவுக்கு ஆதரவாகவும், திமுக அரசுக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற அவர், கடந்த சில நாட்களாக திமுகவை விமர்சித்து வருகிறார்.
இதுபோல் மற்ற சில சேனல்களும் திமுக அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் செய்திகளை வெளியிட ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவர்களுக்கெல்லாம் இருக்கும் ஒரே பிரச்னை, அரசு கேபிள் என்பதுதான். தங்களுடைய சேனல்களை மக்கள் பார்வைக்கு தெளிவாக கொண்டு செல்லாமல் அரசு கேபிள் மறைத்து விடுவார்கள் என்பதைதான் பிரச்னையாக பார்க்கிறார்கள். இதை மத்திய அரசிடம் தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.
இதையடுத்துதான் மத்திய அரசு இந்த மாதிரியான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசு இதுமாதிரியான ஒரு அறிவிப்பை வெளியிடும்போது, தமிழக அரசு லாப நோக்கத்துக்காக இல்லாமல், சேவை நோக்கத்துக்காக மட்டுமே கேபிள் நிறுவனத்தை நடத்துவதாக வாதத்தை முன்வைத்தது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளை குறிப்பிட்டு மாநில அரசுகள் சேனல் ஒளிபரப்பவோ, விநியோகம் செய்யவோ தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை.
மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள சேனல்களையும், இனி கொண்டு வரப் போகும் சேனல்களையும் பிரசார் பாரதி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஒளிபரப்புக்குள் நுழைந்துள்ள மாநில அரசுகளை அதில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இதற்கான வேலைகளை முழுமையாக முடிப்பதற்கும் உத்தரவிட்டுள்ளது.
வெளியில் சமூக நோக்கத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காகதான் இந்த உத்தரவு என்று மத்திய அரசின் அதிகாரிகளே சொல்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் தொலைக்காட்சிகளை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு தனது பலத்தை எல்லாம் காட்ட ஆரம்பித்துள்ளது. என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்?.
ஜெயப்பிரியா
வீர சிம்ஹா ரெட்டி : மீண்டும் ஆக்ஷனில் பாலகிருஷ்ணா