ராஜன் குறை
உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. பாஜக கட்சிக்காரர் தொடுத்தது. அது என்னவென்றால் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வெற்றி பெறுவதற்காக மக்களுக்கு இலவசமாக சேவைகளை, பொருட்களை வழங்குவதாக கூறுவதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு மனு. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற சில நாட்களே உள்ள நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதியரசர் ரமணா ஒன்றிய அரசின் அரசியலமைப்பு சட்டத்துக்குச் சவால் விடும் பல செயல்கள் குறித்த வழக்குகளை விசாரிக்காமலேயே நல்ல பிள்ளையாக தன் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டவர்.
காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கம், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஆதிக்க ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு, குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் எனப் பல பிரச்சினைகளை அவர் பல ஆண்டுகளாக விசாரிக்காமலேயே கிடப்பில் போட்டு தேச சேவை ஆற்றியவர்.
இந்த இலவச வழக்கு வந்தவுடன், முதலில் இலவசங்களைப் பற்றி அவசியம் சிந்திக்க வேண்டும் என்றெல்லாம் கூறியவர், பின்னர் பல மாநிலக் கட்சிகள் வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டதுடன், பொதுவெளியில் கடுமையாகப் பேசத் துவங்க, மெல்ல பின்வாங்கி, இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று கூறிவிட்டார்.
அடுத்து தலைமை நீதிபதியாகியிருக்கும் யு.யு.லலித் குஜராத்தில் 2005ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷஹாபுதீன் போலீஸ் என்கெளண்டர் தொடர்பான வழக்கில் 2010இல் கைதான இன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்காக ஆஜரானவர். அவர் இந்த இலவச வழக்கை அடுத்த சில மாதங்களில் எப்படி கொண்டு செல்வார் என்பதைப் பொறுத்திருந்து காண வேண்டும். அவருடைய மொத்த பதவி காலமே சில மாதங்கள்தான்.
இதற்கிடையில் பிரதம மந்திரியும் இலவசங்களைக் கண்டித்துப் பேசியுள்ளார். நாட்டை கெடுக்கும் ரெவ்டி கலாச்சாரம் என்று கடுமையாகக் கண்டித்துள்ளார். ரெவ்டி, ரெவரி என்றால் இனிப்புப் பண்டம் என்று பொருளாம்.
இந்தியா முழுவதுமே பல்வேறு மாநிலங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதென்பதும், சேவைகளையும், பொருட்களையும் இலவசமாக வழங்குவது என்பது நடைமுறையாகத்தான் உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
சமீபத்தில் உத்தரப்பிரதேச தேர்தலில் அகிலேஷ் யாதவின் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்த பாரதீய ஜனதா கட்சி முதல்வர் யோகி ஆதித்ய நாத், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கல்லூரி பெண்களுக்கு ஸ்கூட்டி, தீபாவளி மற்றும் ஹோலி தினங்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் என்று பல அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் செய்துதான் வெற்றி பெற்றார்.
இப்படியிருக்கும்போது ஏன் திடீரென இலவசங்களை ரெவ்டி கலாச்சாரம் என பிரதமர் சாடுகிறார் என்பது முக்கிய கேள்வியாகிறது. அனைவரும் கூறும் காரணம் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி குஜராத் தேர்தலில் பாஜக ஓட்டு வங்கியை பிரிக்கும் சாத்தியம்தான்.
ஆம் ஆத்மி கட்சி பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை, ஏழை, மத்திய தர இல்லங்களுக்கு 200/300 யூனிட் இலவச மின்சாரம் போன்றவற்றை அறிவிக்கிறது.
இருபது ஆண்டுகளாக ஆட்சி செய்துவிட்ட நிலையில் குஜராத்தில் பாஜக ஆட்சியின்மீது மக்களுக்கு அதிருப்தி உருவாவது சகஜம்தான். சென்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு வலுவான போட்டியை உருவாக்கியது என்பதை மறந்துவிட முடியாது.
இந்த முறை ஆம் ஆத்மியும் களத்தில் இறங்கி மும்முனை போட்டி உருவானால் குஜராத்தில் ஆட்சி மாற்றம் நிகழலாம். அது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்னால் மோடியின் பிம்பத்துக்கு கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தும்.
அதனால் எப்படியாவது ஒரு சில அறிவிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டால் நல்லது என்று கருதுவது போல தெரிகிறது.
பணக்கார வர்க்கத்துக்கும், நகர்ப்புற உயர் மத்திய தர வர்க்கத்துக்கும் ஏழைகளைப் பற்றி பெரிய அக்கறையோ, அவர்கள் வாழ்க்கையை பற்றி புரிந்துகொள்வதில் ஈடுபாடோ கிடையாது.
வீட்டில் பணி செய்பவர்களுக்கு எவ்வளவு தூரம் குறைவாக சம்பளம் கொடுக்கலாம், ஆட்டோ ஓட்டுநர், காய்கறி வியாபாரிகளுடன் எப்படி கடும் பேரத்தில் ஈடுபடலாம் என்றெல்லாம் சதா கவலையில் இருக்கும் அவர்களுக்கு, கிராமப்புற வறுமை பற்றியெல்லாம் நினைத்துப் பார்க்கவே பிடிக்காது.
சிக்னலில், ரயில் பேருந்து நிலையங்களில், மின்சார ரயிலில் பிச்சையெடுப்பவர்களை கண்டால் இவர்களெல்லாம் ஏன் உழைத்துப் பிழைக்கக் கூடாது என்று தங்களுக்குள் கடிந்து கொள்வார்கள்.
அதிலும் வருமான வரியை எல்லா விலக்குகளையும் தாண்டி கட்டவேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு, நாடே அவர்கள் கொடுக்கும் வரியில்தான் நடக்கிறது என்ற எண்ணம் வேறு சேர்ந்துகொள்ளும்.
அதனால் இலவசமாக மக்களுக்கு பொருட்களையும், சேவைகளையும் கொடுப்பது அவர்களை சோம்பேறியாக்கும், கட்டுமான பணிகளுக்காக வரிப்பணத்தை செலவிடாமல் மக்களுக்கு இலவசங்களைக் கொடுத்தால் பொருளாதாரம் வளராமல் தேசத்தின் எதிர்காலமே பாழாகிவிடும் என்று பலவிதமான பீதிகளை உருவாக்குவார்கள்.
பின்னர் “கொள்கையை” சொல்லி ஓட்டு கேட்காமல், இலவசங்களை அறிவித்து ஆட்சியைப் பிடிப்பது தவறான மக்களாட்சி நடைமுறை என்று வேறு ஒரு ஞான ஒளி அவர்களுக்குப் பிறக்கும். அவர்களுக்கு மனசாட்சி இல்லை, மனிதாபிமானம் இல்லை என்பது மட்டுமல்ல, அரசியலறிவும் சுத்தமாக இருப்பதில்லை என்பதுதான் பிரச்சினை.
மனசாட்சி என்ன சொல்ல வேண்டும்?
இயற்கையின் வளங்கள் எல்லாமே எல்லா மக்களுக்கும் உரியன. நிலம், நீர், காற்று, ஆகாயம், சூரிய ஒளி எல்லாமே அனைவருக்கும் உரியவை. இவற்றிலிருந்து பெறப்படும் பொருட்கள் விளைபொருட்கள், ஆற்றல்கள், கனிமங்கள் எல்லாமே அனைவருக்கும் பொதுவானவை. அப்படியானால் ஏன் சமூகத்தில் கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது?
ஏனென்றால் வெகுகாலமாக உலகில் ஆண்டான், அடிமை சமூகங்களே உருவாயின. அரசன்/பிரபுக்கள்/ நில உடைமையாளர்கள் ஆகியோரும், அவர்களுக்கு ஆதரவான பூசக வம்சத்தினரும் பெருமளவு சொத்துகளை நிர்வகித்தனர். குடியானவர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், நிலமற்ற விவசாயிகள், கூலிகள் எனப் பெரும் திரளான மக்கள் அவர்களுக்கு அடுத்தடுத்த படி நிலைகளிலேயே வாழ்வை நடத்தினர்.
இந்தியாவில் இது வர்ண பகுப்பாகவும், அதன் உட்பிரிவுகளான ஜாதீய சமூகமாகவும் உருவானது. சூத்திரர்களும், பஞ்சமர்களும் பலவிதமான உழைப்பு சுரண்டலுக்கு ஆட்பட்டவர்களாக, சமூக விலக்கங்களுக்கு ஆட்பட்டவர்களாக விளங்கினர்.
இத்தகைய சமமற்ற சமூகங்களில்தான் “எல்லோரும் ஒரு நிறை, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற புதிய மக்களாட்சி லட்சியம் அறிமுகப்படுத்தப்பட்டது. அம்பானிக்கும் ஓர் ஓட்டு, ஆட்டோ ஓட்டும் ஆறுமுகத்துக்கும் ஓர் ஓட்டு என்பதும், அனைவரும் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் ஆட்சி செய்வார்கள் என்பதும் சரிதான்.
ஆனால் ஆறுமுகத்தால் அவர் ஓட்டைத்தான் போடமுடியும். அம்பானியால் ஆறு கோடி ஓட்டுக்களைப் பணம் செலவழித்து பிரசாரம் செய்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு விழச்செய்ய முடியும். இதனால் சமத்துவம் என்பது சாத்தியமற்ற கனவாகவே தொடர்கிறது.
தாமஸ் பிக்கெட்டி என்றொரு ஃபிரெஞ்சு பொருளாதார ஆய்வாளர் இருக்கிறார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு “முதலீடும், கருத்தியலும்” (Capital and Ideology) என்ற முக்கியமான நூலை எழுதியுள்ளார். அதில் அவர் எப்படி உலகம் முழுவதும் வருவாயில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டி மிக விரிவான ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை பிக்கெட்டி தரும் ஒரு புள்ளிவிவரத்தை மட்டும் குறிப்பிடுகிறேன். வருவாய் ஈட்டுபவர்களில் அதிக வருவாய் உள்ள 10 சதவிகிதத்தினர் 1980ஆம் ஆண்டு மொத்த வருவாயில் 34% ஈட்டினர்; ஆனால் 2018ஆம் ஆண்டில் அவர்கள் மொத்த வருவாயில் 55% ஈட்டுகின்றனர். அதாவது மொத்தத்தில் பாதி வருவாய் 10 சதவிகித மக்களுக்கே செல்கிறது.
இதன் பொருள் என்ன? ஏற்றத்தாழ்வு கடுமையாக அதிகரித்து வருகிறது என்பதுதான். மக்களாட்சி நடைமுறையால், அதிகாரப் பகிர்வால், வருவாயை, பொருளாதார வளத்தையும் போதுமான அளவு பகிர்ந்தளிக்க முடியவில்லை. அதிகாரக் குவிப்பு என்பது சொத்துக்குவிப்பாக வேறு வடிவங்களில் தொடர்கிறது.
பெருந்தனவந்தர்களால் ஊடகங்களைக் கட்டுப்படுத்த முடிகிறது. அரசியல் கட்சிகளை, தலைவர்களை ஸ்பான்சார் செய்ய முடிகிறது. பதிலுக்கு அவர்கள் அந்த பெருந்தனவந்தர்களுக்கு எல்லா சலுகைகளும் செய்கிறார்கள். கெளதம் அதானியை நரேந்திர மோடி அரசு எல்லா சலுகைகளும் தந்து வளர்த்து விடுகிறது; அவர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் ஆதரித்து இயங்குகிறார். அரசை விமர்சிக்கும் ஒரே சேனலான என். டி. டி. வி சேனலையும் விலைக்கு வாங்கி, கைப்பற்றப் போகிறார்.
இப்படி குவியும் அதிகாரம்தான் மக்களுக்கு நலன்களை பங்களிப்பதை இலவசம் என்று கண்டிக்கிறது. யாருடைய சொத்துக்கு, யார் உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதே கேள்வி.
மனிதாபிமானம் என்ன சொல்ல வேண்டும்?
அதிகாரத் திமிர் பிடித்தவர்கள் எப்போதும் ஒரு பழமொழியைச் சொல்கிறார்கள். அது என்னவென்றால்: “பசித்தவர்களுக்கு மீனைக் கொடுத்தால் ஒருவேளைதான் சாப்பிடுவார்கள்; மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் தொடர்ந்து மீனைப் பிடித்துச் சாப்பிடுவார்கள்” என்பதுதான்.
அதன் பொருள் என்னவென்றால் மக்களுக்கு எதையும் இலவசமாகக் கொடுக்கக் கூடாது. அவர்களுக்கு கல்வியையும், தொழில் செய்யும் ஆற்றலையும் கொடுத்து, உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தால் நாட்டில் தொழில் வளம் பெருகி, உற்பத்தி பெருகி எல்லோரும் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களாகவே வாங்கிக் கொள்வார்கள் என்பதுதான் அது. இது நெஞ்சில் ஈரமற்று சொல்லும் பச்சைப் பொய்.
மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் குளங்களில் மீன்களே இல்லையென்றால்? ஓர் ஊரில் தண்ணீர் வற்றிவிட்டது; இன்னோர் ஊரில் ஆலைக் கழிவு நீர் கலந்ததால் மீன்கள் இறந்துவிட்டன; இன்னோர் ஊரில் மீன்களை ஆதிக்க ஜாதியினரே மொத்தமாகப் பிடித்துக்கொண்டு போய்விட்டனர். தூண்டிலை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அப்போது மீனைக் கொடு என்றுதான் கேட்க வேண்டும்.
பிக்கெட்டியின் நூலை மட்டுமல்ல, பொதுவாக பொருளாதாரம் குறித்து தொடர்ந்து படிப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். முதலீட்டியம் பெருமளவு தொழில்களை இயந்திரமயமாக்கிவிட்டது. விவசாயத்திலும் கூட பலவகை இயந்திரங்களின் பயன்பாடு பெருகி வருகிறது.
அதனால் விளைநிலங்களையெல்லாம் கார்ப்பரேட்களே வளைத்துப் போட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் இயந்திரங்களைக் கொண்டு பயிர் செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் விவசாயிகளை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் யோசிக்கிறார்கள்.
ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கும் பெரிய டிராலர்களுடன், படகில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் போட்டியிட முடியாமல் திணறுகிறார்கள். ஜப்பானில் பால் பண்ணைகளைப் பார்த்தால் மாடுகளெல்லாம் உயிருள்ள ஜீவன்களா, அல்லது இயந்திரங்களா என்று குழப்பம் ஏற்படும். அப்படி ஆயிரக்கணக்கான மாடுகளில் இயந்திரங்கள் பால் கறக்கும்.
அதே சமயம், பெரியதொரு மக்கள் பரப்பும் முதலீட்டியத்துக்குத் தேவைப்படுகிறது. ஏனெனில் இயந்திரங்கள் உற்பத்தி செய்து குவிக்கும் பொருட்களை யார் வாங்குவார்கள்? யார் நுகர்வார்கள்? அதனால் எல்லா மக்களும் உயிரைத் தக்கவைத்துக்கொண்டு வாழ வழி செய்து, அவர்களுக்குப் பல வகையான கடன்களைக் கொடுத்து அவர்களை பொருட்களை வாங்க செய்ய வேண்டும்.
அவர்கள் என்ன வேலை செய்து வருமானம் பெறுவார்கள்? எப்படி இந்தப் பொருட்களை வாங்குவார்கள்? தொடர்ந்து தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யலாம்; அப்போது மக்களுக்கு ஆசை வரும்; ஏக்கம் வரும். ஆனால் வாங்கும் சக்தி எப்படி வரும்?
இந்தக் கேள்விக்கு எந்த பதிலும் இல்லாமல் வெட்கமற்று தொலைக்காட்சி நிலையங்களில் வெள்ளையும், சொள்ளையுமாய் உட்கார்ந்து கொண்டு பொய்களை பேசிக்கொண்டு திரிகிறார்கள், மனிதாபிமானம் அற்றவர்கள்.
அரசியலறிவு என்ன கூற வேண்டும்?
இந்தியாவின் நூற்று நாற்பது கோடி பேரும், ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொண்டு, அம்பானியும், அதானியும் உலகின் ஆகப் பெரிய பணக்காரர்களாவதை பார்த்து மகிழ்ந்துகொண்டு, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துக்கொண்டு, பல்வேறு பணிகளிலும், தொழில்களிலும் ஈடுபட்டுக்கொண்டு, அத்தியாவசிய பொருட்களை கடனிலும், தவணையிலும் வாங்கிக்கொண்டு, கார்ப்பரேட்களின் லாபத்துக்கான நுகர்வாளர்களாக எந்த கலவரமும் செய்யாமல், வன்முறையை நாடாமல், குற்றச்செயல்களில் ஈடுபடாமல், சட்ட விதிகளை மீறாமல் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் அரசியல் கட்சிகள்தான்.
அரசியல் கட்சிகள் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து, அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு கிடைக்கச் செய்து, மக்களுக்கு தங்களுக்கும் ஏதோ ஒருவிதத்தில் நலன்கள் பகிர்ந்தளித்துத் தரப்படுகின்றன என்று நம்பச் செய்வதால்தான் இவ்வளவு பிரமாண்டமான சமூகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது.
அரசியல் கட்சிகள் தேர்தலில் ஈடுபட வேண்டுமென்றால் மக்களுக்கு நலன்களை பகிர்ந்தளிப்பதாக வாக்குறுதி கொடுக்கத்தான் வேண்டும். அதை நிறைவேற்றத்தான் வேண்டும். இல்லாவிட்டால் போலீஸையும், ராணுவத்தையும் வைத்துக்கொண்டு மட்டும் இவ்வளவு பெரிய மக்கள் திரளை கட்டுப்படுத்திவிட முடியாது என்பதை மேல்தட்டு புருவம் தூக்கிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இலவசங்களை விமர்சிப்பவர்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டுவது ஜெயலலிதா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றை கொடுத்ததுதான். அதைத்தான் மசாலா சினிமாவில்கூட நெருப்பில் போட்டு எரித்து தார்மீக ஆவேசம் காட்டுகிறார்கள்.
அந்த மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஒரு செட்டை அரசு கொள்முதல் செய்தது ஐயாயிரம் ரூபாய்க்கும் சற்றே குறைவான விலையில்தான். பொது விநியோக அட்டையில் அரிசி வாங்கும் குடும்பங்களுக்கு மட்டும்தான் கொடுத்தார்கள். நாற்பது லட்சம் குடும்பங்களுக்கு கொடுத்தார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கான செலவு இரண்டாயிரம் கோடி ரூபாய்.
அவ்வாறு கொடுத்த 2011ஆம் ஆண்டு தமிழக அரசின் வருவாயும், செலவும் எண்பத்தாறாயிரம் கோடி ரூபாய். அதாவது தன் வருவாயில் இரண்டு சதவிகிதம்தான் இந்த நலத்திட்டத்திற்கு அரசு செலவழித்தது. அந்த செலவினால் எல்லா கட்டுமானப்பணிகளும் நின்றுபோய், பொருளாதாரம் தேங்கிப்போய் தமிழ் நாடு கடனில் மூழ்கிவிடவில்லை.
இன்றைய ஒன்றிய அரசு சர்வசகஜமாக பல லட்சம் கோடி ரூபாய் வரிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்கிறது, வாராக்கடன்கள் என அவை வங்கியில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்கிறது. பெரு நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய்களை இப்படியெல்லாம் வாரி வழங்கினாலும் முடங்காத பொருளாதாரம், ஏழைக் குடும்பங்களுக்குச் சில வீட்டு உபயோகப் பொருட்களை இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து கொடுத்தால் கெட்டுப் போய்விடுமா என்ன? யாருடைய சொத்தை யாருக்கு கொடுப்பது இலவசம் என்பதை யார் தீர்மானிப்பது?
வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதுபோல ஆளும் வர்க்கமே, பெரு முதலீட்டியமே எது இலவசம் என்பதை தீர்மானிக்கிறது. மக்கள் நலனில் ஈடுபாடு கொண்ட அரசியல் கட்சிகளை முடக்கப் பார்க்கிறது; அவர்கள் மீது தேர்தலில் வெல்ல ஆசைப்படுவதாகப் பழி சுமத்துகிறது. இட ஒதுக்கீடு முதல், சமூக நலத்திட்டங்கள் வரை மக்களுக்கு உரிமைகளை, நலன்களை, அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் எந்த சமூக நீதி திட்டத்தையும் முடக்கப் பார்க்கிறது.
பாரதீய ஜனதா கட்சியின் பெருந்தேசியத்துக்குப் பின்னால் இருப்பது பெருமுதலாளிகளின் நலன்; மாநிலக் கட்சிகளின் தன்னுணர்வு அரசியலின் பின்னால் இருப்பது வெகுமக்கள் நலன். பெருமுதலாளிகளுக்கு அள்ளிக்கொடுப்பது ஊக்கத்தொகை; வெகுமக்களுக்கு கொடுப்பது இலவசம் என்பது பாஜக அரசியல். ஏனெனில் அதிகாரம் அவர்கள் வசம்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com
தூத்துக்குடி படுகொலையும் எடப்பாடி பழனிசாமியும்!
ஆம். 86 ஆயிரம் கோடியில் இரண்டாயிரம் கோடி. அதையும் கடலில் கொட்டவில்லை. அந்த பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்குத்தான் கொடுக்கிறார்கள்.