அதிமுகவுக்குள் கடந்த எட்டு மாதமாக எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர் செல்வத்துக்கும் இடையே நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தின் உச்சகட்டமாக… பொதுக்குழு வழக்கில் பிப்ரவரி 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி காலை 10:30 மணிக்கு பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளிக்கிறார்.
வழக்கு கடந்து வந்த பாதை
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி விவாதிக்க வேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் பகிரங்கமாக கோரிக்கை வைத்தனர். 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக எடப்பாடி ஆதரவாளர் சி.வி. சண்முகத்தால் அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமிப்பதாகவும் தீர்மானித்தனர். இது சட்ட விரோத பொதுக்குழு என்று வைத்திலிங்கம் அறிவித்துவிட்டு ஒபிஎஸ் உள்ளிட்டோர் வெளியேறினார்கள்.
இதையடுத்து ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தனியாக பொதுக்குழுவை கூட்டினார். அதை நடத்தக் கூடாது என்று பன்னீர்செல்வம் பலத்த சட்டப் போராட்டம் நடத்தி, பின் நீதிமன்ற உத்தரவுடன் பொதுக்குழு நடந்தது. பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார்கள். ஜெ வகித்த நிரந்தர பொதுச்செயலாளர் பதவியையும் நீக்கினார்கள்.
எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தார்கள். ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவருடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் அப்பீல் செய்தார். அதில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் 2022 செப்டம்பர் 2 ஆம் தேதி தீர்ப்பளித்தனர்.
சட்ட ரீதியான அடுத்த கட்டமாக ஓ பி எஸ் சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்ட ஒத்திவைப்புகளுக்கு பிறகு கடந்த ஜனவரி முதல் வாரத்தில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. அதன்பின் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களையும் தாக்கல் செய்தனர். ஜனவரி 11ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் உச்ச நீதிமன்றத்தில்.
இந்த பின்னணியில் தான் பிப்ரவரி 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு வழக்கில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அளிக்கப்பட இருக்கிறது.
எடப்பாடி தரப்பு என்ன சொல்கிறார்கள்?
தீர்ப்பு எப்படி இருக்கும் என்று அதிமுகவின் பல்வேறு தரப்புகளிலும் எதிர்பார்ப்புகள் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் இதில் நேரடியாக சம்பந்தப்பட்ட பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரிடம் நாம் பேசினோம்.
நம்மிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர், “பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதமாக தான் வரும். ஏனென்றால் அண்மையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தொடுத்த வழக்கில்… உச்ச நீதிமன்றம் பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆணையிட்டு அவைத் தலைவரான தமிழ் மகன் உசேன் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கலாம் என்று தெரிவித்தது.
அந்த ஆணையின்படி பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இப்போது தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார்.
பன்னீர்செல்வம் எந்த பொதுக் குழுவை எதிர்த்து வழக்கு நடத்தினாரோ அந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளித்து அதன் பேரில்தான் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவிலேயே பொதுக்குழு வழக்குக்கான தீர்ப்பு தெளிவாகத் தெரிந்து விட்டது.
இதைவிட இன்னொரு சட்ட சாதகமாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் சிவசேனா வழக்கில் அளித்த தீர்ப்பில் பெரும்பான்மை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றிருக்கும் ஷிண்டே தரப்புக்குதான் கட்சியையும் சின்னத்தையும் அளித்துள்ளது.
அந்த வகையில் பார்த்தால் சட்டமன்ற நாடாளுமன்ற பெரும்பான்மை மட்டுமல்ல கட்சி நிர்வாகத்திலும் பெரும்பான்மை எடப்பாடி வசம் தான் உள்ளது.
உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு அமைப்புகளும் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தான் சாதகமாக முடிவெடுத்துள்ளனர். எனவே பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு தான் தீர்ப்பளிக்கும் என்பது எங்கள் ஆணித்தரமான நம்பிக்கை” என்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்.
மேலும், ”உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு உங்களுக்கு எதிராகத்தான் வரும் என்று பன்னீர்செல்வத்திடம் அவரது வழக்கறிஞர்களே சட்ட ரீதியான நிலவரத்தைத் தெரிவித்து விட்டார்கள். அதனால்தான் சமீபத்திய சில நாட்களாக பாஜகவை கடுமையாக எதிர்த்து தனது ஆதரவாளர்களை பேச வைத்திருக்கிறார் பன்னீர்செல்வம் என்றும் சொல்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.
பன்னீர் தரப்பினர் சொல்வது என்ன?
பன்னீர்செல்வம் தரப்பினரிடமும் பேசினோம். “ஈரோடு கிழக்கு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது இதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களுக்கான நிரந்தரமான சாதகமாக கொண்டாட முடியாமல் ஒரு செக் வைத்துள்ளனர்.
அதாவது சின்னம் வழங்குவது தொடர்பான பிரச்சனைக்கு தான் இந்த முடிவே தவிர பொதுக்குழு வழக்கில் இந்த முடிவு எதிரொலிக்க அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
மேலும் பொதுவாகவே கீழமை நீதிமன்றங்கள் முதன் முதலில் கொடுத்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டின் போது அதிக மதிப்பு கொடுத்து பரிசீலனை செய்யும். அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் முறையாக கூட்டப்படாத பொதுக்குழு பற்றி கேள்வி எழுப்பி அந்த பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார்.
உச்சநீதிமன்றமும் இதே கேள்வியை வழக்கு விசாரணையின் போது எழுப்பியது. எனவே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.
சுமார் 8 மாத காலமாக நடந்த சட்டப் போராட்டத்தின் முடிவு என்னவாக போகிறது என்று பிப்ரவரி 23ஆம் தேதி காலை 10:30க்கு தெரிய வரும்.
–வேந்தன்
இப்போது இபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் அதிமுக வலுவான நிலையில் களத்தில் இருக்குமா? கொங்கு மண்டலத்தில் அதிமுக கோட்டையை முத்துசாமி செந்தில் பாலாஜி யை வைத்து திமுக சரித்துள்ளது. சென்னை திமுக கோட்டையாகவே தற்போது வரை உள்ளது.தென்மாவட்டங்களில் டிவிடி யும் ஓபிஎஸ் சசிகலா அவர்கள் சமுதாய ஓட்டை தக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்று தான் சொல்லவேண்டும்.உதயகுமார் செல்லூர் ராஜூ இசக்கி சுப்பையா பலம் அதிமுகவில் இருந்தாலும் தேவர் சமுதாய ஓட்டு அதிமுகவுக்கு முழுமையாக கிடைக்குமா? இப்போது இபிஎஸ் தமிழகம் முழுவதும் நன்கு அறியப்பட்டவராகி இருந்தாலும் பழைய பலத்துடன் அதிமுக களத்தில் இறங்கி செல்வாக்கை தக்கவைப்பாரா? வருங்காலத்தில் ஓபிஎஸ் மாதிரி அதிமுகவில் தலைதூக்கும் ஆள் உண்டா ? இவையெல்லாம் கடந்துஇபிஎஸ் வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.இவைகளை யெல்லாம் மனதில் வைத்து உங்கள் எழுத்து நடையில் ஒரு கட்டுரை எழுதி பிரசுரியுங்கள் சார்.