அதிமுகவில் இரட்டைத் தலைமைகளாக பன்னீரும், எடப்பாடியும் இருக்கும்போதே இருவரும் பாஜகவில் டெல்லியில் இருக்கும் தங்களது தொடர்புகள் மூலம், பாஜக தலைமையின் ஆதரவை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டுதான் இருந்தார்கள்.
சில மாதங்களாக இரட்டைத் தலைமை உடைந்து ஒற்றைத் தலைமைதான் என்ற போர்க்குரல் எடப்பாடி தரப்பால் எழுப்பப்பட்டு அடுத்தடுத்து நடந்த காட்சிகளால் பன்னீர் இன்று அதிமுகவை விட்டே நீக்கப்பட்டிருக்கிறார்.
ஜூன் 23 பொதுக்குழு, ஜூலை 11 பொதுக்குழு என எடப்பாடிக்கும் பன்னீருக்குமான மோதல் பகிரங்கமாகி இன்று இருவரும் இரு துருவங்களாகியிருக்கிறார்கள்.
இந்த நிலையிலும் இருவரும் பாஜக தலைமையின் ஆதரவைப் பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்கிறார்கள்.
அந்த வகையில் நேற்று முன் தினம் (செப்டம்பர் 20) பாஜகவின் இரும்புத் தலைவர் எனப்படும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பலத்த முயற்சிக்குப் பின் எடப்பாடி சந்தித்தார்.
இது எடப்பாடி தரப்பினரால் முதல் கட்ட வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பொதுக்குழுவில் இருந்து வெளியேறினார் பன்னீர் செல்வம். அடுத்த நாளே டெல்லி புறப்பட்டுச் சென்றார்.ஜூன் 24 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு மனு தாக்கல் நிகழ்வில் கலந்துகொண்டார் பன்னீர்.
அப்போதே பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க முயற்சித்தார். ஆனால் அவரால் முடியவில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிசியாக இருக்கிறார்கள் என்று அதற்கு பன்னீர் தரப்பினர் காரணம் சொல்லி சமாளித்தனர்.
இதேபோல ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில், பதவிக் காலம் முடியும் ராம் நாத் கோவிந்துக்கு நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் டெல்லி சென்று எடப்பாடி பங்கேற்றார்.
போன மாதம் பன்னீர், இந்த மாதம் எடப்பாடி என்று இரு தரப்பினரும் போட்டி போட்டு பாஜக தலைமையின் ஆதரவை கோரினார்கள்.
ஆனால் இருவருமே மோடியையோ, அமித் ஷாவையோ தனியாக சந்திக்க முடியவில்லை. கூட்டத்தோடு கும்பிடு போட்டுவிட்டுத்தான் திரும்பினார்கள்.
இந்தநிலையில் ஜூலை 28 ஆம் தேதி மோடியே சென்னை வந்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் அன்று இரவு தங்கினார்.
அப்போதும் அவரை சந்திக்க எடப்பாடியும், பன்னீரும் போட்டி போட்டனர். ஆனால் பாஜக நிர்வாகிகளைத் தவிர யாரையும் சந்திக்கவில்லை மோடி.
அதற்கு பதிலாக எடப்பாடிக்கும் பன்னீருக்கும் வேறொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதாவது பிரதமர் மோடி சென்னை வரும்போது அவரை வரவேற்க அனுமதிக்கப்பட்டார் எடப்பாடி. மோடி சென்னையிலிருந்து விடைபெறும்போது அவரை வழியனுப்ப அனுமதிக்கப்பட்டார் பன்னீர்.
இப்படியாக பன்னீருக்கும், எடப்பாடிக்கும் இடையே சொக்கட்டான் விளையாட்டை சோக்காக நடத்திக் கொண்டிருக்கிறது டெல்லி.
இந்த நிலையில்தான் தனக்கு நீதிமன்றத் தீர்ப்புகள் சாதகமாக வந்த நிலையில் மீண்டும் டெல்லி சென்று மோடியையும், எடப்பாடியையும் சந்தித்து அவர்களின் ஆதரவையும், தேர்தல் ஆணையத்தின் ஆசியையும் பெறுவது என்ற முடிவோடு அப்பாயின்ட்மென்ட் கேட்டு பகீரத பிரயத்தனம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்ற, நாட்டின் முக்கிய மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி அமைச்சர் என்ற நிர்வாக அனுபவம் மட்டுமே பெற்றிருந்த நிலையில் அவருக்கு டெல்லி தொடர்புகள், டெல்லியின் நெளிவு சுளிவுகள் உள்ளிட்ட பல நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து வழிகாட்டியவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம்.
எடப்பாடி பழனிசாமி திடீரென தமிழக முதல்வரானபோது கேரள ஆளுநராக இருந்தார் சதாசிவம், மத்திய அரசோடு நல்லிணக்கமாக இருந்தவர் என்பதால், எடப்பாடிக்கும் டெல்லிக்கும் நல்ல ஒரு வேவ் லெங்த்தை உருவாக்கியதில் சதாசிவத்துக்கு முக்கிய பங்கு உண்டு என்று அப்போதே பரபரப்பாக ஊடகங்களால் பேசப்பட்டது.
சதாசிவமும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் . சொல்லப் போனால் எடப்பாடிக்கு ஒரு வகையில் உறவினரும் கூட.
சதாசிவம் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்சால்தான் எடப்பாடி பல வருடங்களாக டெல்லியை தாக்குப் பிடித்தார் என்பது அதிமுக சீனியர்களே ஒப்புக் கொள்ளும் உண்மை.
இந்த பின்னணியில் சதாசிவம் மூலமாக டெல்லியில் மோடி, அமித் ஷா சந்திப்புக்கு முயற்சித்தார் எடப்பாடி. ஆனால் அவரால் முடியவில்லை.
ஏனென்றால் சமீப நாட்களாக எடப்பாடி பாஜக தலைமைக்கு எதிரான திசையில் சென்றுகொண்டிருப்பதாகவும், பாஜக கூட்டணி இல்லாமலேயே புதிய கூட்டணியை அமைக்க எடப்பாடி முயற்சிப்பதும் டெல்லிக்கு தெரிந்திருக்கிறது.
மேலும் அதிமுகவுக்குள் நடக்கும் உட்கட்சிப் பிரச்சினையில் இன்னாருக்குதான் தன் ஆதரவு என்று பாஜக வெளிப்படையாக தெரிவிக்க விரும்பவில்லை.
அதனால் எடப்பாடியை சந்திக்க மோடி, அமித் ஷா இருவரும் மறுத்தனர்.
இதையடுத்து தனது கொங்கு குதிரைகளான வேலுமணி, தங்கமணி ஆகியோரை ஏவி விட்டார் எடப்பாடி. ஆட்சியில் இருந்தபோதே வேலுமணியும், தங்கமணியும் மத்திய அமைச்சரான பியூஸ் கோயலுக்கு மிகவும் நெருக்கம்.
இடையில் கொஞ்ச நாட்களாக தமிழக விவகாரத்தை பியூஸ் கோயலும் கவனித்துக் கொண்டிருந்தார்.
அந்த வகையில் வேலுமணியும் தங்கமணியும் பியூஸ் கோயலை சந்தித்து, ‘எப்படியாவது எடப்பாடியை மோடி ஜி கிட்டயும் அமித் ஜி கிட்டயும் சந்திக்க வச்சிடுங்க’ என்று கேட்டுக் கொண்டனர்.
கோயலும் முயற்சித்து தற்போதைய தமிழ்நாட்டு சூழலில் அவர்கள் உங்களில் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில்தான் அடுத்து தீவிரமாக ஆலோசனை செய்தார் எடப்பாடி பழனிசாமி. அரசியல் நெட்வொர்க் கதவுகள் அடைபட்ட நிலையில் பிசினஸ் நெட்வொர்க் கதவுகளைத் திறக்க முடிவு செய்தனர்.
கொங்கு பிசினஸ் நெட்வொர்க் என்பது அகில இந்திய அளவில் விரிவானது. கொங்கு பிசினஸ் புள்ளிகள் பலர் வட இந்திய தொழிலதிபர்களுக்கும் ஃபைனான்ஸ் செய்கிறார்கள், அங்கே தொழிலும் செய்கிறார்கள்.
இந்த வகையில் கொங்கு பிசினஸ் நெட்வொர்க் மூலமாகத்தான் ஹர்திப் ஜெயின் என்பவரை பிடித்திருக்கிறார் எடப்பாடி.
யார் இந்த ஹர்திப் ஜெயின்?
இந்த ஹர்திப் ஜெயின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நெருங்கிய நண்பர். நெருங்கிய நண்பர் என்றால் எப்போது வேண்டுமானாலும் அமித் ஷாவுடன் அலைபேசியில் பேசும் அளவுக்கு நெருக்கமானவர் ஹர்திப் ஜெயின்.
பிசினஸ் வட்டார நண்பர்கள் மூலம் ஹர்திப் ஜெயின் பற்றி அறிந்து அவர் மூலம் முயற்சி செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி பற்றி விசாரித்துக் கொண்ட ஹர்திப் ஜெயின் அவரது சந்திப்பு தொடர்பாக அமித் ஷாவிடமும் பேசியிருக்கிறார்.
ஆனபோதும் ‘நீங்க கிளம்பி டெல்லி வந்துவிடுங்கள், பாத்துக்கலாம்’ என்று ஹர்திப் ஜெயினிடம் இருந்து தகவல் கிடைத்த பிறகுதான் செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு டெல்லி புறப்பட்டிருக்கிறார் எடப்பாடி.
விமானம் ஏறும்போதே பிரதமர் மோடி சந்திப்புக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் எடப்பாடிக்கு கிடைத்துவிட்டது. ஆனபோதும் ஹர்திப் ஜெயின் மீதான நம்பிக்கையோடு அமித் ஷாவை சந்திக்கலாம் என்று நம்பிச் சென்றார் எடப்பாடி.
ஏற்கனவே பல முறை எடப்பாடி பழனிசாமி அப்பாயின்ட்மென்ட் கேட்டு அமித் ஷாவின் அலுவலக கதவுகளைத் தட்டி பலன் இல்லாத நிலையில், அமித் ஷாவின் நெருங்கிய நண்பர் ஹர்திப் ஜெயின் மூலமாகத்தான் இந்த அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.
அதுவும் அதிகபட்சம் இருபது நிமிடம்தான் என்று சொல்லித்தான் இந்த சந்திப்புக்கு ஹர்திப் ஜெயின் மூலமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் அமித் ஷா.
எனவே இதை எடப்பாடியின் வெற்றியாக பார்ப்பதா, ஹர்திப் ஜெயினின் வெற்றியாக பார்ப்பதா என்ற குழப்பம் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் மத்தியிலேயே இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.
வேந்தன்
நாட்டின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் தமிழகத்தில்!
சரவெடி சதம் அடித்த கவுர்: தொடரை கைப்பற்றிய இந்திய அணி!