Who bribed whom and how much

யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம்? ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்?

அரசியல்

அதிமுக ஆட்சியின் ஊழல்களை எல்லாம் வெளிக் கொண்டு வருவோம், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிப்போம் என்றெல்லாம் கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். Who bribed whom and how much

தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலே நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து அடங்கி வருகின்றன.

இந்த நிலையில்தான்… அதிமுக ஆட்சியில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டுமான நிறுவன அதிபர் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரம் பரபரப்பாகியிருக்கிறது.

அதுமட்டுமல்ல… இது அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நோக்கிச் செல்வதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்குள் பேசப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்னையில் கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினார்கள். லேண்ட் மார்க் ஹவுசிங் நிறுவனம், கே.எல்.பி. நிறுவனம் உள்ளிட்டவை தொடர்புள்ள இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இதன் பின்னணி என்ன?

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்த புகழ் பெற்ற பின்னி மில்லுக்கு சொந்தமான சுமார் 14 ஏக்கர் நிலத்தை சென்னையைச் சேர்ந்த லேண்டாமார்க் ஹவுஸிங் ப்ராஜக்ட் நிறுவனம் மற்றும் பெரம்பூர் கே.எல்.பி. ப்ராஜக்ட் நிறுவனமும் சேர்ந்து சுமார் 490 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்து 370 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள்.

இரு நிறுவனங்களால் வாங்கப்பட்ட இந்த இடத்தில் பெரிய குடியிருப்பு, வணிக வளாகம் கட்ட திட்டமிட்டனர். சாதாரணமாக அனைத்து தகுதிகளும் உள்ள இடத்துக்கு சி.எம்.டி.ஏ. அப்ரூவல் வாங்குவது என்றாலே பற்பல ஃபார்மாலிட்டீஸ்கள் இருக்கின்றன. ஆனால் இந்த பகுதிக்கு செல்லும் சாலை குறுகியதாக இருந்ததாலும், அருகே பூங்கா இருந்ததாலும் இந்த இடத்துக்கு ஒப்புதல் வழங்க சி.எம்.டி.ஏ. முதலில் மறுத்தது. ஆக்கிரமிப்பு முதல் அப்ரூவல் வரை அனைத்தையும் சமாளிக்க மக்கள் பிரதிநிதிகள் முதல் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் வரை சுமார் 50 கோடி ரூபாய் வரை லஞ்சமாகவே கொடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே வேறு வேறு புகார்களின் அடிப்படையில் லேண்ட் மார்க் நிறுவனத்தில் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போதுதான் பெரம்பூர் ப்ராஜக்ட் தொடர்பாக நிறுவன இயக்குனர் உதயகுமார் யார் யாருக்கு எவ்வளவு ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்பதற்கான பட்டியல் வருமான வரித்துறையிடம் சிக்கியது. அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில்தான் ப்ராஜக்ட்டில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ராஜீவ் நாயுடு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ராஜீவ் நாயுடு தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது. ஆனால், அதிமுக ஆட்சியில் அதிமுக புள்ளிகளுக்கு எதிரான விசாரணை எப்படி இருக்கும்?  அப்படியே படுத்துக் கொண்டது.

திமுக ஆட்சிக்கு வந்தும் சுமார் மூன்று வருடங்கள் நெருங்கும் நிலையில் இப்போதுதான் லேண்ட்மார்க் ஹவுசிங் ப்ராஜக்ட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.உதயகுமார், பெரம்பூரில் செயல்படும் கேஎல்பி ப்ராஜக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் சுனில் கட்பலியா, மணீஷ் சர்மா ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

லஞ்சம் கொடுத்த லேண்ட் மார்க் ஹவுசிங் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனர் உதயகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட கே.எல்.பி. நிறுவன இயக்குனர் சுனில் கேட்பாலியா, மணீஷ் பார்மர் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்த கூடுதல் ஆவணங்களைத் திரட்டும் நோக்கில்தான் பிப்ரவரி 1 ஆம் தேதி சோதனைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் இதுகுறித்து பேசியபோது,

“2017-ல் பின்னி மில்லின் 14.16 ஏக்கர் நிலத்தை ரூ.490 கோடியில் வாங்க ஒப்பந்தம் செய்து ரூ.370 கோடிக்கு வாங்கியுள்ளார், எஞ்சிய ரூ.120 கோடி ரொக்கமாக நிலத்தின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ப்ராஜக்ட்டில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக 48 பேருக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 ரொக்கப்பணம் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அப்போது எம்.பி.யாக இருந்த அதிமுகவைச் சோ்ந்த பாலகங்காவுக்கு ரூ.23 லட்சம், திமுகவைச் சோ்ந்த ஜவகருக்கு ரூ.33 லட்சம், எம்எல்ஏவாக இருந்த நீலகண்டனுக்கு ரூ.40 லட்சம், பெயர் குறிப்பிடப்படாத எம்பிக்கு ரூ.1.67 கோடி, திமுகவைச் சேர்ந்த பிகேஎஸ் என்பவருக்கு ரூ.10 லட்சம், அப்போது எம்பியாக இருந்த வெங்கடேசனுக்கு ரூ.20 லட்சம், அந்த காலகட்டத்தில் மாமன்ற உறுப்பினராக இருந்த சரோஜாவுக்கு 2 லட்சம் என பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல…இந்த ப்ராஜெக்ட்டுக்காக ஒவ்வொரு அரசுத் துறைக்கும் எவ்வளவு செலவிடப்பட்டது என்பது குறித்தும் கணக்கு உள்ளது. அதில் சி.எம்.டி.ஏ.வுக்கு மட்டும் 8 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற அரசுத் துறைகளுக்கு மொத்தம் 15 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு இருக்கிறது.

இந்த விவகாரம் நடந்தபோது சி.எம்.டி.ஏ.வுக்கு அமைச்சராக இருந்தவர் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அவரது பெயர் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தெரியவில்லை. அப்போது அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ் சை காப்பாற்றியிருக்கலாம். இப்போதைய திமுக ஆட்சியும் ஓபிஎஸ் சை காப்பாற்றுவதன் அவசியம் என்னவென்று தெரியவில்லை. மேலும் திமுக, அதிமுக புள்ளிகள், அதிகாரிகள் என அனைவரையும் உள்ளடக்கிய லஞ்சப் பட்டியலாக இருப்பதால் இதில் மேல் நடவடிக்கை என்பது சந்தேகம்தான்” என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IND vs ENG: மிரட்டல் பேட்டிங்.. இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால்

“தமிழக வெற்றி கழகம்” டைட்டிலே தோல்வி: அந்தணன் விமர்சனம்!

Who bribed whom and how much

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0