தினமும் ரூ. 2,200 சம்பாதிப்பவர்கள் ஏழைகளா என்று 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் ஒன்றிய அரசின் சட்டத்தை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதுதொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(நவம்பர் 12) அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.
அப்போது பேசிய அவர், “சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்த சமூகத்தவருக்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவுகளும் தடுக்காது என்பதுதான் அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட முதலாவது திருத்தம்.
இத்தகைய திருத்தம் தான் இந்தியா முழுவதும் மக்களது நல்வாழ்வுக்கு வழிகாட்டியது. சமூகநீதி எனப்படும் இட ஒதுக்கீடு என்பதே, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு தரவேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்ட வரையறை.
அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகோலை புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு. அதன்படி ஒரு சட்டத்தை 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்தார்கள்.
அந்த சட்டத்தைத்தான் தற்போது உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று சொல்லி வந்தவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.
பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது.
இந்திய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்துதான் பொருளாதார அளவுகோல் என்பது. முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு வழங்கும் எந்த திட்டத்தையும் தடுக்கமாட்டோம்.
ஏழை மக்களின் வறுமையை போக்க எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை ஆதரிக்க கடமைப்பட்டுள்ளோம்.
ஆனால் சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையை மடை மாற்றும் திருகு வேலையை இட ஒதுக்கீடு அளவுகோலாக மாற்றக்கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள்.
ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் கீழ் உள்ளவர்கள் இதன் பயனைப் பெறலாம் என்கிறார்கள். அப்படியானால் மாத வருமானம் ரூ. 66,000 பெறுபவர்கள் ஏழைகளா?.
ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ளவர்கள் வருமானவரி கட்டத் தேவையில்லை என்று சொல்லும் பாஜக அரசு, 8 லட்சம் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்று சொல்வது எப்படி.
தினமும் ரூ. 2,200 சம்பாதிப்பவர்களும், 5 ஏக்கருக்கு குறைவாக வைத்திருப்பவர்கள், 1000 சதுர அடி நிலத்திற்கு குறைவாக வைத்திருப்பவர்கள் ஏழைகளா. எனவே 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது உண்மையான ஏழைகளுக்கு எதிரானது.
எனவே இதனை எதிர்க்க வேண்டியதாக உள்ளது. இந்த சட்டத்திருத்தை ஏற்றுக்கொண்டால், காலப்போக்கில் சமூகநீதி தத்துவமே உருக்குலைந்துப் போகும். அதனால்தான் திமுக இதை கடுமையாக எதிர்க்கிறது.
தீர்ப்பு வேறாக இருந்தாலும் முழு அமர்வும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.
இந்தநிலையில் சமூகநீதியை காப்பாற்றுவதற்கு உடனடியாக சில செயல்களை செய்தாகவேண்டும்.
அந்த கடமை தமிழகத்திற்குதான் அதிகம் உள்ளது. அந்த அடிப்படையில்தான் அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துள்ளோம்” என்று ஸ்டாலின் பேசினார்.
கலை.ரா