குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜனவரி 26) அளித்த தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம்.
அதன்படி குடியரசு தினத்தையொட்டி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்குகொள்ள தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும் ஏற்கெனவே அறிவித்தபடி, இன்று மாலை நடைபெற்ற ஆளுநர் தேநீர் விருந்தில் தமிழக அரசு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் யாரும் பங்கேற்கவில்லை. அதே போன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அக்கட்சிகளும் விருந்தில் பங்கேற்கவில்லை.

அதே வேளையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பாஜக சார்பில் அண்ணாமலை, ஹெச்.ராஜா, சரத்குமார், தேமுதிக சார்பில் எல்.சுதீஷ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.