முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்டு 22) இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டிருக்கிறார்.
விமானம் ஏறுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், இந்தப் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து வருவேன் என்ற உறுதியான நம்பிக்கையோடு புறப்படுகிறேன். முதலீட்டு விவரங்களை அமெரிக்கா சென்று வந்த பிறகு உங்களிடம் சொல்கிறேன். மகிழ்ச்சியோடும் உறுதியோடும் செல்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு முதல்வர்களில் இதற்கு முன் எந்தெந்த முதல்வர்கள் அமெரிக்கா சென்று வந்துள்ளனர். 1968 ல் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது அமெரிக்கா சென்று வந்தார். மருத்துவ காரணங்களுக்காக அந்த பயணம் அமைந்தது. அமெரிக்கா சென்றுவந்த பின்னர், ’அமெரிக்கா தந்த பாடங்கள்’ என்ற பொருளில் செறிவான உரையாற்றினார் அண்ணா.
1971 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் அமெரிக்கா சென்று வந்தார். அங்கே கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கலைஞர், சிகாகோ பல்கலைக் கழகத்தில் உள்ள அரசியல் அரங்கத்தில் உரையாற்றினார்.
அதன் பின் சுமார் 43 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிகாகோவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்வது குறிப்பிடத் தக்கது.
1979 இல் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது ஐந்து வார பயணமாக அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அரசு முறைப் பயணத்தோடு அது, மருத்துவ ரீதியான பயணமாகவும் அது அமைந்தது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா அமெரிக்கா உள்ளிட்ட எந்த ஒரு வெளிநாட்டுக்கும் சென்றதில்லை. கடல் கடந்து செல்லக் கூடாது என்று ஜோதிடர்கள் சொன்னதாக ஒரு கருத்து அதிமுகவிலேயே இருந்தது.
2019 ஆகஸ்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு 10 நாள் பயணமாக சென்று வந்தார்.
இப்போது 2024 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் இரு வார பயணமாக அமெரிக்கா புறப்பட்டிருக்கிறார். இந்த பயணத்தின் போது முதல்வர் மருத்துவ ஆலோசனைகளும் பெற்று வருவார் என்று திமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள். 2030க்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதே என் இலக்கு என்று சொல்லியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமெரிக்கா பயணத்திற்கு பின் அமைச்சரவை மாற்றமா? ஸ்டாலின் ‘நச்’ பதில்!
மூன்று ஆண்டுகளில் 808 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… அமெரிக்கா செல்லும் முன் ஸ்டாலின் பேட்டி!