பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக இருந்து வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவுடன் மோடி பிரதமராக தொடர்கிறார். தற்போது, அவர் கிட்டத்தட்ட 75 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, அடுத்த மக்களவை தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. அடுத்த தேர்தலுக்குள் பாஜக அடுத்த தலைமையை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மோடிக்கு பிறகு, பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக யாரை தேர்வு செய்யலாம் என இந்தியா டுடே பத்திரிகை நாடு முழுவதும் சர்வே நடத்தியுள்ளது. அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மோடிக்கு பிறகு பாஜகவின் தலைவராக பொருத்தமானவர் என 25 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தென்னிந்திய மக்கள் அமித்ஷாவை அதிகம் விரும்புகின்றனர். தென்னிந்தியாவில் அமித்ஷாவுக்கு 31 சதவிகித மக்களின் ஆதரவு உள்ளது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இவருக்கு 19 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் யோகி ஆதித்யநாத்துக்கு பெருமளவில் வரவேற்பு இல்லை.சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
மூன்றாவது இடத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளார். இவருக்கு 13 சதவிகித மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் , ஷிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வாழை, கொட்டுக்காளி…இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் படங்கள்!